• Sitemap
  • Advance Search
Economy

மத்திய பட்ஜெட் 2026-27: உலகளாவிய போட்டித்திறன், வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களை வலுப்படுத்துதல்

Posted On: 28 MAR 2026 11:24AM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் 2026-27-ல் சிறப்பு பொருளாதார மண்டலங்களை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உற்பத்தி அலகுகள் தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு விநியோகப் பகுதியில் சலுகைக் கட்டணத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கும் சிறப்பு வாய்ந்த, ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகைய உள்நாட்டு விற்பனையின் அளவு அவர்களின் மொத்த ஏற்றுமதியின் குறிப்பிட்ட விகிதத்திற்குள் மட்டுமே இருக்கும்.

பிப்ரவரி 28, 2026 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 368 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. செயல்பாட்டில் உள்ள இந்த மண்டலங்களின் மூலமாக 2025-26 நிதியாண்டில், 2025 டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ரூ.11.70 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது அதற்கு முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 32.02 சதவீத வளர்ச்சியாகும். மாநில வாரியாகப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 58 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு

இந்த மண்டலங்கள் கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்படுகின்றன. ஏற்றுமதி செலவுகளைக் குறைக்கவும், உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தவும் இச்சீர்திருத்தங்கள் உதவும். இந்த மண்டலங்களுக்குள் கிளவுட், தரவு மைய செயல்பாடுகளுக்கான வரிச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருப்பது உலகளாவிய உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. டிசம்பர் 2025 நிலவரப்படி, இந்த மண்டலங்கள் மூலம் 31.73 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்த முதலீடு ரூ.7.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கொள்கை பரிணாமம் மற்றும் செமிகண்டக்டர் துறை

ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் 1965-ல் காண்ட்லாவில் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகச் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விதிகள் 2006 ஆகியவை ஒற்றைச் சாளர அனுமதியுடன் நடைமுறைக்கு வந்தன. 2025 ஜூன் மாதத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, செமிகண்டக்டர், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பிற்காகப் பிரத்யேக மண்டலங்களை குஜராத்தின் சனந்த், கர்நாடகாவின் தார்வாட் ஆகிய இடங்களில் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்துறையில் தற்சார்பு அடைவதையும், அதிக திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலீட்டுச் சலுகைகள்

சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாடு, பராமரிப்பிற்கான பொருட்கள் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. விற்பனை வரி, சேவை வரி போன்றவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இந்த விநியோகங்கள் பூஜ்ஜிய வீத வரம்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒற்றைச் சாளர அனுமதி முறை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்குகிறது. வரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆதரவளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157960&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 160010) आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Marathi , Bengali