Economy
அனைவருக்கும் காப்பீடு: சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
Posted On:
23 APR 2026 6:15PM
வலுவான பொருளாதாரக் கட்டமைப்பிற்குத் தேவையான பாதுகாப்பு முறைகளை வழங்குவதில் காப்பீட்டுத் துறை மிக முக்கியத் தூணாக விளங்குகிறது. விரைவான பொருளாதார மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்தியாவில், குடும்பங்கள் தங்களின் சேமிப்புகளை இழக்காமல் எதிர்பாராத நிதி நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சமூகப் பாதுகாப்பு வளையமாக காப்பீடு திகழ்கிறது. இந்த முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 2047-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான ஆயுள், சுகாதார, சொத்துக் காப்பீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். சுவிஸ் ரீ சர்வதேச அறிக்கையின்படி, இந்தியா தற்போது உலகளாவிய காப்பீட்டுச்சந்தையில் பெயரளவு பிரீமியம் வருவாயில் 10-வது பெரிய நாடாகத் திகழ்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் காப்பீட்டுத் திறன் 3.7 சதவீதமாக உள்ளது. குடும்பங்களின் நிதிச் சொத்துக்களில் காப்பீடு, ஓய்வூதிய நிதிகளின் பங்கு 2018-19-ல் 28.6 சதவீதத்திலிருந்து 2024-25-ல் 29.6 சதவீதமாக உயர்ந்துள்ளது மக்களின் அதிகரித்து வரும் நிதிசார் விழிப்புணர்வைக் காட்டுகிறது.
இத்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் காப்பீட்டுப் பரவலை விரைவுப்படுத்தவும் 2025-ம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்புதிய சட்டங்களின்படி இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நீண்டகால சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் வழிவகுக்கும். எளிதாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் காப்பீட்டு இடைத்தரகர்களுக்கான ஒருமுறை பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பங்கு மாற்றங்களுக்கான ஒப்புதல் வரம்பு 1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு மறுகாப்பீட்டு நிறுவனங்களுக்கான நிகரச் சொந்த நிதித் தேவை 5,000 கோடி ரூபாயிலிருந்து 1,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அனைத்துத் தனிநபர் ஆயுள் காப்பீடுகள், குடும்பங்களின் சுகாதாரக் காப்பீடுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது காப்பீட்டுச் செலவைக் குறைத்து ஏழை, நடுத்தரப் பிரிவினர் எளிதாகக் காப்பீடுகளைப் பெற வழிவகை செய்கிறது. விதிகளுக்குப் புறம்பான செயல்பாடுகளுக்கான அதிகபட்ச அபராதம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரக் காப்பீட்டுத் துறையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு நெறிமுறைச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் முந்தைய மருத்துவ விவரங்களைக் காரணம் காட்டிப் புகார்களை நிராகரிக்க முடியாத மொராட்டோரியம் கால வரம்பு 8 ஆண்டுகளிலிருந்து 60 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்புக் காலம் கொண்ட பாலிசிகளுக்கு 30 நாட்கள் நிலையான இலவச ஆய்வுக் காலம் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாலிசிகளைப் புதுப்பித்துக் கொள்ளும் உத்தரவாத உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், முந்தைய உரிமைகோரல்களைக் காரணம் காட்டிப் புதுப்பித்தலை மறுக்கக் கூடாது என விதிகள் தெளிவுபடுத்துகின்றன. எந்தவொரு உரிமைகோரலும் இல்லாத ஆண்டுகளுக்காகப் பிரீமியத் தள்ளுபடி அல்லது கூடுதல் காப்பீட்டுத் தொகை வடிவில் நோ-கிளைம் போனஸ் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் அல்லோபதி மருத்துவத்திற்கு இணையான காப்பீட்டுச் சலுகைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாலிசிகளை பாதியிலேயே ரத்து செய்தால் பயன்படுத்தப்படாத காலத்திற்கான பிரீமியம் தொகையைப் பாலிசிதாரர்களுக்குத் திரும்ப வழங்க விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு மத்திய அரசால் நாடெங்கும் செயல்படுத்தப்பட்டு வரும் சமூகக் காப்பீட்டுத் திட்டங்கள் பல மைல்கற்களை எட்டியுள்ளன. எளிய முறையில் ஆண்டுக்கு 436 ரூபாய் பிரீமியத்தில் இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதமரின் ஆயுள்காப்பீட்டுத் திட்டம் 26.88 கோடிப் பதிவுகளுடன், 10.45 லட்சம் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளது. வேளாண் துறையில் இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 93.98 கோடி விண்ணப்பங்களைப் பெற்று, விவசாயிகளுக்கு 1,94,505.9 கோடி ரூபாய் இழப்பீடுகளை வழங்கியுள்ளது. ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவச் சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 43.52 கோடிப் பயனாளர் அட்டைகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. இத்திட்டம் அண்மையில் 70 வயது கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் பிரீமியத்தில் விபத்துக் காப்பீடு வழங்கும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் 57.11 கோடிப் பதிவுகளைக் கொண்டுள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் உத்திகள், வலுவான கொள்கை ஆதரவுகள் மூலம் கிராமப்புற, நகர்ப்புற எளிய மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதுடன், 2047-ம் ஆண்டுக்குள் வலுவான காப்பீட்டுக் கட்டமைப்பைக் கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான பாதையை இத்திட்டங்கள் எளிதாக்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158322&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159911)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments