Energy & Environment
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பயணம்
பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு முதல் பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகள் வரை
Posted On:
07 APR 2026 3:10PM
21-ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு, கொள்கை விவாதங்கள் என்ற நிலையில் இருந்து, தேசிய கொள்கை முடிவுகளின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேறி வரும் நிலையில், பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சவாலாக அமைந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றையொன்று வலுப்படுத்தும் தூண்கள் என்ற புரிதலே இந்தியாவின் பசுமைப் பாதைக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பிராந்தியங்கள், துறைகளைக் கடந்து விரிவடைந்து வரும் சூழலில், இதனை ஒரு தொலைதூர அபாயமாகக் கருதாமல், உடனடித், செயல்திறன் மிக்க தணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் வகையிலான தற்போதைய வளர்ச்சியின் யதார்த்தமாக இந்தியா அங்கீகரித்துள்ளது.
உலகளவில் அடையாளம் காணப்பட்ட மிக அதிக பல்லுயிர் பெருக்கம் கொண்ட 17 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதவீதப் பகுதியை மட்டுமே கொண்டுள்ள போதிலும், உலகில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களில் சுமார் 8 சதவீதம் இந்தியாவில் உள்ளன. நாடு முழுவதும் 96,000 விலங்கினங்கள், 47,000 தாவர இனங்கள் உள்ளன. பல்லுயிர் ஆளுகைக் கட்டமைப்பை வலுப்படுத்த 2002-ம் ஆண்டில் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 1992-ம் ஆண்டில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்க மாநாட்டின் தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டில் கொலம்பியாவின் காலி நகரில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்க மாநாட்டில் (காப்16), 2024 முதல் 2030 வரையிலான காலத்திற்கான மேம்படுத்தப்பட்ட தேசிய பல்லுயிர் பெருக்க உத்தி மற்றும் செயல்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2030-ம் ஆண்டிற்குள் பல்லுயிர் இழப்பைத் தடுத்து, மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விலங்கினங்கள், பறவைகள், தாவரங்களைப் பாதுகாப்பதற்காக 1972-ம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 1974-ம் ஆண்டில் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டம், 1980-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டம், காற்று மாசுபாட்டைக் குறைக்க 1981-ம் ஆண்டில் காற்று மாசு தடுப்புச் சட்டம், 1986-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகிய விரிவான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயனாக, 2014-ம் ஆண்டில் 745 ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 1134 ஆக விரிவடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 46-லிருந்து 58 ஆக அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 3167 புலிகள் உள்ளதாக பதிவாகியுள்ளது. 6-வது தேசிய புலிகள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 33 ஆக அதிகரிக்கப்பட்டு, கூடுதல் பரப்பளவு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புடன் காடுகளின் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' என்ற மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இம்முயற்சியின் கீழ் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 262.4 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடற்கரை அரிப்பு, சூறாவளி உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுக்கும் இயற்கை அரணாகத் திகழும் அலையாத்திக் காடுகளை மீட்டெடுக்க 'மிஷ்டி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2025-ம் ஆண்டில் 4536 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. சதுப்புநிலங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தியதன் பலனாக, 2014-ம் ஆண்டில் 26 ஆக இருந்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை, 2026-ம் ஆண்டு ஜனவரி 31 நிலவரப்படி 98 ஆக உயர்ந்து ஆசியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடற்கரைகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் தேசிய கடல்சார் இயக்கம் 2025-2031 காலகட்டத்திற்கு 767 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச தூய்மைத் தரநிலைகளைப் பெற்ற 18 கடற்கரைகள் 'நீலக் கொடி' சான்றிதழைப் பெற்றுள்ளன.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒன்பது முக்கிய அம்சங்களைக் கொண்ட பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்பாட்டுத் திட்டம் வழிகாட்டுகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவிலான இலக்குகளின்படி, 2030-ம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வுச் செறிவை 2005-ம் ஆண்டிலிருந்த அளவை விட 45 சதவீதம் குறைக்கவும், புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவீதம் மின் திறனை எட்டவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உமிழ்வுச் செறிவை 36 சதவீதம் குறைத்து, மின் உற்பத்தித் திறன் இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2070-ம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை எட்ட நீண்டகால குறைந்த உமிழ்வு செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மூலம் 2030-ம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2026-ம் ஆண்டு ஜனவரி 31 நிலவரப்படி 5,20,510.95 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதில் புதைபடிவமற்ற தூய்மையான எரிசக்தி ஆதாரங்களின் பங்கு 2,71,969.33 மெகாவாட்டாக, அதாவது 51.55 சதவீதமாகக் உள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் புள்ளிவிவரங்களின்படி, சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 3-வது இடத்திலும், காற்றாற்றல் உற்பத்தி திறனில் 4-வது இடத்திலும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை தனிமனித வாழ்க்கை முறையாக ஒன்றிணைக்கும் ‘இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை’ (மிஷன் லைஃப்) இயக்கத்தின் கீழ் 2025-ம் ஆண்டு டிசம்பர் வரை 34 லட்சத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கெடுத்துள்ளனர். கழிவு மறுசுழற்சி ஆலைகளின் எண்ணிக்கை 2019-20 நிதியாண்டில் 829 ஆக இருந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதன் மூலம் 2024-25 நிதியாண்டில் 3,036 ஆக அதிகரித்துள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 71 ஆக உயர்ந்துள்ளது. இத்தகைய பன்முகத் திட்டங்கள் மூலம் 2050-ம் ஆண்டிற்குள் இயற்கையோடு இணைந்த வாழ்வை எட்டும் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கி இந்தியா விரைவாக பயணித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158047&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159930)
आगंतुक पटल : 5
Provide suggestions / comments