Farmer's Welfare
நாட்டின் உணவுப் பதப்படுத்துதல் துறை கட்டமைப்பை மேம்படுத்துதல்
உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்
Posted On:
21 APR 2026 10:42AM
இந்தியப் பொருளாதாரத்தின் முதன்மையான உந்துசக்தியாக விளங்கும் உணவுப் பதப்படுத்துதல் துறை விவசாயத் துறையையும் உற்பத்தித் துறையையும் இணைக்கும் ஒரு முக்கியப் பாலமாகத் திகழ்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் இத்துறை அவசியமாகிறது. பொருளாதார ஆய்வு 2025-26-ன் படி, உணவுப் பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த மதிப்புச் சேர்க்கை 2014-15-ல் 1.34 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023-24-ல் 2.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விவசாய ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பங்கு 2014-15-ல் 13.7 சதவீதமாக இருந்த நிலையில், 2024-25-ல் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, உற்பத்தித் திறனைப் பெருக்கி 2047-ம் ஆண்டுக்குள் வலுவான உணவுச் சூழல் அமைப்பைக் கொண்ட வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தேசிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இத்துறை ஒரு முக்கிய உந்துசக்தியாக விளங்கும்.
மத்திய அரசால் 2021-ம் ஆண்டு மார்ச் 31 அன்று அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பதப்படுத்துதல் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் 2021-22 முதல் 2026-27 வரையிலான ஆறு ஆண்டுகாலத்தில் 10,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் உலகளாவிய சந்தையில் இந்திய உணவுப் பொருட்களை முன்னணி பிராண்டுகளாக மாற்றுவதற்கும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகை செய்கிறது. இத்துறையின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின் கீழ் 2026-27-ல் 33,494 கோடி ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் எஞ்சிய சேமிப்பு நிதியிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2022-23-ல் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறுதானிய பொருட்களுக்கான பிரத்யேக ஊக்குவிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பன்முகக் கட்டமைப்பு மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் நிதியுதவிகளை வழங்குகிறது. முதல் பிரிவின் கீழ் சமைக்கத் தயாராக உள்ள அல்லது உண்ணத் தயாரான உணவுப் பொருட்கள்; பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள்; கடல்சார் பொருட்கள்; மொஸரெல்லா சீஸ் ஆகிய நான்கு முக்கியப் பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாம் பிரிவின் கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் புதுமையான இயற்கை வேளாண் பொருட்கள், கோழி இறைச்சி, முட்டைப் பொருட்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. மூன்றாம் பிரிவின் கீழ் இந்திய பிராண்டுகளை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்துதல், விளம்பரச் செலவுகளில் 50 சதவீதத் தொகை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கப்படுகிறது. இத்தகைய நிதி உதவிகள் மூலம் இத்துறை 2026 பிப்ரவரி மாத நிலவரப்படி நாடு முழுவதும் 274 இடங்களில் 165 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள் 2,162.55 கோடி ரூபாய் ஊக்குவிப்புத் தொகையைப் பெற்றுள்ளதுடன் இத்துறையில் 9,207 கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதன் மூலம் இத்திட்டம் உணவுப் பதப்படுத்துதல் திறனை ஆண்டுக்கு 34 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 165 நிறுவனங்களில் 69 நிறுவனங்கள் குறு, சிறு, நடுத்தரப் பிரிவைச் சார்ந்தவையாக இருப்பதுடன், விநியோகச் சங்கிலியுடன் இணைந்த 40 ஒப்பந்த உற்பத்தி அலகுகளும் இப்பிரிவின் கீழ் பயன் பெற்றுள்ளன. இத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 13.23 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதுடன், பயனாளிகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி விற்பனை 89,053.44 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இத்திட்டம் இத்துறையில் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அதனைக் கடந்து 2026 பிப்ரவரிக்குள் 3.39 லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் உத்திகள், வலுவான கொள்கை ஆதரவுகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், உலகளாவிய உணவுப் பதப்படுத்துதல் துறை மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான பாதையை இத்திட்டங்கள் எளிதாக்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158283&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159912)
आगंतुक पटल : 2
Provide suggestions / comments