Social Welfare

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் மேம்பாட்டுத் திட்டம் (பிரதமரின் அஜய் திட்டம்)

18,093 ஆதர்ஷ் கிராமங்கள், ரூ.1,730 கோடி மானியம், 785 மாணவர் விடுதிகள்

Posted On: 28 SEP 2026 12:04PM

இந்தியாவின் மக்கள் தொகையில் 16.6% ஆக உள்ள ஷெட்யூல்டு வகுப்பினர், சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதிலும், சமத்துவ வாய்ப்புகளைப் பெறுவதில் வரலாற்று ரீதியாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஷெட்யூல்டு வகுப்பினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு, பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2021-22-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 100% மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

ஷெட்யூல்டு வகுப்பினரின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டை ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதமரின் ஆதர்ஷ் கிராமத் திட்டம், ஷெட்யூல்டு வகுப்பினரின் மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியம், பாபு ஜக்ஜீவன் ராம் மாணவர் விடுதித் திட்டம் ஆகிய மத்திய அரசின் 3 முந்தைய திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு, வருவாய்த் திட்டங்கள் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வறுமையைக் குறைத்தல், ஷெட்யூல்டு வகுப்பினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

வருவாய் உருவாக்கும் நடவடிக்கைகள் மூலம் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், ஷெட்யூல்டு வகுப்பினர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவுகிறது. நிதியுதவி பெறும் திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் குடும்பங்கள், தனிநபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, 40% அல்லது அதற்கு மேற்பட்ட ஷெட்யூல்டு வகுப்பினர் வசிக்கும், குறைந்தது 500 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் தகுதி பெறுகின்றன.

மக்கள்தொகையில் 50% - க்கும் அதிகமாக ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் கிராமங்களில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்றும் ஆதர்ஷ் கிராம் திட்டம், நாடு முழுவதும் 47,243 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் 47.79 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். 46,944 வளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 27,032 கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2026 செப்டம்பர் 8 நிலவரப்படி 18,093 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள், மாவட்டங்களுக்கான நிதியுதவி மூலம் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. 2021-22 முதல் 2025-26 நிதியாண்டு வரை மாநிலங்களுக்கான நேரடி மானியமாக ரூ.1,730 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.5 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்கள், குழுக்கள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஆதரவைப் பெற்றுள்ளனர். ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் மாணவர் விடுதிகள் கட்டுதல், பழுதுபார்த்தல் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 செப்டம்பர் வரை 785 மாணவர் விடுதிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்ய அண்மையில் பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்துக்கான பிஎம் அஜய் கைப்பேசி செயலி, பிஎம் அஜய் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளன. காகித அடிப்படையிலான நடைமுறையிலிருந்து நிகழ்நேர அடிப்படையிலான முழுமையான மின்னணு நடைமுறைக்கு மாறுவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, திறன் ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன.

வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன், நிலையான வாழ்வாதாரம், தரமான கல்வி, மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினரின் சமூக, பொருளாதார, கல்வியில் அதிகாரமளித்தலுக்கும் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகரித்த தொழில்நுட்பப் பயன்பாடு, வலுவான கண்காணிப்பு, கடைநிலை பயனாளிகளுக்கான சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம் இத்திட்டத்தின் செயல்திறன், தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160188&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD

(Explainer ID: 160244) आगंतुक पटल : 8
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada , Malayalam