• Sitemap
  • Advance Search
Social Welfare

ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) மசோதா, 2026

சட்டங்களை எளிமைப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை பலப்படுத்துதல்

Posted On: 04 APR 2026 11:46AM

இந்தியாவில் பல ஆண்டுகளாக நிலவி வந்த பழைய ஒழுங்குமுறை அமைப்புகளின் காரணமாக, சிறிய தவறுகளும் கூட குற்றங்களாகக் கருதப்பட்டு வந்தன. ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் தாமதம் அல்லது படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சிறு பிழைகளுக்காகக் பொதுமக்களும் வணிக அமைப்புகளும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய தேவையற்ற நெருக்கடிகளைக் குறைத்து, சட்டங்களை எளிமையாக்குவதற்காக மத்திய அரசு 'ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) சட்டம், 2023'-ஐக் கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் மக்கள் மீதான நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 'ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) மசோதா, 2026' தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா 23 அமைச்சகங்களின் கீழ் வரும் மத்திய அரசின் 79 சட்டங்களில் உள்ள 784 பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கிறது. இதில் குறிப்பாக வணிகங்களுக்கான 717 வழிமுறைகளை ஒழுங்குபடுத்தவும், மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க 67 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தம் நான்கு தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது:

1. தண்டனைக்கு முன் எச்சரிக்கை: முதல்முறை, சிறிய தவறுகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்காமல், எச்சரிக்கை அறிவிப்பு வழங்கி திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.


2. விகிதாச்சார அடிப்படையிலான அபராதம்: குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப நியாயமான முறையில் அபராதங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.


3. விரைவான மற்றும் முறையான தீர்வு: நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பிரத்யேக தீர்ப்பாய அதிகாரிகள் மூலம் வழக்குகளுக்குச் சமரச முறையில் துரிதமாக தீர்வு காணப்படுகிறது.


4. மாறும் தன்மை கொண்ட அபராதக் கட்டமைப்பு: காலத்திற்கு ஏற்ப அபராதத் தொகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சீர்திருத்தங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு 30 நாட்கள் சலுகைக்காலம் வழங்கப்படுகிறது. ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் முறையற்ற வணிகம் தொடர்பான சிறிய அளவிலான விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனைகள் நீக்கப்பட்டு, அபராதங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதைக் குற்றமாகக் கருதும் பழைய காலனித்துவ காலச் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இம்மசோதா பேருதவியாக உள்ளது. காப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் தேயிலைச் சட்டம், 1953 ஆகியவற்றின் கீழ் ஆவணப் பராமரிப்பில் ஏற்படும் நிர்வாகப் பிழைகளுக்கான சிறைத்தண்டனைகள் நீக்கப்பட்டு, முதல் முறை தவறுக்கு எச்சரிக்கையும், தொடர் விடுபடல்களுக்கு மட்டுமே அபராதமும் விதிக்கும் படிநிலையிலான முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறின், இப்புதிய ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா கடுமையான மற்றும் காலாவதியான சட்டப்பிரிவுகளை நீக்கி, பொதுமக்களுக்கு உகந்த, எளிய மாற்று வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பு இந்தியாவுக்கும் மிக வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158002&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159933) आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Kannada