Social Welfare

காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கிய பயணம்

Posted On: 24 MAR 2026 6:43PM

காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் சர்வதேச காசநோய் அறிக்கைப்படி, நாட்டில் ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 21 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் காசநோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 28 சதவீதம் வரை குறைந்துள்ளது. உலக அளவில் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் இந்த பாதிப்பு குறைப்பு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு, விரிவுபடுத்தப்பட்ட மருத்துவச் சேவைகள், சமூகப் பங்களிப்பு ஆகியவை இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.  தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு பொது சுகாதார மையங்கள் மூலம் இலவசப் பரிசோதனை, சிகிச்சைக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2024 டிசம்பர் 7 அன்று தொடங்கப்பட்ட ‘காசநோய் இல்லாத இந்தியா’ 100 நாட்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 28 லட்சத்திற்கும் அதிகமான காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் வழக்கமான சோதனைகளில் விடுபடக்கூடிய அறிகுறியற்ற 9 லட்சம் காசநோய் பாதிப்புகளும் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளன. கூட்டு முயற்சிகளின் விளைவாக 2024-ம் ஆண்டிற்கான காசநோய் பாதிப்பு இல்லாததற்கான சான்றிதழை 46,118 கிராம ஊராட்சிகள் பெற்று சாதனை படைத்துள்ளன. இத்தகைய தீவிர நடவடிக்கைகளால் காசநோய் சிகிச்சை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளது (சர்வதேச சராசரி 88 சதவீதம்).  மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் குறைந்த கால அளவு கொண்ட மிகவும் பாதுகாப்பான புதிய பிபிஏஎல்எம் கூட்டு மருந்து முறை இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சிகிச்சைக் காலத்தை ஆறு மாதங்களாகக் குறைக்கிறது. மேலும், காசநோய் பாதிப்பைக் கண்டறியும் பணியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் இருமல் ஒலியைக் கொண்டு துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யும் குரல்வழி செயற்கை நுண்ணறிவுச் செயலி மூலம் பரிசோதனை முடிவுகள் விரைவாகப் பெறப்படுகின்றன. நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரேக்களைத் தானியங்கி முறையில் ஆய்வு செய்து காசநோய் அறிகுறிகளை அடையாளம் காணும் கதிரியக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது 8 மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது.  காசநோயாளிகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக காசநோயாளிகள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி பயனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 1.38 கோடி பயனாளிகளுக்கு ரூ.4,454.68 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நிக்ஷய் மித்ரா திட்டத்தின் கீழ் 6.77 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களும் நிறுவனங்களும் காசநோய் நண்பர்களாகப் பதிவு செய்து நோயாளிகளுக்கு 45 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பெட்டகங்களை வழங்கியுள்ளனர். இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது வெறும் இலக்காக மட்டுமின்றி அடையக்கூடிய யதார்த்தமாக மாறி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157923&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 160013) आगंतुक पटल : 47
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Kannada