• Sitemap
  • Advance Search
Infrastructure

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்: கிராமப்புற இந்தியாவில் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின் மைல்கற்கள்

Posted On: 31 MAR 2026 11:23AM

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கிராமங்கள் வீட்டுவசதியில் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளன. ஏழை எளிய குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை உறுதி செய்யும் நோக்கில் 2016 ஏப்ரல் 1 முதல் 'பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிக அல்லது பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்குப் போதுமான வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

திட்டத்தின் சாதனைகள், நிதிப் பகிர்வு

இத்திட்டத்தின் முதலாவது, இரண்டாவது கட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு 4.15 கோடி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 3.90 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, 2.99 கோடி வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வீடுகளின் கட்டுமானப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ரூ. 4,03,886.12 கோடி நிதி வழங்கப்படுகிறது. வரும் 2029-ம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் 4.95 கோடி வீடுகளைக் கட்டி முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொழில்நுட்பம் அடிப்படையிலான கண்காணிப்பு

இத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக்கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளின் கட்டுமான நிலை குறித்த புகைப்படங்கள் மூலம் புவியியல் இருப்பிட அடிப்படையிலான குறியீடு, போலிப் பதிவுகளைக் கண்டறிதல், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார சரிபார்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் முறைகேடுகளைத் தடுத்து, இத்திட்டத்தின் பலன் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கின்றன.

முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள்

இத்திட்டம் தூய்மை இந்தியா இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் உஜ்வாலா திட்டம், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்குக் குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கப் பெற்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.

மேலும், தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவோடு ஊரகக் கொத்தனார் பயிற்சித் திட்டமும் இத்துடன் இணைக்கப்பட்டுப் பலருக்கு வாழ்வாதாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பெயரிலோ அல்லது கணவர் பெயருடன் இணைந்தோ வீடுகள் ஒதுக்கப்படுவதால் கிராமப்புறப் பெண்களின் சொத்துரிமையும், சமூக நிலையும் வலுவடைந்துள்ளன. கிராமங்களைத் தற்சார்பு கொண்டவையாக மாற்றி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157973&ModuleId=3&reg=3&lang=1

***

SS/PD/RJ

(Explainer ID: 160008) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada