Social Welfare
உலக ஹோமியோபதி தினம் 2026
மாறிவரும் உலகில் முழு ஆரோக்கியத்திற்கான ஹோமியோபதி மருத்துவம்
Posted On:
09 APR 2026 11:54AM
மாறிவரும் உலகளாவிய சூழலில் முழுமையான ஆரோக்கியப் பராமரிப்பை உறுதி செய்வதில் ஹோமியோபதி மருத்துவ முறை முக்கியப் பங்காற்றி வருகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையைத் தோற்றுவித்த டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி உலக ஹோமியோபதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக ஹோமியோபதி தினம், ‘நீடித்த ஆரோக்கியத்திற்கு ஹோமியோபதி’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய நவீன மருத்துவ உலகில், பக்கவிளைவுகள் இல்லாமல் நீடித்த ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய மருத்துவ முறையாக ஹோமியோபதி உலகளவில் உருவெடுத்துள்ளது.
கிரேக்க மொழியின் ‘ஹோமோய்ஸ்’ (ஒரே மாதிரியான) & ‘பதோஸ்’ (பாதிப்பு) என்ற சொற்களிலிருந்து உருவான ஹோமியோபதி மருத்துவ முறை, நோயாளியின் உடலில் தோன்றும் அறிகுறிகளின் அடிப்படையில் வீரியம் குறைந்த இயற்கை மருந்துகளை வழங்கி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி குணப்படுத்தும் தனித்துவமான தத்துவத்தைக் கொண்டதாகும். 18-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி நாட்டு மருத்துவரான சாமுவேல் ஹானிமன் இந்த மருத்துவத்தை முறைப்படுத்தினார். ஆரோக்கியமான மனித உடலில் ஒரு குறிப்பிட்ட மருந்து ஏற்படுத்தும் அதே அறிகுறிகளை, ஒரு நோயாளியின் உடலில் ஏற்படுத்தி நோயை குணப்படுத்த அந்த மருந்தின் மிகக் குறைந்த அளவே போதுமானது என்ற முதன்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் இம்முறை செயல்படுகிறது. மேலும், உடலின் தற்காப்பு வழிமுறைகளைத் தூண்டுவதற்கும், பக்கவிளைவுகளைக் குறைப்பதற்கும் மிகக் குறைந்த அளவு மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இதன் முக்கிய அங்கமாகும்.
தற்போது, உலகிலேயே மிக அதிக அளவிலான ஹோமியோபதி மருத்துவர்களையும், சிறந்த உள்கட்டமைப்பையும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டு சமய பரப்பாளர்கள் (மிஷனரி) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மருத்துவ முறை, காலப்போக்கில் நாட்டின் பாரம்பரிய மருத்துவ மரபுகளோடு ஒருங்கிணைந்து வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, 1839-ம் ஆண்டில் மகாராஜா ரஞ்சித் சிங்கிற்கு அளிக்கப்பட்ட வெற்றிகரமான சிகிச்சைக்குப் பின், இம்முறை மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 1847-ம் ஆண்டில் இந்தியாவின் தொடக்ககால ஹோமியோபதி மருத்துவமனைகளில் ஒன்று நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கல்லாகும். சுதந்திரத்திற்குப் பின், மத்திய ஹோமியோபதி கவுன்சில், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் போன்ற அமைப்புகள் மூலம் கல்வி, ஆராய்ச்சி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறையை மேம்படுத்துவதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இது ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முறையான கொள்கை முடிவுகள், தரப்படுத்துதல், சர்வதேச அளவிலான கூட்டு முயற்சிகள், விரிவான ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் ஹோமியோபதி மருத்துவத்தை இந்திய சுகாதாரக் கட்டமைப்பின் மிக முக்கிய அங்கமாக மத்திய அரசு மாற்றியுள்ளது. தற்போது இந்தியாவில் 3,45,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள், 8593 மருந்தகங்கள், 277 கல்வி நிறுவனங்கள், 34 பிரத்யேக ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்த பத்தாண்டுகளில் இளநிலை, முதுநிலை ஹோமியோபதி மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையும், கல்லூரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய ஆயுஷ் இயக்கம் போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சமூக சுகாதார நிலையங்களிலும் ஹோமியோபதி சிகிச்சை மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1,84,000-கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஆயுர்ஸ்வஸ்தியா, ஆயுர்ஞான் போன்ற திட்டங்கள் மூலம் மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நோய்த்தொற்றுகளை எதிர்கொள்வதில் ஹோமியோபதி ஒரு சிறந்த தடுப்பு முறையாகவும் துணை மருத்துவ முறையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பு, கேரளாவில் சிக்குன்குனியா பரவல் கட்டுப்பாடு, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் லட்சக்கணக்கான மக்கள் ஹோமியோபதி மருந்துகளால் பயனடைந்துள்ளனர்.
இந்தியாவில் பாரம்பரிய மருத்துவக் கோட்பாடுகளும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒன்றிணையும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சியை ஹோமியோபதி எட்டியுள்ளது. மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஹோமியோபதி ஆணையம் போன்ற நிறுவனங்கள் சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவப் பயிற்சியை ஊக்குவித்து வருகின்றன. மூலிகைகள், கனிமங்களிலிருந்தும், இயற்கை ஆதாரங்களிலிருந்தும் தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்துகள், நோயை மட்டும் குணப்படுத்தாமல் ஒரு மனிதனின் உடல், மன நிலையை ஆராய்ந்து முழுமையான நல்வாழ்வை உறுதி செய்கின்றன. எதிர்காலத்தில் இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய, ஒருங்கிணைந்த பொது சுகாதாரக் கட்டமைப்பில் ஹோமியோபதி மருத்துவம் மிக முக்கியப் பங்காற்றும் என்பது தெளிவாகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158081&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159927)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada