Social Welfare

அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்: 48 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டைகளைப் பெற்றுள்ளனர்

Posted On: 22 SEP 2026 2:16PM

பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் முக்கியத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் விளங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 33 சதவீதம் பேர், அதாவது 48.51 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்றுள்ளனர். 2026 ஆகஸ்ட் 31 நிலவரப்படி, 38,000-க்கும் அதிகமான அரசு, தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 13.25 கோடி மருத்துவமனை சிகிச்சைகளுக்கு ரூ.2.03 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களது சொந்தப் பணத்தில் செலுத்த வேண்டிய மருத்துவச் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.

அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் குறைந்த செலவில் கிடைப்பதை உறுதி செய்வதே உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய நோக்கமாகும். இதை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு 2018 செப்டம்பர் 23-ம் தேதி ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை தொடங்கியது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளுக்கான நிதிப் பாதுகாப்பை வழங்கும் இத்திட்டம், உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்பு இயக்கம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. மருத்துவச் செலவுகள் என்ற சுமையிலிருந்து குடும்பங்களைப் பாதுகாப்பதில் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. 27 பிரிவுகளில் 1,961 வகையான சிகிச்சைகளுக்கு கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

2024 மார்ச் மாதத்தில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் அடங்கிய சுமார் 37 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. 2026 செப்டம்பர் 21 நிலவரப்படி, இவர்களுக்காக 44.81 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2024 செப்டம்பர் 11-ம் தேதி, 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதன் மூலம் சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைகின்றனர். இதுவரை 1.36 கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமூகப் பொருளாதார சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2011-ன் அடிப்படையில், வறுமை, சமூகத்தில் பின்தங்கிய நிலை, தொழில் சார்ந்த அளவுகோல்கள் மூலம் பயனாளிக் குடும்பங்கள் அடையாளம் காணப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் ஒரே அறை கொண்ட, மண் சுவர், கூரை வீடுகள், 16 முதல் 59 வயதுக்குள் வயது வந்தோர் இல்லாத குடும்பங்கள், வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர் கொண்ட குடும்பங்கள், வயது வந்த நல்ல உடல்திறன் கொண்ட உறுப்பினர் இல்லாத குடும்பங்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் குடும்பங்கள், நிலமற்ற குடும்பங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி படைத்தவையாகும். நகர்ப்புறங்களில் குப்பை சேகரிப்போர், யாசகர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், செருப்புத் தைப்போர், கட்டுமானத் தொழிலாளர்கள், பிளம்பர்கள், கொத்தனார்கள், ஓவியக்கலைஞர்கள், வெல்டர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கைவினைக்கலைஞர்கள், தையல்காரர்கள், ஓட்டுநர்கள், கடைகளில் வேலைசெய்வோர், எலக்ட்ரீசியன், மெக்கானிக்குகள், சலவைத் தொழிலாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் பயனாளிகளாக உள்ளனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கையர், குப்பை சேகரிப்போர், அடையாளம் காணப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், பழங்குடியினர் குழுக்கள் ஆகியோருக்கும் குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் இத்திட்டத்தின் பயன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது பிர்மதி என்ற பெண் தொடை எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டபோது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.44,140 மதிப்பிலான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெற்றார். பொருளாதாரத்திலும், சமூக ரீதியாகவும் நலிவடைந்த மக்கள் சரியான நேரத்தில் தரமான மருத்துவ சேவையைப் பெற இத்திட்டம் உதவுகிறது.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அடிப்படை சுகாதார சேவைக்கான முக்கியத் தூண்களாக செயல்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, கூடுதல் மனிதவளம், அத்தியாவசிய மருந்துகள், பரிசோதனை வசதிகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஆகியவற்றுடன் இம்மையங்கள் செயல்படுகின்றன. தாய், சேய் நல சேவைகளோடு, தொற்றா நோய்களைக் கண்டறிதல், வாய், கண், காது-மூக்கு-தொண்டை பராமரிப்பு, மனநல மருத்துவ ஆதரவு, ஆரம்பகட்ட அவசர சிகிச்சை, அத்தியாவசிய மருந்துகள், பரிசோதனைகள் ஆகியவை இம்மையங்களில் வழங்கப்படுகின்றன. ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான ஆயுஷ் ஆரோக்கிய மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2026 செப்டம்பர் 17 நிலவரப்படி, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களிலும், பிற நடைமுறைகள் மூலமாகவும் 50 கோடிக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், ஒருங்கிணைந்த தேசிய டிஜிட்டல் சுகாதாரச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள எண் வழங்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 17 நிலவரப்படி 97.61 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் சுகாதார எண்கள் செயல்பாட்டில் உள்ளன. 119.95 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பதிவுகள் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. 5.78 லட்சத்துக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட சுகாதார நிறுவனங்களும், 11 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரத் துறை நிபுணர்களும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்பு இயக்கம் 2021 அக்டோபர் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. 2021-2026 காலகட்டத்தில் ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நோய் கண்காணிப்பை மேம்படுத்துதல், சுகாதாரம் சார்ந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 23,224 ஊரக சுகாதார மையங்கள், 13,736 நகர்ப்புற சுகாதார மையங்கள், 3,389 வட்டார பொது சுகாதாரப் பிரிவுகள், 744 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் 631 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நான்கு முக்கியத் தூண்களும் இணைந்து, ஆரம்ப சுகாதார சேவையில் தொடங்கி, டிஜிட்டல் சுகாதாரம், மருத்துவமனை சிகிச்சை, வலுவான சுகாதாரக் கட்டமைப்பு வரை முழுமையான சுகாதாரச் சேவைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் தகுதியான மக்களுக்குத் தரமான, குறைந்த செலவிலான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்து, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்ற இலக்கை நோக்கி இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160081&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD

(Explainer ID: 160236) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada , Malayalam