Culture & Tourism
இந்தியா சினி ஹப்: திரைப்படப் படப்பிடிப்பு அனுமதிக்கான விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் ஒற்றைச் சாளர டிஜிட்டல் தளம்
Posted On:
22 SEP 2026 1:54PM
இந்திய சினிமா துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், திரைப்படப் படப்பிடிப்பு அனுமதி நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்தியா சினி ஹப் (ICH) செயல்பட்டு வருகிறது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் இந்த ஒற்றைச் சாளர டிஜிட்டல் தளம், உள்நாட்டு, சர்வதேச திரைப்படப் படைப்பாளிகளுக்கான படப்பிடிப்பு அனுமதிகள், விசா நடைமுறைகள், சேவை வழங்குநர்களை அணுகுதல் ஆகியவற்றை எளிதாக்குகிறது. பல்வேறு மாநிலங்களின் நிர்வாக அனுமதி, காவல்துறை ஒப்புதல், இணைத் தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு நிர்வாக நடைமுறைகளால் ஏற்படும் சிரமங்களை இது குறைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திரைப்படப் படப்பிடிப்பை விரைவாக மேற்கொள்ள முடிவதுடன், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்குத் துறைக்கும் இது ஆதரவளிக்கிறது.
இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பை எளிதாக்குதல்
செழுமையான கலை அம்சங்கள், துடிப்பான திரைத்துறை பாரம்பரியம் கொண்ட இந்தியா, திரைப்படம், தொலைக்காட்சி, இணையவழி உள்ளடக்க உருவாக்கம் ஆகிய துறைகளில் உலகளாவிய மையமாக படிப்படியாக உருவெடுத்து வருகிறது. 2024 நிதியாண்டில் இந்தத் துறை 13.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 18 சதவீத வளர்ச்சியாகும். வரும் ஆண்டுகளில் 6 முதல் 10 சதவீதம் வரை இந்த வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2029-ம் நிதியாண்டில் இத்துறையின் ஒருங்கிணைந்த வருவாய் சுமார் 17.5 முதல் 19.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் திரைப்படப் படப்பிடிப்பை மேலும் ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சினி ஹப் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திரைப்படங்கள், நேரடி நிகழ்ச்சிகளுக்கு படப்பிடிப்புக்கான அனுமதிகளை எளிதாக்குவது இதில் முக்கிய நடவடிக்கையாகும்.
இந்தியா சினி ஹப் என்பது நாடு முழுவதும் திரைப்படப் படப்பிடிப்பு அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்க உருவாக்கப்பட்ட ஒற்றைச் சாளர டிஜிட்டல் தளமாகும். ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிமைப்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை இது எளிதாக்குகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், அவற்றின் பல்வேறு படப்பிடிப்பு தளங்கள், உள்கட்டமைப்பு, வளங்கள் ஆகியவற்றை வெளிக்கொணரவும் இந்தத் தளம் உதவுகிறது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

திரைப்படப் படப்பிடிப்பு அனுமதிகளுக்கு மட்டுமல்லாமல், நேரடி நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளையும் இந்தத் தளம் வழங்குகிறது. நேரடி நிகழ்ச்சிகள் மேம்பாட்டு அமைப்பின் முக்கிய டிஜிட்டல் உள்கட்டமைப்பாக இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இடங்களை வரைபடமாக்கும் அணுகுமுறையின் மூலம், நிகழ்ச்சி தொடர்பான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்திய, சர்வதேச திரைத்துறைப் படைப்பாளிகள் படப்பிடிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த இணையதளமாக இந்தியா சினி ஹப் விளங்குகிறது. தயாரிப்புத் திட்டங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதுடன், அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களையும் இந்தத் தளம் வழங்குகிறது.

திரைப்பட விசா, விதிமுறைகள், விலங்குகள் இடம்பெறும் படப்பிடிப்பு, வனப்பகுதிகளில் படப்பிடிப்பு, நினைவுச் சின்னங்களில் படப்பிடிப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. GIS தொழில்நுட்பத்தின் மூலம் படப்பிடிப்புத் தலங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தியாவின் முக்கிய திரைப்பட மையங்கள் குறித்த தகவல்களையும் படைப்பாளிகள் பெற முடியும்.
இந்தியாவின் திரைப்பட நகரங்கள்
இந்தியாவில் மும்பை, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி, குவஹாத்தி, புவனேஸ்வர், தில்லி உள்ளிட்ட நகரங்களில் முக்கிய திரைப்படத் தயாரிப்பு மையங்கள் உள்ளன. இத்துறையில் 1.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். மகாராஷ்டிராவின் மும்பை திரைப்பட நகரம், தெலங்கானாவின் ஹைதராபாத் ராமோஜி திரைப்பட நகரம், உத்தரப்பிரதேசத்தின் நொய்டா திரைப்பட நகரம் ஆகியவை முக்கிய திரைப்பட நகரங்களாக விளங்குகின்றன.
மும்பை திரைப்பட நகரம் கோரேகானில் 520 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 42 வெளிப்புறப் படப்பிடிப்பு இடங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், இயற்கைக் காடுகள், புதர்ப்பகுதிகள், நீர்நிலைகள் என பல்வேறு இயற்கை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1977-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசால் நிறுவப்பட்ட இந்த திரைப்பட நகரம், இந்திய திரைத்துறையின் முன்னோடியான தாதாசாகேப் பால்கே நினைவாக 2001-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே சித்ரநகரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரம் 1996-ம் ஆண்டு ராமோஜி குழுமத்தால் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாக கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இங்கு, 500-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புத் தலங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 40 இந்திய திரைப்படங்களையும் 20 சர்வதேச திரைப்படங்களையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் உள்ளன. சுமார் 6,000 பேர் இங்கு பணியாற்றுகின்றனர்.
நொய்டா திரைப்பட நகரில் திரைப்பட ஸ்டுடியோக்கள், ஊடக நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள், பதிப்பக நிறுவனங்கள், வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இங்கு, 16 ஸ்டுடியோக்கள் உள்ளன. சுமார் 17,000 ஊடகத் துறை வல்லுநர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். தொடர்புடைய, துணைத் துறைகளில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இதன் பொருளாதார தாக்கம் விரிவடைந்துள்ளது.
டிஜிட்டல் உள்ளடக்கம், ஊடகத் துறை ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய ஊடகப் பிரிவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளன. 2014-ம் ஆண்டு 25.15 கோடியாக இருந்த இணையப் பயனாளர் எண்ணிக்கை 2026 மார்ச் இறுதியில் 109.2 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இணையக் கட்டணம் 2014-ம் ஆண்டு ஒரு ஜிபிக்கு ரூ.308 ஆக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு ரூ.7.51 ஆக குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது.

உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறைகளில் ஒன்றான இந்திய திரைப்படத் துறை, திரைத்துறைச் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பரவலாக அறியப்படாத இடங்களை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், திரைப்படப் படப்பிடிப்பு இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுகிறது. இந்தியாவின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்புக்கு ஆதரவாக, திரைப்படத் தயாரிப்புடன் தொடர்புடைய ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்கும் மையப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளரத் தளமாக இந்தியா சினி ஹப் செயல்படுகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு அமைப்புகளின் அனுமதிகள், படப்பிடிப்பு இடங்களுக்கான ஒப்புதல்கள், திரைப்பட விசா ஆகிய அனைத்து நடைமுறைகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தியா சினி ஹப், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள படப்பிடிப்புத் தலங்களை உலகளாவிய படைப்பாளிகளிடம் கொண்டு சேர்க்கும் தளமாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் திரைப்படத் தயாரிப்பு, சுற்றுலா, உள்ளூர் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவை உலகின் முக்கிய திரைப்படப் படப்பிடிப்பு மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதற்கான சூழலை உருவாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160076&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 160112)
आगंतुक पटल : 35
Provide suggestions / comments