• Sitemap
  • Advance Search
Economy

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு: இந்தியாவில் தொழில் அனுமதி நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, எளிமை

தமிழ்நாட்டில் 223 ஒருங்கிணைந்த தொழில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 22 SEP 2026 9:37PM

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை முதலீட்டாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு விண்ணப்பிக்க உதவும் டிஜிட்டல் தளமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு (National Single Window System - NSWS) செயல்பட்டு வருகிறது. தொழில் தேவைகளுக்கு ஏற்ப பெற வேண்டிய அனுமதிகளை அடையாளம் காணுதல், விண்ணப்பித்தல், அவற்றின் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றை ஒரே தளத்தின் மூலம் மேற்கொள்ள இந்த அமைப்பு உதவுகிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் இத்தளம், அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி, தகவல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய நிலையை குறைக்கிறது. தகவல், ஆவணங்களை ஒருமுறை சமர்ப்பித்தல், இணையவழி செயலாக்கம், நிகழ்நேரக் கண்காணிப்பு ஆகிய வசதிகள் மூலம் அனுமதி வழங்கும் காலத்தைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது.

முதலீடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திறன்மிக்க ஒழுங்குமுறைச் சூழல் அவசியமாகும். இதற்காக மத்திய அரசு வெளிப்படையான, முதலீட்டாளர்களுக்கு உகந்த ஒழுங்குமுறைச் சூழலை உருவாக்க பல்வேறு டிஜிட்டல் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கப்பட்ட இத்தளம், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், ஒழுங்குமுறை அமைப்புகள் வழங்கும் அனுமதிகளை ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தில் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தகவல், ஆவணங்களை ஒருமுறை சமர்ப்பிக்கும் வசதியை வழங்குவதன் மூலம் அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்குகிறது. அனுமதி பெறுவதற்கான கால அளவு குறைக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணையவழி தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும் முடிவதால் அனுமதி நடைமுறை வெளிப்படையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாறுகிறது. பல்வேறு துறைகளுக்கு ஒரே தகவலை மீண்டும் மீண்டும் வழங்க வேண்டிய நிலையைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் இந்த டிஜிட்டல் அமைப்பு உருவாக்குகிறது. இதன் மூலம் தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு, முதலீட்டை ஊக்குவிக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.

இத்தளத்தின் முக்கிய வசதிகளில் ஒன்றாக ‘உங்களுக்குத் தேவையான அனுமதிகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற பகுதி உள்ளது. ஒரு தொழில் நிறுவனம் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் அதற்குத் தேவையான அனுமதிகளை இந்தப் பகுதி அடையாளம் காட்டுகிறது. மத்திய அரசின் 32 அமைச்சகங்கள், துறைகள், 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான அனுமதி விண்ணப்பங்கள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களது தொழிலுக்குத் தேவையான ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதி வழங்கும் வழிகாட்டுதல் ஆலோசனை சார்ந்தது என்பதால், அது சட்ட ஆலோசனையாகக் கருதப்படாது.

ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் பொதுப் பதிவு படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் தகவல்களைப் பதிவு செய்து, பல்வேறு விண்ணப்பங்களில் அந்தத் தகவல்களை மீண்டும் பயன்படுத்த இந்த வசதி உதவுகிறது. மாநில அளவிலான ஒற்றைச் சாளர அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கான மாநிலப் பதிவு படிவமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், அவற்றின் நிலையை கண்காணித்தல், துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பதாரர் முகப்பும் இத்தளத்தில் உள்ளது. பொருந்தக்கூடிய அனுமதிகளைப் புதுப்பிக்கவும், விண்ணப்பத்தின் நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் முடியும். மையப்படுத்தப்பட்ட ஆவணக் களஞ்சியம் மூலம் ஆவணங்களை ஒருமுறை பதிவேற்றி பல்வேறு அனுமதிகளுக்குப் பயன்படுத்தலாம். மின்னணுத் தகவல் தொடர்பு பகுதி மூலம் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு இடையே கேள்விகள், விளக்கங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் முதலீட்டாளர் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் மூலம் பதிவு செய்து, தமது தொழிலுக்குத் தேவையான அனுமதிகளை அடையாளம் காணலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறை, மாநில அரசுக்கு அது இணையவழியில் அனுப்பப்படுகிறது. இத்தளத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம் கிடையாது. எனினும், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பு நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ கட்டணங்களை விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் முகப்பின் மூலம் விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்து, மின்னணுத் தகவல் தொடர்பு பகுதியில் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு டிஜிட்டல் ஒருங்கிணைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) ஒற்றைத் தொழில் அடையாளமாகப் பயன்படுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் பயனர் அங்கீகாரத்துக்கு டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ், டிஜிலாக்கர் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

2025 நவம்பர் மாதம் தொழில் முதலீட்டு நிறுவனப் பதிவுக்கான பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டு நிபுணர்களை அழைப்பதற்கான ஆதரவு கடிதங்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கான டிஜிட்டல் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

2026 செப்டம்பர் 21 நிலவரப்படி, இத்தளத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3.06 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆண்டுதோறும் 2.26 லட்சத்துக்கும் அதிகமான அனுமதிகளின் செயலாக்கத்துக்கு இத்தளம் உதவுகிறது. தனிநபர் உரிமையாளர்கள், நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 5.69 லட்சத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் 327-க்கும் அதிகமான அனுமதிகளும், மாநில அரசுகளின் 3,452 அனுமதிகளும் தற்போது கிடைக்கின்றன. நிறுவனப் பதிவு, தொழில்துறை உரிமங்கள், புத்தொழில் நிறுவன அங்கீகாரம், அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு உள்ளிட்ட முக்கிய ஒழுங்குமுறை அனுமதிகளையும் இத்தளம் வழங்குகிறது. இதுவரை வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த அனுமதிகளின் எண்ணிக்கையில் அசாம் (335), கர்நாடகா (327), தமிழ்நாடு (223) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், எத்தனால் கொள்கை, வாகனங்கள் அகற்றும் கொள்கை, இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் கீழ் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு பொதுவான நுழைவுத் தளமாக செயல்படுகிறது.

மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒருங்கிணைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதன் மூலம் வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த ஒழுங்குமுறைச் சூழல் மேலும் வலுப்பெறும். டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு, நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, இந்தியாவில் தொழில் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கான ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்கும் முக்கியத் தளமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தொடர்ந்து உருவெடுத்து வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160099&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD

(Explainer ID: 160113) आगंतुक पटल : 17
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada