Economy
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் 30 லட்சம் பயனாளிகள் பதிவு
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 5316 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
16 SEP 2026 11:14AM
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளை நெருங்கும் வேளையில், 30 லட்சம் பயனாளிகளைப் பதிவு என்ற இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. திறன் பயிற்சி, உபகரணங்கள், கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்கத்தொகை, சந்தைத் தொடர்புகள் ஆகிய பல்வேறு ஆதரவுகளை இத்திட்டம் வழங்கி வருகிறது. பயனாளிகள் ‘உத்யம் அசிஸ்ட்’ தளத்தில் தொழில்முனைவோராகப் பதிவு செய்யப்பட்டு, அரசு மின்னணு சந்தை, மின்னணு வர்த்தக தளங்கள், வர்த்தகக் கண்காட்சிகள், பொருட்காட்சிகள் உள்ளிட்ட விரிவான சந்தைக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படுகின்றனர். பாரம்பரிய கைவினைக்கலைஞர்களுக்கு மரியாதை, திறன், வளம் ஆகியவற்றை வழங்கும் வகையில் ‘மரியாதை, திறன் மற்றும் செழிப்பு’ ஆகிய 3 தூண்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.

இந்தியாவின் பாரம்பரிய கைவினைக்கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் உள்ளூர் பொருளாதாரத்திலும் நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களில் பலர் கைவினைத்திறன், பாரம்பரிய அறிவு, சிறு தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும் நோக்கில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17 செப்டம்பர் 2023 அன்று தொடங்கப்பட்டது. பாரம்பரிய கைவினைக்கலைஞர்களுக்கு மரியாதை, திறன், வளம் ஆகியவற்றை உறுதி செய்யும் 3 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத் திறன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு 2023-24 முதல் 2027-28 நிதியாண்டு வரை ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 பாரம்பரியத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தையும் சந்தை இணைப்புகளையும் மேம்படுத்துவதுடன், உள்நாட்டு, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் அவர்களை இணைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 17 செப்டம்பர் 2026 அன்று இத்திட்டம் 3 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், 30 லட்சம் பயனாளிகள் பதிவு என்ற இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது.

பதிவு, சரிபார்ப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு பயனாளிகளுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் நவீன கருவிகள், சிறந்த நடைமுறைகள், புதுமையான வடிவமைப்புகள் சார்ந்த அறிவும், ஆதரவும் கிடைக்கப்பெறுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், சந்தைப்படுத்தல், தொழில்முனைவு தொடர்பான அறிவும் பயிற்சியில் வழங்கப்படுகிறது. அடிப்படைப் பயிற்சி 5 முதல் 7 நாட்கள் வரை நடைபெறுகிறது. மேம்பட்ட பயிற்சி 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு நாளொன்றுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு ரூ.15,000 வரையிலான நவீன உபகரணத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.
முத்ரா, பிரதமரின் ஸ்வநிதி திட்டக் கடன்களை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியவர்கள் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.தச்சர், படகு தயாரிப்பாளர், கவசம் தயாரிப்பாளர், உலோகக் கைவினைக்கலைஞர்கள், சுத்தியல், பிற கருவிகள் தயாரிப்பாளர், பூட்டு தயாரிப்பாளர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தயாரிப்பாளர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பாளர், தென்னை நார் நெசவாளர், பொம்மை, விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பாளர், முடிதிருத்துநர், பூமாலை தயாரிப்பாளர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பாளர் ஆகிய 18 பாரம்பரியத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் இணைய, பொது சேவை மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். பதிவு, சரிபார்ப்பு 3 அடுக்குகளில் நடைபெறுகிறது. கிராமப் பஞ்சாயத்து அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அளவில் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட செயலாக்கக் குழு ஆய்வு செய்து பரிந்துரை வழங்குகிறது. பின்னர் தேர்வுக் குழு ஒப்புதல் அளிக்கிறது. விஸ்வகர்மா பயனாளிகள் உத்யம் அசிஸ்ட் தளத்தில் தொழில்முனைவோராகப் பதிவு செய்யப்பட்டு முறையான குறு, சிறு, நடுத்தரத் தொழில் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றனர். இதன் மூலம் அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
15 செப்டம்பர் 2026 நிலவரப்படி, 24.37 லட்சத்துக்கும் அதிகமான கைவினைக்கலைஞர்கள் அடிப்படைத் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். 18.16 லட்சத்துக்கும் அதிகமானோர் உபகரணத் தொகுப்புகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.5,316 கோடி மதிப்பிலான 6.19 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களை வாங்குதல், கருவிகளை மேம்படுத்துதல், தொழிலை விரிவுபடுத்துதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தக் கடன் ஆதரவு உதவுகிறது. 8.11 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் டிஜிட்டல் ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர். இதற்காக ரூ.42 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12,000-க்கும் அதிகமான கைவினைக்கலைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி பிராண்டிங், தயாரிப்பு வடிவமைப்பு, பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் சுன்ஹெபோட்டோவைச் சேர்ந்த கூடை தயாரிப்பாளரான திருமதி வில்லி, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்று ரூ.1 லட்சம் பிணையில்லா கடன் பெற்றார். மூலப்பொருட்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்த இந்தக் கடனைப் பயன்படுத்தியதன் மூலம் அவரது மாத வருமானம் சுமார் 40% அதிகரித்து, ரூ.15,000-ஐ நெருங்கியது. உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த மரச்சிற்பக் கலைஞரான திரு தர்ஷன் லால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி, உபகரணங்கள், குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றைப் பெற்ற அவர், 2026-ல் தில்லியில் நடைபெற்ற பிரதமரின் விஸ்வகர்மா ஹாட்டில் (சந்தையில்) முதல் முறையாக பங்கேற்றார். இதன் மூலம் தனது தயாரிப்புகளை பரந்த அளவில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரியத் தொழில்களை அவற்றின் உள்ளூர், பரமபரை வழியாகத் தொடர்ந்து வரும் அறிவைப் பாதுகாத்தபடி தேசிய அளவிலான ஆதரவு கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது. பல பாரம்பரியத் தொழில்களுடன் தொடர்புடைய கைவினைக்கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்களின் பணியின் பல்வேறு நிலைகளில் ஆதரவு வழங்குவதன் மூலம், வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப பாரம்பரிய அறிவு, திறன்கள் தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதற்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159998&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 160075)
आगंतुक पटल : 31
Provide suggestions / comments