• Sitemap
Technology

செமிகான் இந்தியா 2026: இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் எதிர்காலத்தைக் கட்டமைத்தல்

ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பீட்டில் செமிகான் 2.0 திட்டம்

Posted On: 17 SEP 2026 12:17PM

செமிகான் 1.0 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரூ.1,27,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் செமிகான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 15 ஜூலை 2026 அன்று ஒப்புதல் அளித்தது. செமிகான் 1.0 திட்டம் இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்திச் சூழலுக்கான அடித்தளத்தை அமைத்த நிலையில், செமிகான் 2.0 திட்டம் ஆராய்ச்சி, மேம்பாடு, சிப் வடிவமைப்பு, இயந்திரங்கள், மூலப்பொருட்கள், புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைத்தல், திறன் மேம்பாடு, தொழில்துறையை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய 6 உத்திசார் தூண்கள் மூலம் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் இந்தியாவை நம்பகமான உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக நிலைநிறுத்துவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படை கட்டமைப்பாக செமிகண்டக்டர்கள் திகழ்கின்றன. செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, மின்சாரப் போக்குவரத்து, பாதுகாப்புத் துறை, மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றுக்கு இவை முக்கிய ஆதாரமாக உள்ளன. ஐஓடி, 5ஜி / 6ஜி, தரவு மையங்கள், தானியங்கி வாகனங்கள் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி சிப்-க்கான தேவையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலகளாவிய செமிகண்டக்டர் சந்தை 2014 முதல் 2024 வரை ஆண்டுக்கு சராசரியாக 6.5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் விரிவடைந்துள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இது 8.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய விநியோகச் சங்கிலித் தடைகள் உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் உள்ள பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பல்வேறு முன்னணி நாடுகள் தங்களின் தொழில்நுட்ப, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க உள்நாட்டு செமிகண்டக்டர் திறன்களை வலுப்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2030 நிதியாண்டில் இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை 110 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும், 2035 நிதியாண்டில் 200 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவைக் கடந்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. 2017 முதல் 2025 நிதியாண்டு வரையிலான காலத்தில் இந்தியா சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தக் காலத்தில் இறக்குமதி ஆண்டுக்கு 23 சதவீத வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால் 2035-ம் ஆண்டில் ஆண்டு இறக்குமதி 240 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டக்கூடும்.

இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக செமிகான் இந்தியா 2026 மாநாடு திகழ்கிறது. “சிலிக்கான் முதல் அமைப்புகள் வரை: செமிகண்டக்டர் சூழலைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17 செப்டம்பர் 2026) புதுதில்லி யசோபூமியில் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 17 முதல் 19 வரை நடைபெறும் இம்மாநாட்டில் உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதற்கான தளமாக இது அமைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உத்திசார் வளமாக செமிகண்டக்டர்கள் உருவெடுத்துள்ளன. தைவான், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. உலக சிப் உற்பத்தியில் தைவான் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. மேம்பட்ட சிப்களில் அதன் பங்கு கிட்டத்தட்ட 90 சதவீதமாக உள்ளது. இது, பாதுகாப்பான, பன்முகப்படுத்தப்பட்ட, நெகிழ்வான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு செமிகண்டக்டர் திறன் என்பது தொழில்துறை வாய்ப்பாக மட்டும் இல்லாமல், இறக்குமதிச் சார்பைக் குறைத்தல், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அதிக மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் முக்கியமானதாகும்.

இந்தியாவின் உத்திசார் திட்டங்களிலும் செமிகண்டக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகம் விண்வெளியின் தீவிர சூழல்களைத் தாங்கும் வகையில் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளுக்கான தரமான சிப்களை உருவாக்குகிறது. சந்திரயான்-3 லேண்டரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கேமரா சிப் பயன்படுத்தப்பட்டது. செமிகண்டக்டர் ஆய்வகத்தின் விக்ரம் செயலி செயற்கைக்கோள் ஏவுவாகனங்கள், ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டத்தில் செமிகண்டக்டர் ஆய்வகம் உருவாக்கிய கதிர்வீச்சைத் தாங்கும் ADC சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் உத்திசார் திறன்களை உருவாக்குவதிலிருந்து விரிவான உள்நாட்டுச் சூழலை உருவாக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. செமிகான் 1.0 திட்டத்திற்கு 2021 டிசம்பரில் ரூ.76,000 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செமிகண்டக்டர் ஆலைகள், டிஸ்ப்ளே ஆலைகள், காம்பவுண்ட் செமிகண்டக்டர்கள், சிலிக்கான் போட்டானிக்ஸ், சென்சார்கள், ATMP/OSAT வசதிகள் அமைப்பதற்கான திட்டங்கள் இதில் இடம்பெற்றன. வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் மூலம் சிப் வடிவமைப்புத் திறனும் வலுப்படுத்தப்பட்டது. இதன் கீழ் 12 செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலிக்கான் ஃபேப், ஒரு சிலிக்கான் கார்பைடு ஃபேப், ஒரு கேலியம் நைட்ரைடு மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே ஃபேப், 9 ATMP/OSAT அலகுகள் அடங்கும். குஜராத், அசாம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவை அமைந்துள்ளன. 5 அலகுகள் வர்த்தகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

மேலும், சிப் வடிவமைப்புக்கான 24 திட்டங்களுக்கு சுமார் ரூ.900 கோடி மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 500 நிறுவனங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்களுக்கு மேம்பட்ட சிப் வடிவமைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 400 கல்வி நிறுவனங்கள், 100 புத்தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 300-க்கும் அதிகமான சிப் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா செமிகண்டக்டர் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது. 2026 ஜனவரி 12 முதல் 13 வரை ஜெர்மனி பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது இந்தியா-ஜெர்மனி செமிகண்டக்டர் சூழல் கூட்டாண்மைக்கான பிரகடனம் கையெழுத்தானது. 2026 பிப்ரவரியில் நடைபெற்ற இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பிலும் இந்தியா இணைந்தது.

செமிகான் 2.0 திட்டத்திற்கு 2026 ஜூலையில் ரூ.1,27,500 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செமிகான் 1.0 மூலம் உருவாக்கப்பட்ட திறன்களை மேம்படுத்தி, உலகளவில் போட்டித்திறன் கொண்ட செமிகண்டக்டர் சூழலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். செமிகான் 1.0 ஃபேப்கள், ATMP/OSAT ஆலைகளில் கவனம் செலுத்திய நிலையில், செமிகான் 2.0 திட்டம், இயந்திரங்கள், மூலப்பொருட்கள், வடிவமைப்பு, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, மேம்பட்ட பேக்கேஜிங் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் மூலப்பொருட்கள் முதல் தயாரான சிப்கள் வரையிலான முழுமையான மதிப்புச் சங்கிலியை நாட்டிற்குள் உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

மின்னணுப் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்த தேசிய மின்னணுவியல் கொள்கை 2019, SPECS, EMC 2.0, பெரிய அளவிலான மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கான ‘உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்’, மொபைல் போன் உற்பத்தித் திட்டம் 2026 ஆகிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் உள்நாட்டு செமிகண்டக்டர் புத்தாக்கம் வலுப்படுத்தப்படுகிறது. மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கான 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை உலகளாவிய முதலீடு, தொழில்நுட்ப கூட்டாண்மைகளை எளிதாக்குகிறது.

2021-ம் ஆண்டில் இந்தியாவில் வணிக ரீதியான சிப் உற்பத்தி ஆலை இல்லாத நிலையில், 2026-ல் 12 அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 அலகுகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிப் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செமிகான் 2.0 புதிய தொடக்கமாக அல்லாமல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சூழலை மேலும் முழுமைப்படுத்தும் அடுத்த கட்டமாக செயல்படுகிறது. இயந்திரங்கள், மூலப்பொருட்கள், வடிவமைப்பு, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவை ஃபேப்கள், பேக்கேஜிங் துறைகளுடன் இணைந்து முழுமையான செமிகண்டக்டர் சூழலை உருவாக்குகின்றன. சிப் உற்பத்தி உலகின் மிகவும் சிக்கலான தொழில்துறைகளில் ஒன்றாக இருப்பதால் பொறுமை, துல்லியம், நீண்டகால கொள்கை ஆதரவு ஆகியவை அவசியமாகின்றன. உள்நாட்டிலேயே அதிக அளவில் சாதனங்களை உற்பத்தி செய்வது, சர்வதேச விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, இளம் பொறியாளர்களுக்கு அதிக மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. சிறிய சிப் பெரிய எதிர்காலத்திற்கான வலுவான நம்பிக்கையைத் தாங்கி நிற்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160020&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD

(Explainer ID: 160078) आगंतुक पटल : 39
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Bengali , Telugu , Kannada , Malayalam