Social Welfare
ஊட்டச்சத்து 2.0 இயக்கம்: நாட்டின் ஊட்டச்சத்து சூழலை வலுப்படுத்துதல்
Posted On:
14 APR 2026 10:59AM
தேசிய ஊட்டச்சத்து இலக்குகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், மக்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க தேசிய ஊட்டச்சத்து இயக்கம் (போஷன் அபியான்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2018-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்தை வெறும் சமூக நலத் திட்டமாக மட்டும் பார்க்காமல், மனிதவள மேம்பாடு, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், நாட்டின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு முதன்மையான தேசிய முன்னுரிமையாக மாற்றுவதை இவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இத்திட்டம் நாட்டின் ஊட்டச்சத்து விநியோக கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போஷன் கண்காணிப்பு செயலி (Poshan Tracker App) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் உள்ள 14 லட்சத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள், சுமார் 9 கோடிப் பயனாளிகள் நிகழ்நேர அடிப்படையில் மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் இயக்கம் என்ற உத்தியின் மூலம் தேசிய அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு, ஊட்டச்சத்து மாதம், ஊட்டச்சத்து வாரம் போன்ற பல்வேறு முயற்சிகளின் கீழ் இதுவரை 150 கோடிக்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. சுகாதாரப் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகள் இதன்கீழ் வகுக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக அங்கன்வாடி மையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சுகாதாரக் கட்டமைப்புகளுடன் கூடிய சுமார் 40,000 அதிநவீன அங்கன்வாடி மையங்கள் நடப்பு நிதியாண்டில் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் விளையும் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்பதை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6.42 லட்சத்திற்கும் அதிகமான ஊட்டச்சத்துத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரசாயனக் கலப்பில்லாத புதிய, இயற்கையான உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு நேரடியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடி மையங்களில் தடையற்ற வளர்ச்சி கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7.5 கோடி குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை போஷன் கண்காணிப்பு செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து உணவு முறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகள், மூலிகை மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை அங்கன்வாடி மையங்களின் தினசரிச் செயல்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் அதிகம் வாழும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புப் பழங்குடியின ஊட்டச்சத்துத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பன்முக, தொடர்ச்சியான டிஜிட்டல் கண்காணிப்பு நடவடிக்கைகள், நாட்டின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சுழலை வலுப்படுத்துவதுடன், ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கான அடிப்படை தூணாகவும் விளங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158179&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159924)
आगंतुक पटल : 61
Provide suggestions / comments