• Sitemap
  • Advance Search
Farmer's Welfare

இந்தியாவின் நீடித்த வேளாண் உற்பத்தி முறைகள்

பண்ணை முதல் சந்தை வரை

Posted On: 26 MAR 2026 3:15PM

இந்தியாவின் விவசாயத் துறை கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலில் ஐந்தில் ஒரு பங்கு பங்களிப்பை வழங்கும் இத்துறை, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 55 சதவீதத்தினருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் துறை சராசரியாக 4.4 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து நிலையான உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. 2024-25 விவசாய ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 357.73 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தோட்டக்கலைத் துறையிலும் உயர் மதிப்பு மிக்க பயிர்களை நோக்கிய மாற்றத்தின் காரணமாக 362.08 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.  உலகளாவிய விவசாய சந்தையில் இந்தியா முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. குறிப்பாக 150.18 மில்லியன் டன் அரிசி, 117.94 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்து உலக அளவில் இரண்டாம் இடத்தை வகிப்பதோடு, பருப்பு வகைகள், சிறுதானியங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. அரிசி ஏற்றுமதி மூலம் 12.95 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதேபோல் பழங்கள், காய்கறிகள், வெங்காயம், கரும்பு, பருத்தி, தேயிலை, தேங்காய், காபி போன்ற உயர் மதிப்புமிக்க பயிர்கள் உற்பத்தியிலும் உலக அளவில் முதல் இரண்டு இடங்களுக்குள் இந்தியா உள்ளது. வேளாண் ஏற்றுமதி வருவாய் 2020 நிதியாண்டில் 34.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் 51.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பங்கு 20.4 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கொள்கை ரீதியான நவடிக்கைகளை எடுத்துள்ளது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14-ம் ஆண்டில் 21,933.50 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் 1,30,561.38 கோடி ரூபாயாகப் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் இதுவரை 22 தவணைகளாக 4.27 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. பயிர் இழப்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.90 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டு நிதிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம், பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கம், எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 6.85 லட்சம் விதை கிராமங்கள் மூலம் தரமான விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மண் வள அட்டைகள், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் போன்ற திட்டங்களால் பாசன வசதியும், மண் ஆரோக்கியமும் காக்கப்படுகின்றன. மேலும், பயன்பாட்டில் உள்ள 7.72 கோடி கிசான் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மின்னணு தேசிய வேளாண் சந்தை தளம் 1.8 கோடி விவசாயிகளை இணைத்து வெளிப்படையான வர்த்தகத்திற்கு வழிவகை செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157935&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

 

(Explainer ID: 160012) आगंतुक पटल : 13
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , हिन्दी , Bengali , Gujarati