Social Welfare
கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள்: பழங்குடியினர் விளையாட்டுகளில் ஒரு புதிய அத்தியாயம்
Posted On:
27 MAR 2026 11:24AM
நாட்டின் பழங்குடியின தடகள வீரர்களுக்கான முதலாவது தேசிய அளவிலான பன்முக விளையாட்டு நிகழ்வான, கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள், 2026 மார்ச் 25 முதல் ஏப்ரல் 3 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், ஜக்தல்பூர், சுர்குஜா ஆகிய இடங்களில் நடைபெறும் இப்போட்டிகள், நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின வீரர்களை ஒரே மேடையில் இணைத்துள்ளன.
விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துதல்
இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தொடர் ஆதரவை வழங்குவதற்காக கேலோ இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. விளையாட்டு வாய்ப்புகள் குறைவாக உள்ள பகுதிகளையும் சமூகங்களையும் சென்றடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகள் தடகளம், கால்பந்து, ஹாக்கி, பலுதூக்குதல், வில்வித்தை, நீச்சல், மல்யுத்தம் ஆகிய ஏழு பதக்கப் போட்டிகளையும், மல்லர்கம்பம், கபடி போன்ற உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டு விளக்க நிகழ்வுகளையும் கொண்டுள்ளன. 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் 338 பதக்கங்களுக்காகப் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
முக்கிய பாரம்பரிய விளையாட்டுகள்
- கபடி: வலிமை, திறமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலம் விளையாடப்படும் கபடி, இந்திய துணைக் கண்டத்தின் பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்றாகும். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் விளக்க விளையாட்டு நிகழ்வாகக் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் இது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
- மல்லர்கம்பம்: உடற்பயிற்சி, யோகா, வலிமை ஆகிய கூறுகளை இணைக்கும் இந்த பாரம்பரிய விளையாட்டு, செங்குத்து மரக்கம்பம் அல்லது கயிற்றில் நிகழ்த்தப்படுகிறது. இதுவும் 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
சத்தீஸ்கர்: ஒரு புதிய விடியல்
பல தசாப்தங்களாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர், இப்போட்டிகளை நடத்துவது பிராந்திய மக்களின் எழுச்சியைக் காட்டுகிறது. பஸ்தர், சுர்குஜா, தண்டகாரண்யா போன்ற பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளுக்கு முறையான விளையாட்டு வாய்ப்புகளை இது கொண்டு சேர்க்கிறது. இப்போட்டிகளின் அதிகாரப்பூர்வ சின்னமான 'மோர்வீர்' என்பது பெருமை, வீரம், பழங்குடியின சமூகங்களின் அடையாளம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
நிர்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாடு
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து சர்வதேச தரத்தில் போட்டிகளை நிர்வகிக்கின்றன. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ.3,158.15 கோடி மதிப்பில் 344 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.2,730.95 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 126 பல்நோக்கு அரங்குகள், 25 கால்பந்து மைதானங்கள் அடங்கும்.
திறமை வாய்ந்த இளம் வீரர்கள் கேலோ இந்தியா கட்டமைப்பின் கீழ் பயிற்சி பெறவும், எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் நாட்டின் விளையாட்டுத் திறனை வலுப்படுத்தவும், இப்போட்டிகள் சிறந்த அடித்தளமாக அமையும். இப்போட்டிகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157943&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160011)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments