Social Welfare

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

கிராமப்புற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்

Posted On: 24 APR 2026 11:47AM

இந்தியாவின் அடித்தட்டு அளவில் ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமப்புற சுயராஜ்யத்தின் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளன. அதிகாரப் பரவலாக்கம் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதற்காக நாடெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய 1993--ம் ஆண்டில் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1992 நடைமுறைக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கிறது. இத்திருத்தத்தின் முக்கிய விதிகள் இந்திய அரசியலமைப்பின் பகுதி-IX-ல் விரிவாக வகுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மேம்பாடு, குடிநீர் வழங்கல், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்ய இத்துறை வழிவகுக்கிறது. கிராமப்புற உள்கட்டமைப்பை வலுவான முறையில் மேம்படுத்தி 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான தேசிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்குப் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன.

நாடெங்கிலும் உள்ள உள்ளூர் நிர்வாகம் தற்போது 2.5 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகள், அவற்றின் 24.04 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பன்முகத்தன்மையுடன் நிர்வகிக்கப்படுகின்றன. இவர்களில் 49.75 சதவீதம் பெண் பிரதிநிதிகள் என்பது உள்ளடக்கிய பாலினச் சமத்துவ சமூக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு சான்றாகும். உள்ளூர் ஜனநாயகத்தின் நிரந்தரப் பேரவையாக விளங்கும் கிராம சபை, வாக்காளர்கள் அனைவரும் நேரடியாகப் பங்கேற்றுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியாக 1957 ஆம் ஆண்டின் பல்வந்த் ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகளின்படி கிராமம், ஒன்றியம், மாவட்ட அளவிலான மூன்றடுக்கு பஞ்சாயத்து கட்டமைப்பு உருவாக்கப்பட்டு 1959-ல் ராஜஸ்தான் மாநிலம் இதனை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியது. பழங்குடியின மக்களின் சுயராஜ்ய உரிமைகளைப் பாதுகாக்கப் பஞ்சாயத்துகள் சட்ட நீட்டிப்புச் சட்டம், 1996 ஒடிஷா தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் V-வது அட்டவணைப் பகுதிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டக் இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு நடைமுறை மையம் நிறுவப்பட்டுள்ளது.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு முன்னோடி டிஜிட்டல் தொழில்நுட்பத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2021 ஏப்ரல் 24 அன்று தொடங்கப்பட்ட ஸ்வமித்வா திட்டம் ட்ரோன், ஜிபிஎஸ் தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புற வீடுகளை வரைபடமாக்கி 3.29 லட்சம் கிராமங்களில் களப்பணிகளை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் 1.87 லட்சம் கிராமங்களுக்கு 3.10 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டு 2.65 கோடி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கிராம சபைக் கூட்டங்களின் ஒலி-ஒளி பதிவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 23 பிராந்திய மொழிகளில் ஆவணப்படுத்த பாஷினி தளத்துடன் இணைந்த சபாசார் செயலி பயன்படுத்தப்படுகிறது. திட்டமிடல், நிதி மேலாண்மையை உடனுக்குடன் கண்காணிக்க இ-கிராமஸ்வராஜ் இணையதளம் பொது நிதி மேலாண்மை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.50 லட்சத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகள் 1.6 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு இணைய வழியில் உடனுக்குடன் கட்டணங்களைச் செலுத்துகின்றன. மேலும் இத்தளத்தின் கீழ் உள்ள கிராம ஊர்ஜா ஸ்வராஜ் டிஜிட்டல் திரை, 2,020 பஞ்சாயத்துகளில் சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்புகளை நேரடியாகக் கண்காணிக்கிறது. பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்க ‘எனது பஞ்சாயத்து’ செயலியும் பயன்பாட்டில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதித் தற்சார்பை நிலைநாட்டும் நோக்கில் மத்திய அரசு நிதிப் பகிர்வை பெருமளவில் அதிகரித்துள்ளது. 15-வது நிதி ஆணையக் காலத்தில் 2.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கிராமப்புற அமைப்புகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, 16-வது நிதி ஆணையக் காலத்தில் 84.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைச் சேவைகளுக்கான நிபந்தனைக்குட்பட்ட நிதியாகவும், உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்கப் பொது நிதியாகவும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 211 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 2016-17-ல் 87,765 கோடி ரூபாயிலிருந்து நடப்பு நிதியாண்டில் 2.73 லட்சம் கோடி ரூபாயாகப் அதிகரித்துள்ளது. தேசிய கிராம சுயராஜ்ஜிய திட்டத்தின் கீழ் 45 லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 1,48,904 பெண் பிரதிநிதிகளுக்கு பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ், விளையாட்டு சார்ந்த சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வலுவான உள்கட்டமைப்பு அணுகுமுறைகள், பொறுப்பான டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவை நாட்டின் முன்னேற்றம் என்பது அதிகாரம் பெற்ற, தற்சார்புடன் கூடிய கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158331&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159910) आगंतुक पटल : 37
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada , Malayalam