மக்களை மையப்படுத்திய நிர்வாகத்திற்கு திறன் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்துதல்
Posted On:
04 APR 2026 3:54PM
பொதுமக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட மக்கள் நல அரசை வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் பணியாற்றும் அரசுப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தேசிய அளவில் சாதனா வாரம் 2026 தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர், பயிற்சித் துறை, திறன் மேம்பாட்டு ஆணையம், கர்மயோகி பாரத் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விரிவான கூட்டுத் திறன் மேம்பாட்டு இயக்கம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 8 வரை நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. 'நாம் கர்மயோகியாவோம்' என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இம்முயற்சியானது, மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைத்து, பொறுப்புணர்வு மிக்க நிர்வாகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கர்மயோகி திட்டத்தின் 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் விதிகளின் அடிப்படையில் செயல்படும் பழைய முறைக்கு மாற்றாக, பொறுப்புகளின் அடிப்படையில் திறன்களை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வையுடன் கர்மயோகி திட்டம் செயல்படுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், அரசு நிர்வாகத்தின் மனிதவளத்தின் திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களை மையப்படுத்திய ஆளுகையை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்ட ஐஜிஓடி டிஜிட்டல் கற்றல் தளத்தில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். பல்வேறு மொழிகளில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட பாடநெறிகளைப் பயன்படுத்தி இதுவரை சாதனை அளவாக 8 கோடிக்கும் அதிகமான பாடநெறிகள் முடிக்கப்பட்டுள்ளன. நிர்வாகத் திறனை மதிப்பிடுவதற்காக செயல்திறன் மதிப்பீட்டு முறைகளுடன் கற்றல் முடிவுகள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனா வாரம் தொழில்நுட்பம், பாரம்பரியம், உறுதியான முடிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிர்வாகத்தை எளிதாக்குவது, இந்திய அறிவுசார் அமைப்புகள், அறநெறிச் சட்டங்களின் வழி நடப்பது, கொள்கைகளின் பலன்கள் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிப்பதைக் கண்காணிப்பது ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கர்மயோகி க்ஷமதா கனெக்ட், உன்னதி இணையதளம், அம்ரித் ஞான் கோஷ் போன்ற முக்கியத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் அடிமட்ட அளவில் பணிபுரியும் ஊழியர்களின் டிஜிட்டல் விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், கிராமப்புற பஞ்சாயத்துகளின் நிர்வாகத் திறனை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
சுருக்கமாகக் கூறின், சாதனா வாரம் 2026 இந்தியப் பொது நிர்வாக அமைப்பை எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு இயக்கமாகும். 100-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 250-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து கற்றலை ஒரு கூட்டுத் தேசிய இயக்கமாக மாற்றியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, தகுதி வாய்ந்த மனிதவளத்தையும், பொறுப்புமிக்க நிறுவனங்களையும் உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். மாறிவரும் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் நோக்கில், புதிய திறன்களையும், சேவை மனப்பான்மையையும் அரசு ஊழியர்களிடம் வளர்க்கும் உன்னதப் பணியை இத்திட்டம் வெற்றிகரமாக ஆற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158005&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159932)
आगंतुक पटल : 51
Provide suggestions / comments