Infrastructure
நீராவி என்ஜின் முதல் அதிவேக ரயில்கள் வரை: இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் பயணம்
Posted On:
15 APR 2026 11:58AM
இந்தியாவில் 173 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கும் தானேவுக்கும் இடையே 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முதலாவது பயணியர் ரயில் இயக்கப்பட்ட வரலாற்று நிகழ்வோடு ரயில்வேயின் பயணம் தொடங்கியது. ஆரம்பக்காலத்தில் நீராவி என்ஜின்களில் தொடங்கி 2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த அகலப்பாதை கட்டமைப்பில் 99.6 சதவீத மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு தோராயமாக 25,000 ரயில்கள் இயக்கப்பட்டு நம்பகமான போக்குவரத்துச் சேவை உறுதி செய்யப்படுகிறது. ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, 2025-26 நிதியாண்டில் சுமார் 741 கோடி பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதே காலகட்டத்தில் ரயில்வேயின் மொத்த வருவாய் தோராயமாக ரூ.80,000 கோடியை எட்டியுள்ளதுடன், சரக்குக் கையாளும் திறனும் வரலாறு காணாத வகையில் 1,670 மில்லியன் டன்களாகப் பதிவாகியுள்ளது. இத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு 3,100 கிலோமீட்டர் நீள வழித்தடங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 24,400 கிலோமீட்டர் தொலைவிற்குப் பணிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சி கடந்த தசாப்தத்தில் முன்னெப்பொதும் இல்லாத வேகத்தை எட்டியுள்ளது. 2014-ம் ஆண்டிற்கு முன்பு நாட்டின் ரயில்வே கட்டமைப்பில் வெறும் 20 சதவீதப் பகுதிகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தன. இது செயல்பாட்டுத் திறனைக் குறைத்ததுடன் டீசல் எரிபொருளை சார்ந்திருத்தலை அதிகரிக்கச் செய்தது. 2014-ம் ஆண்டில் 21,801 கிலோமீட்டராக இருந்த மின்மயமாக்கப்பட்ட வழித்தடம் 2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 69,873 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. மின்சாரப் பயன்பாட்டிற்கு மாறியதன் மூலம் 2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 180 கோடி லிட்டர் டீசல் நுகர்வு குறைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் மின்சாரப் பயன்பாடு 70 சதவீதம் சிக்கனமானது என்பதால் இதன் மூலம் தோராயமாக ரூ.6,000 கோடி நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த மின்மயமாக்கல் அளவு பிரிட்டன் (39 சதவீதம்), ரஷ்யா (52 சதவீதம்), சீனா (82 சதவீதம்) உள்ளிட்ட உலகின் முன்னணி ரயில்வே அமைப்புகளை விடப் பல மடங்கு அதிகமாகும். மேலும், 2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 54,600 கிலோமீட்டர் நீளப் பாதைகள் புதுப்பிக்கப்பட்டு, மணிக்கு 110 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் இயங்கும் தகுதி வாய்ந்த வழித்தடங்களின் நீளம் 31,445 கிலோமீட்டரிலிருந்து 85,000 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ‘இந்தியாவில் தயாரிப்போம்' முன்முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில்கள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.98 கோடி பயணிகள் வந்தே பாரத் ரயில்களில் பயணித்துள்ளனர். இச்சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1 லட்சம் பயணங்கள் மூலம் 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை முதல் மூன்று மாதங்களிலேயே 1.21 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் அதிநவீனப் பயண வசதியை வழங்குவதற்காக குளிரூட்டப்படாத 'அம்ரித் பாரத்' ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 60 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் அதிவேக ரயில் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 2026-27 மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு காணாத வகையில் ரூ.2,78,000 கோடி மூலதன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை-புனே, தில்லி-வாரணாசி, ஹைதராபாத்-பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் சுமார் 4,000 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் 508 கிலோமீட்டர் நீள மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்.
தொலைத்தொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத் தளங்களை நவீனமயமாக்குவதன் மூலம் பயணிகள் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இணைய நெறிமுறை மல்டி-புரோட்டோகால் லேபிள் ஸ்விட்சிங் என்ற அதிநவீனத் தொழில்நுட்பம் 1,396 ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டு, ஒருங்கிணைந்த வீடியோ கண்காணிப்பு, மொபைல் ரயில் ரேடியோ தகவல் தொடர்பு, பயணிகள் முன்பதிவு அமைப்பு ஆகியவை மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முக அங்கீகார வசதி கொண்ட வீடியோ கண்காணிப்பு அமைப்புகள் 1,874 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய ரயில் விசாரணை அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயனர் தகவல் தொழில்நுட்பம் 1,405 நிலையங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தில் சுரங்கப் பாதைகளிலும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்ய நவீன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரயில்ஒன்' செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு, விசாரணைகள், புகார்களுக்கு தீர்வுகாண்பதற்கு ஒரே டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 119 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தளவாடப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்க 35 கதி சக்தி சரக்கு முனையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்தகைய பன்முக நடவடிக்கைகள் இந்திய ரயில்வேயை நாட்டின் நவீனப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை தூணாக மாற்றியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158187&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159917)
आगंतुक पटल : 40
Provide suggestions / comments