Farmer's Welfare

தேசிய வேளாண் சந்தை (இ-நாம்)

வேளாண் வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்குதல்

Posted On: 13 APR 2026 4:37PM

இந்தியாவின் பாரம்பரிய வேளாண் வர்த்தகக் கட்டமைப்பை நவீனமயமாக்கி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பயனுள்ள பொருளாதாரச் சூழலை உருவாக்கும் நோக்கில் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே சந்தை என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நாடு முழுவதும் உள்ள விவசாய விளைபொருள் சந்தைக் குழுக்களை இணையதளம் வாயிலாக ஒருங்கிணைத்து, வெளிப்படையான விற்பனை முறையை உறுதி செய்வதை இவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இத்திட்டம் நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1,656 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இந்த டிஜிட்டல் தளத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது சாத்தியமாகியுள்ளது.

இணையவழி வேளாண் வர்த்தகத் தளத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1.80 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், 2.73 லட்சம் வர்த்தகர்கள், 4,724 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 13.25 கோடி மெட்ரிக் டன் விவசாய விளைபொருட்கள் இந்தத் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு தோராயமாக ரூ.4.84 லட்சம் கோடியை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2024-ம் நிதியாண்டில் ரூ.3.19 லட்சம் கோடியாக இருந்த ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு, 2026-ம் நிதியாண்டில் ரூ.4.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இந்த டிஜிட்டல் தளத்தின் வளர்ச்சியையும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை, சுமார் 204.76 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, தடையற்ற செயல்பாட்டுத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வணிகத் தேவைகளை எளிமையாக்குவதற்காகப் பல்வேறு டிஜிட்டல் அம்சங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. தேசிய வேளாண் சந்தை மொபைல் செயலி மூலம் தற்போது 247 வகையான வேளாண் விளைபொருட்களின் தினசரிச் சந்தை விலை நிலவரங்கள், துல்லியமான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எப்போது, எந்தச் சந்தையில் விற்பனை செய்வது என்பதைத் தாங்களே சுயமாகத் தீர்மானிக்க முடிகிறது. வர்த்தகத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள விற்பனைக்கூடங்களில் அதிநவீனத் தரப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வராமலேயே கிடங்குகளில் இருந்தபடியே வர்த்தகம் செய்வதற்கான கிடங்கு அடிப்படையிலான வர்த்தக முறை, விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பிரத்யேகத் தொழில்நுட்பத் தொகுதிகள் ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இத்தகைய பன்முக டிஜிட்டல் உத்திகள், விவசாயத் துறையில் வர்த்தகம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதோடு, கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158169&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159925) आगंतुक पटल : 50
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada