Infrastructure
பசுமை நெடுஞ்சாலைகள்: நீடித்த சாலை உள்கட்டமைப்பை நோக்கிய இந்தியாவின் பயணம்
கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில்
3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன
Posted On:
28 SEP 2026 6:35PM
இந்தியாவின் பசுமை நெடுஞ்சாலை அணுகுமுறை, மரக்கன்றுகள் நடுதல், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தாங்கும் வகையிலான வடிவமைப்பு, வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தும் கட்டுமான முறைகள் மூலம் சாலை உள்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1.32 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3.61 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மியாவாக்கி காடுகள், மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்கள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயிரி-தார் தொழில்நுட்பம் ஆகியவை பசுமை நெடுஞ்சாலைகள் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 61% அளவுக்கு விரிவடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிலோமீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், 2026 மார்ச் மாதத்தில் 1,46,572 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கட்டுமானப் பொருட்கள், எரிசக்தித் திறன் கொண்ட கட்டுமான நடைமுறைகள், செயற்கைக்கோள் அடிப்படையிலான பசுமைப் பரப்பு கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2015-ம் ஆண்டு பசுமை நெடுஞ்சாலைகள் கொள்கை, தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களை இடமாற்றம் செய்தல், அழகுபடுத்துதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. காற்று மாசு, தூசி பாதிப்பைக் குறைத்தல், மண் அரிப்பைத் தடுத்தல், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையும் இதன் நோக்கங்களாகும். 2026 ஜூலை வரை கடந்த 5 ஆண்டுகளில் 1.32 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3.61 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அடர்த்தியான காடுகளை உருவாக்க முடியும். தொட்டி நடவு முறை எனப்படும் இந்த அணுகுமுறையில் மரங்கள், புதர்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக நடப்பட்டு குறுகிய காலத்தில் காடு போன்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இம்முறையில் தாவரங்கள் 10 மடங்கு வேகமாக வளரக்கூடும். தேசிய நெடுஞ்சாலையோரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளின் வாழ்நாள் விகிதமும் கண்காணிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் – பசுமைப் பரப்பு குறியீடு (NH-GCI) மூலம் பசுமைப் பரப்பை அறிவியல் ரீதியாக மதிப்பிடும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் ஆண்டு அறிக்கை (2025-26), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய தொலையுணர்வு மையத்துடன் (NRSC) இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மாநிலங்களில் சுமார் 30,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் பரப்பு மதிப்பீடு, சாலையோர பசுமைப் பரப்பைக் கண்காணிப்பதற்கான நம்பகமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.

நீடித்த கட்டுமானத்தை நோக்கிய மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, விவசாயக் கழிவுகளிலிருந்து பைரோலிசிஸ் மூலம் உயிரி-தார் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) உருவாக்கியுள்ளது. அரிசி வைக்கோல் போன்ற அறுவடைக்குப் பிந்தைய கழிவுகள் பைரோலிசிஸ் முறையில் உயிரி எண்ணெயாக மாற்றப்பட்டு, வழக்கமான தாருடன் கலக்கப்பட்டு உயிரி-தார் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் தார் தேவையில் சுமார் 50% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் நிலையில், இந்தத் தொழில்நுட்பம் இறக்குமதிச் சார்பைக் குறைக்க உதவும்.

மேகாலயாவில் ஜோராபட்–ஷில்லாங் விரைவுச்சாலையில் 100 மீட்டர் நீளப் பகுதியில் உயிரி-தார் பயன்படுத்தி சோதனை முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், சாம்பல், மறுசுழற்சி செய்யப்பட்ட தார், கட்டுமானக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மாற்றுப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா விரைவுச்சாலையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கான வழித்தடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 18 லட்சம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலையோரங்களிலும் சாலைகளின் மத்தியப் பகுதிகளிலும் நடப்பட்டுள்ளன. இத்தகைய பசுமை நடவடிக்கைகள் மூலம் உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து நீடித்த நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160214&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 160297)
आगंतुक पटल : 85
Provide suggestions / comments