Social Welfare
இந்திய பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல்
Posted On:
18 APR 2026 10:29AM
நாட்டின் பன்முகக் கலாச்சார அடையாளத்தின் சான்றுகளாக விளங்கும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிக பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியுள்ள இந்தத் தொன்மைச் சின்னங்கள் வெறும் கடந்தகால எச்சங்கள் அல்ல, அவை தலைமுறைகளை இணைக்கும் கூட்டு நினைவகங்கள், மரபுசார் அறிவு ஆகியவற்றின் அடையாளங்களாகும். கடந்த பத்தாண்டுகளில் பாரம்பரியப் பாதுகாப்பானது சுற்றுலா மேம்பாடு, உள்ளூர் வாழ்வாதாரம், கலாச்சார, தூதரக உறவுகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தேசத்தின் சக்தியின் ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்தியாவின் உலகளாவிய பாரம்பரிய அங்கீகாரம் குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்து, அண்மையில் இணைக்கப்பட்ட மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் உட்பட மொத்தம் 44 யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்களை கொண்டுள்ள நாடாக உருவெடுத்துள்ளது. இதில் 36 கலாச்சாரத் தலங்கள், 7 இயற்கைத் தலங்கள், 1 கலப்புத் தலம் ஆகியவை அடங்கும்.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தற்போது நாடெங்கிலும் உள்ள 3,686 மத்தியப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை வலுவான பாதுகாப்பு அமைப்புகள், அறிவியல் பூர்வமான மறுசீரமைப்பு வழிமுறைகள் மூலம் பாதுகாத்து வருகிறது. இந்திய அரசியலமைப்பின் பகுதி IV-ல் உள்ள 49-வது பிரிவு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதை அரசின் கடமையாக வரையறுத்துள்ளது. மேலும் ஏழாவது அட்டவணையின் மத்தியப் பட்டியலில் 67-வது வரிசை மத்திய அரசுக்கும், மாநிலப் பட்டியலில் 12-வது வரிசை மாநில அரசுகளுக்கும் பாரம்பரியப் பாதுகாப்பில் தெளிவான பொறுப்புகளைப் பகிர்ந்து வழங்கியுள்ளன. குடிமக்களின் கடமைகளை எடுத்துரைக்கும் அரசியலமைப்பின் பிரிவு 51-A(f) கலாச்சாரப் பாரம்பரியத்தை மதித்துப் பாதுகாப்பதைச் சமூகப் பொறுப்பாக்கியுள்ளது. பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் இடங்கள் பாதுகாப்புச் சட்டம், 1958-ன் விதிகளின் படி, நினைவுச் சின்னங்களைச் சுற்றி 100 மீட்டர் தூரம் தடைசெய்யப்பட்ட பகுதியாகவும், 200 மீட்டர் தூரம் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு கட்டுமானங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. நினைவுச் சின்னங்களின் வேதியியல், கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக 2024-25 நிதியாண்டில் 374 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாரம்பரிய உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் தொல்பொருட்களைப் பாதுகாக்கவும் 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருட்கள் இயக்கம் இதுவரை 11,406 கட்டடப் பாரம்பரிய இடங்களையும் 12.48 லட்சம் தொல்பொருட்களையும் ஆவணப்படுத்தி தேசியத் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. தொல்பொருட்கள், கலைப் பொக்கிஷங்கள் சட்டம், 1972-ன் படி தொல்பொருட்களின் கட்டாயப் பதிவு, உரிமங்கள் வழங்குதல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டு சட்டவிரோதக் கடத்தல்கள் தடுக்கப்படுகின்றன. நினைவுச் சின்னங்களை வாழ்வாதார வாய்ப்புகளாக மாற்றும் நோக்கில் 2017-ல் தொடங்கப்பட்ட பாரம்பரியத்தைத் தத்தெடுத்தல் திட்டம் 2023-ம் ஆண்டில் ‘பாரம்பரியத்தைத் தத்தெடுத்தல் 2.0’ ஆக மறுசீரமைக்கப்பட்டு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதிப் பங்களிப்புடன் பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்துள்ளது. இதன் கீழ் செங்கோட்டை, ஆக்ரா கோட்டை, குதுப் மினார், அஜந்தா குகைகள் போன்ற இடங்களில் ‘நினைவுச் சின்ன தோழர்கள்’ மூலம் தூய்மை, வழிகாட்டிகள், விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மியூசியம் கிராண்ட் திட்டம் மூலம் அருங்காட்சியகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதுடன், கோனார்க், கஜுராஹோ, மொதேரா நடன விழாக்கள், சிதம்பர நாட்டியாஞ்சலி போன்ற கலாச்சார விழாக்கள் மூலம் உள்ளூர் கைவினைக்கலைஞர்கள், விருந்தோம்பல் துறையைச் சேந்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
தொல்பொருள் ஆவணப்படுத்துதல் பணிகளில் பாரம்பரிய முறைகளுடன் நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமான முப்பரிமாண வரைபடங்களை உருவாக்க லிடார் ஸ்கேனிங், ஜிஐஎஸ் அடிப்படையிலான வரைபடங்கள், ட்ரோன் ஆய்வுகள் ஆகியவை பயன்படுத்தப்படுவதுடன், தரவு மேலாண்மையை வலுப்படுத்தச் செயற்கை நுண்ணறிவுத் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நினைவுச் சின்னங்களின் சிதைந்த வடிவங்களைக் கண்டறிய ஆய்வகங்களில் மைக்ரோஸ்கோப்பி, ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி, எஃப்டிஐஆர், எக்ஸ்ஆர்எஃப், டிஜிஏ போன்ற வேதியியல் பகுப்பாய்வு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் பேரழிவிற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையும் சென்னை ஐஐடி-யும் புவிநுட்பக் குழுவும் இணைந்து ஸ்பெக்ட்ரல் அலைகளின் மல்டி-சேனல் பகுப்பாய்வு போன்ற சோதனை முறைகள் மூலம் அதன் அடித்தளத்தை வலுப்படுத்தியது பொறியியல் கூட்டுறவுக்குச் சிறந்த சான்றாகும். பொதுமக்கள் இணைய வழியில் முப்பரிமாண/மெய்நிகர் முறையில் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள இந்தியக் கலாச்சார இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில், வலுவான கொள்கை ஆதரவுகள் மூலம் பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன் 2047-ம் ஆண்டுக்குள் வலுவான பாரம்பரியக் கட்டமைப்பைக் கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான உந்துதலை இவை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158246&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159915)
आगंतुक पटल : 22
Provide suggestions / comments