Technology
பேரிடர் மேலாண்மையில் டிஜிட்டல் புரட்சி
இந்தியாவின் பல்வகை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு
Posted On:
02 APR 2026 11:17AM
இந்தியாவில் புயல்கள், வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள், வறட்சி, நிலச்சரிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'மௌசம் திட்டத்தின்' கீழ் பல்வகை இடர் முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜனவரியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இத்தளம், வானிலை முன்னறிவிப்பில் முழுமையான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தரவு முறைகளை மாற்றி, செயற்கைக்கோள்கள், ரேடார்கள், தரைமட்டத்திலான கண்காணிப்புத் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து இத்தளம் செயல்படுகிறது. இதன் மூலம் துல்லியமான, இருப்பிடம் சார்ந்த எச்சரிக்கைகள் தற்பொழுது நாட்டின் 80 சதவீதப் பகுதியில் வாழும் மக்களைச் சென்றடைகின்றன.
இப்புதிய அமைப்பின் மூலம் வானிலை முன்னறிவிப்பு தயாரிப்பு நேரம் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. துல்லியத்தன்மை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய கையேடு முறைகளுக்கு மாற்றாக, புவியியல் தகவல் வரைபடக் கருவிகள் மூலம் 90 சதவீதத் தரவுகள் சேகரிக்கப்படுவதோடு, தரப் பரிசோதனைகள் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன. வானிலை கணிப்பு மாதிரிகளின் பயன்பாடு 95 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. முன்கூட்டியே எச்சரிப்பதற்கான காலம் 5-நாட்களிலிருந்து 7-நாட்களாக உயர்த்தப்பட்டதால், நிர்வாக அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுதல் அவகாசம் கிடைக்கிறது. புயல் கரையைக் கடப்பது குறித்த துல்லியமான கணிப்புகளால், இந்திய வானிலை ஆய்வு மையம் 3-வது நாள் முதல் 5-வது நாள் வரையிலான முன்னறிவிப்புகளில் பிழைகளைக் குறைத்துள்ளது. இதனால் 1999 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வெளியேற்றுவதற்கான செலவினங்கள் 3-ல் 1 பங்காகக் குறைந்துள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மௌசம்கிராம்' இணையதளம் மூலம், நாட்டின் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் குறியீட்டு எண்களுக்குட்பட்ட (பின் கோடு) பகுதிகள், 5,700 ஒன்றியங்கள், 6.2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மிகத் துல்லியமான உள்ளூர் வானிலைத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்படுகின்றன. இந்தத் தளம் 36 மணிநேரத்திற்கு 1 மணிநேரத்திற்கான முன்னறிவிப்புகளையும், 5 நாட்களுக்கு 3 மணிநேரத்திற்கான முன்னறிவிப்புகளையும், 10 நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கான முன்னறிவிப்புகளையும் வழங்குகிறது. மத்திய, மாநில வேளாண் அமைச்சகங்கள் மூலம் விவசாயிகளுக்கும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் கிருஷி சகி, பசு சகி ஆகிய களப் பணியாளர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் உடனுக்குடன் எச்சரிக்கைகள் சென்றடைகின்றன.
இத்தகைய அதிநவீன உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பது குறைக்கப்பட்டு, சுமார் ரூ.250 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பிபோர்ஜாய், டானா புயல்களின் போது துல்லியமான எச்சரிக்கைகள் மூலம் குஜராத், ஒடிஷா மாநிலங்களில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக ஆண்டுதோறும் 23.4 டன் காகிதம் சேமிக்கப்பட்டு, 2.57 டன் கார்பன் உமிழ்வு தவிர்க்கப்படுகிறது. நிதி ஆயோக், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இச்சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இச்சிறந்த பொதுச் சேவைக்காக இத்திட்டத்திற்கு தேசிய மின்-ஆளுமை விருது 2025, ஐக்கிய நாடுகள் சபையின் சசகாவா விருது 2025, டிஜிட்டல் மாற்றத்திற்கான உச்சிமாநாடு 2026-ல் தகைசால் விருது ஆகியவை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157992&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159936)
आगंतुक पटल : 9
Provide suggestions / comments