Economy
11 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமரின் முத்ரா திட்டம்
நிதிசார் உள்ளடக்கம், சிறுதொழில்கள் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல்
Posted On:
08 APR 2026 12:45PM
இந்தியாவின் நகரங்கள், புறநகர் பகுதிகள், கிராமப்புறங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான சிறு தொழில்முனைவோர் சிறிய அளவிலான உற்பத்தி, போக்குவரத்துப் பணிகள் போன்ற எளிய தொழில்கள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சிறுதொழில்கள் வாழ்வாதாரமாகத் திகழ்வதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் ஆதரவளிக்கின்றன. இருப்பினும், பல ஆண்டுகளாக முறையான வங்கிக்கடன் வசதிகள் கிடைக்காத காரணத்தால் இவர்களின் வளர்ச்சி பெருமளவில் தடைபட்டிருந்தது. நிதி நிறுவனங்கள் கோரும் பிணைப் பத்திரங்கள் இல்லாததால் இவர்களில் பெரும்பாலானோர் நண்பர்கள், குடும்பத்தினர், உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தது.
சிறு தொழில்முனைவோரின் இந்த நீண்ட கால நிதிப் பிரச்சனையைக் குறைக்கும் நோக்கில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது. வங்கிச் சேவை கிடைக்காதவர்களுக்கு நிதி வழங்குதல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், எளிதாக கடன் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. உற்பத்தி, வணிகம், சேவைத் துறை, வேளாண்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் சாரா குறு, சிறு நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் முத்ரா திட்டம் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளதுடன், நிதிசார் உள்ளடக்கம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோரின் தேவைகள், வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில் “சிசு, கிஷோர், தருண், தருண் பிளஸ்” என நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப கட்ட அல்லது மிகச் சிறிய வணிக நடவடிக்கைகளுக்காக சிசு பிரிவின் கீழ் 50,000 ரூபாய் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை கடன் வாங்காத, பிணைகள் ஏதும் இல்லாத எளிய விளிம்புநிலை மக்களும் புதிய தொழில் தொடங்க உதவுகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள, தங்களின் தொழிலை விரிவுபடுத்த கூடுதல் மூலதனம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு கிஷோர் பிரிவில், 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, புதிய இயந்திரங்களை வாங்க தருண் பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய பிரிவான தருண் பிளஸ் மூலம், தருண் பிரிவில் கடனை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்திய, நிலையான வணிகப் பின்னணி கொண்ட தொழில்முனைவோருக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
முறையான நிறுவனக் கட்டமைப்பின் மூலம் கடைக்கோடி மக்களும் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், முத்ரா நிறுவனம், உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள், பயனாளிகள் என மூன்று அடுக்கு பிரநிதித்துவ மாதிரியில் இத்திட்டம் செயல்படுகிறது. வணிக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், சிறு நிதிசார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறுகடன் வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் கடன்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த 2024-25 நிதியாண்டில் முத்ரா நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து மிக அதிக அளவாக 827 கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்து தற்சார்பை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் வியாபாரிகள், கடைக்காரர்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், சிறிய ரக சரக்கு வாகனங்கள் போன்ற போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கும், மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை போன்ற வேளாண் சார்ந்த வருவாய் ஈட்டும் பணிகளுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த மார்ச் 27 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, முத்ரா திட்டத்தின் கீழ், 57 கோடிக்கும் அதிகமான கணக்குகளுக்கு 40.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் 12 கோடிக்கும் அதிகமான கணக்குகள் புதிய தொழில்முனைவோருக்குச் சொந்தமானவை என்பது, இவர்களை முறையான நிதிக் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்த முத்ரா திட்டத்தின் பங்களிப்பை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் வினையூக்கியாகத் திகழும் இத்திட்டத்தின் மொத்தக் கணக்குகளில் சுமார் 60 சதவீத கணக்குகள் பெண் தொழில்முனைவோர் பெயரில் இருப்பதுடன், விநியோகிக்கப்பட்ட தொகையில் 37.45 சதவீதம் பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல், புதிய தொழில்முனைவோர் 21 சதவீத கணக்குகளையும், விநியோகிக்கப்பட்ட தொகையில் 30.09 சதவீத பங்கையும் பெற்றுள்ளனர். மேலும் இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையில் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45.52 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடன் தொகையில் 31.77 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கியதில் மாநில அளவில் உத்தரப் பிரதேசம் 58,111 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், பீகார் 54,064 கோடி ரூபாயுடன் இரண்டாமிடத்திலும், மகாராஷ்டிரா 50,762 கோடி ரூபாயுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
டிஜிட்டல்மயமாக்கல், அரசின் பிற ஆதரவுத் திட்டங்களுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை முத்ரா திட்டத்தின் கடன் விநியோகச் சூழலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு, கடன் வழங்கும் நிறுவனங்களின் அபாயத்தைக் குறைத்து பிணையில்லா முத்ரா கடன்கள் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகைசெய்கிறது. கடன் பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க உருவாக்கப்பட்ட ஜன்சமர்த் தேசிய இணையதளம் மூலம் முத்ரா கடன்கள் உட்பட 14 அரசுத் திட்டங்களும், 200-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிணையில்லா முத்ரா கடன்கள் மூலம் காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பேக்கரி தொடங்கி 42 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முதாசிர் நக்ஷ்பந்தி, பீகாரில் முத்ரா கடன் பெற்று விதை வியாபாரத் தொழில் மூலம் மாதம் ரூ.60,000 வருவாய் ஈட்டும் பூனம் குமாரி போன்ற லட்சக்கணக்கானோரின் கனவுகள் நிறைவேற்றப்பட்டுளதே முத்ரா திட்டத்தின் சமூக, பொருளாதார மாற்றத்திற்குச் சான்றுகளாகும். முத்ரா திட்டம் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், இன்றைய சிறு நிறுவனங்கள் நாளை, மீள்திறன் கொண்ட பெரிய வணிக நிறுவனங்களாக மாறுவதை உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158056&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159928)
आगंतुक पटल : 7
Provide suggestions / comments