• Sitemap
  • Advance Search
Infrastructure

ஆற்றுப் படுகை மேலாண்மைத் திட்டம்: தண்ணீர் ஆளுகையை வலுப்படுத்துதல்

Posted On: 17 APR 2026 12:51PM

நிலப்பரப்பு, நிலத்தடி நீர் வளங்களின் நிலையான பயன்பாடு, பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய படுகை அளவிலான திட்டமிடலை ஆற்றுப் படுகை மேலாண்மைத் திட்டம் ஊக்குவிக்கிறது. இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரையிலான 16-வது நிதிக் குழு காலத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசால் ரூ.2,183 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பிரம்மபுத்திரா, பராக், தீஸ்தா, சிந்து போன்ற முக்கிய நதிப் படுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டமிடலின் துல்லியத்தன்மையை மேம்படுத்த தொலை உணர்வு, புவியியல் தகவல் அமைப்பு, லேசர் முறையில் முப்பரிமாண அளவீடு தொழில்நுட்பம் (லைடார்), ட்ரோன் அடிப்படையிலான ஆய்வுகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மிகவும் முக்கியமான இயற்கை வளமாகும். ஆற்றுப் படுகை மேலாண்மை என்பது ஆற்றுப் படுகைகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், ஓடைகள், நிலத்தடி நீர், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளின் மேலாண்மை, பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான திட்டமாகும். இந்தியாவின் சிக்கலான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர் கட்டமைப்புகளில் வெள்ளம், அரிப்பு, சீரற்ற நீர் விநியோகம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சவால்களை எதிர்கொள்ள படுகை அளவிலான திட்டமிடல் அவசியமாகிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை நதி புத்துயிரூட்டல் துறையின் மூலம் மத்திய அரசுத் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் மூன்று முக்கிய அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. முதலாவதாக, பிரம்மபுத்திரா வாரியம் வடகிழக்கு பிராந்தியத்தில் வெள்ள மேலாண்மை, கரை அரிப்பு தடுப்பு, வடிகால் மேம்பாடு போன்ற படுகை அளவிலான திட்டமிடலை மேற்கொள்கிறது. அசாமின் மஜுலி தீவு பாதுகாப்பு போன்ற நதி நீர் அரிப்பு தடுப்புப் பணிகளையும், பழங்குடி மக்களின் பாரம்பரிய நீர் மேலாண்மைப் பயிற்சிகளை அறிவியல் முறையில் மேம்படுத்துவதையும் இது ஆதரிக்கிறது. இரண்டாவதாக, மத்திய நீர் ஆணையம் சிந்து, பிரம்மபுத்திரா, பராக், தீஸ்தா ஆற்றுப்படுகைகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கிறது. இது பாசனத் திறன் விரிவாக்கம், நீர் மின் உற்பத்தி, மேம்பட்ட வெள்ள மேலாண்மைக்கு வழிவகுக்கும். மூன்றாவதாக, தேசிய நதி மேம்பாட்டு முகமை தேசிய அளவிலான நதி நீர் இணைப்புத் திட்டங்களின் கீழ் 30 நதிகள் இணைப்புத் திட்டங்களைக் கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது.

தேசிய நீர் பாதுகாப்பு, எல்லை கடந்த நதி மேலாண்மை, வடகிழக்கு பிராந்தியத்தின் வெள்ள பாதிப்புகள், இமயமலை ஆறுகளின் நீர் மின் திறன் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. ஜம்மு காஷ்மீர், லடாக், சிக்கிம், மிஸோரம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற நிதி, தொழில்நுட்பத் திறன் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது. கடந்த காலங்களில் பீகாரின் கோசி-மேச்சி மாநில அளவிலான நதி இணைப்பு உள்ளிட்ட 15 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தொடர்ச்சியான செயலாக்கம் பருவநிலை மாறுபாடு, மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரித்து வரும் நீர்தேவை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது மேம்பட்ட நீர் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, நாடு தழுவிய சமநிலையான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158231&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159916) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu , Marathi , Bengali , Gujarati , Kannada , Malayalam