Social Welfare

விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்திற்கு

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் ஸ்மைல் திட்டம்

Posted On: 20 APR 2026 10:33AM

சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மிகவும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஸ்மைல் திட்டம் ஒரு முக்கியத் தூணாக விளங்குகிறது. விரைவான சமூகப் பொருளாதார மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்தியாவில், திருநங்கைகள், பிச்சை எடுக்கும் நபர்கள் தங்களின் உரிமைகளை இழக்காமல் தற்சார்புடன் வாழ்வதற்கும், எதிர்பாராத வாழ்வாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இத்திட்டம் ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகாலத்திற்கு 390 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மைல் திட்டம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று தொடங்கப்பட்டது. இதில் திருநங்கைகளின் நலனுக்காக 265 கோடி ரூபாயும், பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வுக்காக 125 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டின் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி 2047-ம் ஆண்டுக்குள் உள்ளடக்கிய, தற்சார்புடன் கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான பாதையை இத்திட்டம் எளிதாக்குகிறது.

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தவும் 2019-ம் ஆண்டின் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க பல்வேறு விரிவான உத்திகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. திருநங்கைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம் 9-ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுமையான நிதி ஆதரவை வழங்குகிறது. இவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தப் பிரதமரின் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (தக்‌ஷ்) கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது. குடும்பத்தால் கைவிடப்பட்ட திருநங்கைகளுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, திறன் பயிற்சிகளை வழங்க சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் 21 கரிமா கிரஹ இல்லங்கள் 17 மாநிலங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய தளத்தின் மூலம் திருநங்கைகளுக்கான சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. 2026 மார்ச் 23 நிலவரப்படி நாடெங்கிலும் 37,148 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 32,538 சான்றிதழ்களும், 32,509 அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேகமாக ஆயுஷ்மான் பாரத் டிஜி பிளஸ் மருத்துவக் காப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சை பொது, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இது பொதுவான மருத்துவச் சிகிச்சைகளுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள், ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புகள், உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட சிறப்புச் சுகாதாரத் தேவைகளையும் முழுமையாக உள்ளடக்கியுள்ளது. மருத்துவமனைகளில் இவர்களுக்கான தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கத் தனிப்பிரிவுகள், பொது கழிவறை வசதிகள், பாகுபாடற்ற கொள்கைகள் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களின் சட்டப்பூர்வப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் குற்றங்களைக் கண்காணிக்கவும் 20 மாநிலங்களில் திருநங்கைகள் பாதுகாப்புப் பிரிவுகளும், 25 மாநிலங்களில் திருநங்கைகள் நல வாரியங்களும் அமைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்கும் நபர்களை முழுமையாக மீட்டு மறுவாழ்வு அளிப்பதன் மூலம் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் 2026 மார்ச் நிலவரப்படி நாடெங்கிலும் உள்ள 181 முக்கிய நகரங்களில் உள்ளூர் மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கள ஆய்வுகள் மூலம் இதுவரை 31,055 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9,855 நபர்கள் முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாடு 9,145 நபர்களை அடையாளம் கண்டு 1,590 நபர்களுக்கு மறுவாழ்வு அளித்து முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் 3,592 நபர்களை அடையாளம் கண்டு 1,716 நபர்களுக்கும், மத்தியப் பிரதேசம் 1,772 நபர்களை அடையாளம் கண்டு 1,291 நபர்களுக்கும் மறுவாழ்வு வழங்கியுள்ளன. இம்மையங்களில் தச்சுவேலை, தையற்கலை, சமையல், மின்சார ரிக்ஷா இயக்குதல் போன்ற வாழ்வாதாரத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு 4,021 நபர்களுக்குக் கூலி வேலைவாய்ப்புகளும், 1,556 நபர்களுக்குச் சுயவேலைவாய்ப்புகளும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158259&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159913) आगंतुक पटल : 59
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Bengali , Urdu , हिन्दी , Gujarati , Kannada