Farmer's Welfare
மதிப்பு மிக்க பயிர்கள் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல்
கடற்கரைகள் முதல் இமயமலை நிலப்பரப்பு வரை
Posted On:
19 APR 2026 11:12AM
விவசாயத் துறையின் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான பயிர் பல்வகைப்படுத்தும் முறைகளை வழங்குவதில் தோட்டக்கலைத் துறை மிக முக்கியத் தூணாக விளங்குகிறது. விரைவான பொருளாதார மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்தியாவில், விவசாயக் குடும்பங்கள் தங்களின் வருமானத்தை இழக்காமல் வாழ்வாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சமூகப் பாதுகாப்பு வளையமாக உயர் மதிப்புமிக்க பயிர்கள் திகழ்கின்றன. இவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு பட்ஜெட்டில் கடலோர நிலப்பரப்புகள், வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேசங்களில் உயர் மதிப்பு மிக்க பயிர்களைப் பெருக்கும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருட்கள், தோட்டப் பயிர்கள் ஆகியவை பாரம்பரியப் பயிர்களை விட அதிக லாபத்தை ஈட்டுவதுடன் வேளாண் உற்பத்தியில் 37 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தத் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 27.735 கோடி டன்னிலிருந்து 37.074 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, உற்பத்தித் திறனைப் பெருக்கி 2047-ம் ஆண்டுக்குள் வலுவான விவசாயக் கட்டமைப்பைக் கொண்ட வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான பாதையை இத்திட்டங்கள் எளிதாக்குகின்றன.
கடலோரப் பிராந்தியங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேங்காய், முந்திரி, கோகோ, சந்தன மரங்களின் சாகுபடியை விரிவுபடுத்தும் வகையில் நடப்பாண்டு பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன. உலகளாவிய தேங்காய் உற்பத்தியில் 22.44 சதவீதம் பங்களிப்புடன் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இத்துறை ஒரு கோடி விவசாயிகள் உட்பட 3 கோடி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மாநில வாரியான சாகுபடிப் பரப்பில் கேரளாவும், ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழ்நாடும், உற்பத்தித் திறனில் ஆந்திரப் பிரதேசமும் முதலிடத்தில் உள்ளன. கடந்த 2024-25-ல் தென்னைப் பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து 4,349.03 கோடி ரூபாயை எட்டியுள்ளது. முந்திரி 12.05 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருடத்திற்கு 8.02 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுவதுடன், 2024-25-ல் இதன் உலகளாவிய ஏற்றுமதி மதிப்பு 36.917 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. தேங்காய், பாக்குத் தோட்டங்களுக்கு இடையே ஊடுபயிராக வளர்க்கப்படும் கோகோ சாகுபடி 32.91 ஆயிரம் மெட்ரிக் டன் ஆகவும் 2024-25-ல் இதன் ஏற்றுமதி வருவாய் 29.558 கோடி டாலரை எட்டியுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் வளரும் உயர்தர சந்தன மரச் சாகுபடியும் இத்திட்டங்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட்டு நுகர்வோர் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவமான சூழலமைப்பைப் பயன்படுத்தி அகர்வுட் எனப்படும் நறுமணப் பயிர்ச் சாகுபடியை மேம்படுத்த அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது. இந்தியாவில் உள்ள 15 கோடி அகர் மரங்களில் 90 சதவீத மரங்கள் வடகிழக்குப் பகுதிகளிலேயே பயிரிடப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மட்டும் இத்துறை ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் பொருளாதாரத் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அகர்வுட் சாகுபடி, பதப்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்தை நெறிப்படுத்த 2024-ம் ஆண்டில், சிஐடிஇஎஸ் சர்வதேச அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க அகர் மரக் கட்டைகளுக்கு 151,080 கிலோகிராம், அகர் எண்ணெய்க்கு 7,050 கிலோகிராம் என வருடாந்திர ஏற்றுமதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி அனுமதிகளை எளிதாக்க இச்செயல்முறைகள் அனைத்தும் வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகத்தின் டிஜிட்டல் போர்ட்டலுடன் முழுமையாக இணைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இமயமலை, மலைப்பிரதேசங்களின் குளிர்ந்த தட்பவெப்ப நிலைக்கு உகந்த வால்நட், பாதாம், சில்கோசா பைன் நட்ஸ் போன்ற உயர் மதிப்பு கொண்ட ஊட்டச்சத்துமிக்க பயிர்களின் மேம்பாட்டிற்காகப் பிரத்யேகமாக புத்துயிரூட்டல் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வால்நட் உற்பத்தியில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024-25-ல் ஒட்டுமொத்த வால்நட் உற்பத்தி 3.22 லட்சம் டன்னாக உயர்ந்திருப்பதுடன், இதன் உலகளாவிய ஏற்றுமதி மதிப்பு 78 லட்சம் டாலராகப் பதிவாகியுள்ளது. நாட்டின் பாதாம் உற்பத்தி 13.94 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் 83 சதவீதம் பங்களிப்புடன் முன்னனியில் திகழ, இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டப் பழங்குடியின மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் சில்கோசா பைன் நட்ஸ் சாகுபடியும் இத்திட்டம் மூலம் பலப்படுத்தப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பிராந்திய ரீதியான உத்திகள், உற்பத்தித் திறன் மேம்பாடு மூலம் தோட்டக்கலைத் துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாகவும், 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பான விவசாயக் கட்டமைப்பைக் கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடையவும் வழிவகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158253&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159914)
आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English