Social Welfare
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் முறையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு
Posted On:
25 APR 2026 10:55AM
இந்தியாவின் திட்டமிடல், நிர்வாகம், உள்ளடக்கிய கொள்கை உருவாக்கத்தின் மிக முக்கியமான உன்னத அடித்தளமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விளங்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார மாற்றங்களை மதிப்பிடவும், எதிர்காலத் தேவைகளைக் கணிக்கவும் உதவும் இந்த மாபெரும் நிர்வாகப் பணி, வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் முறையில் மொபைல் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவில் கணக்கெடுப்பு குறித்த ஆரம்பக்காலக் குறிப்புகள் கி.மு 321 முதல் 296 காலகட்டத்திய கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூலிலும், பின்னர் பேரரசர் அக்பர் காலத்தில் அபுல் பாசல் எழுதிய அயினி அக்பரி நூலிலும் காணப்படுகின்றன. நவீன காலத்தின் முதலாவது கணக்கெடுப்பு 1865 முதல் 1872 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1881-ல் முதலாவது ஒருங்கிணைந்த முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அன்று முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்செயல்முறை தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இந்திய வரலாற்றின் 16-வது, சுதந்திரத்திற்குப் பிந்தைய 8-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகவும் அமையும். உலகளவில் மிகப்பிரமாண்டமான புள்ளிவிவர மேலாண்மை கட்டமைப்பைக் கொண்டு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இத்திட்டம் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும்.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மத்தியப் பட்டியலில் 69-வது வரிசையில் இடம்பெற்றுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, மத்திய அரசின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முழுமையான ஒத்துழைப்போடு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இச்செயல்முறையானது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-ன் கீழ், 1990-ம் ஆண்டின் விதிகளின்படி சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது. இச்சட்டத்தின் 15-வது பிரிவின் கீழ் பொதுமக்களால் வழங்கப்படும் தனிநபர் விவரங்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தத் தரவுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட மாட்டாது, நீதிமன்றங்களில் சாட்சியமாகப் பயன்படுத்தப்பட மாட்டாது, எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது. இத்தகைய உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இம்மாபெரும் டிஜிட்டல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு 11,718.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவிட்-19 காரணமாக 2021-ல் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதால், கணக்கெடுப்புப் பணிகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து, அதிநவீனத் தொழில்நுட்ப உத்திகளுடன் இந்தப் புதிய கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது.
இம்முறை கணக்கெடுப்புப் பணிகள் நாடு முழுவதும் சீரான முறையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல், வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலமும் தங்களின் நிர்வாக வசதிக்கு ஏற்ப 30 நாட்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைத் தேர்வு செய்து இம்முதற்கட்டப் பணிகளைச் செயல்படுத்தலாம். இக்கட்டத்தின் மூலம் வீடுகளின் தற்போதைய நிலை, குடிநீர் வசதி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, கழிவறை வசதிகள், கணினி, இணைய இணைப்பு, வாகனங்கள் உள்ளிட்ட குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்பான 34 முக்கியக் கேள்விகள் மூலம் விரிவான தரவுகள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்டமாக, ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கிடும் முதன்மையான பணி 2027 பிப்ரவரி மாதத்தில் நாடெங்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் 2025 ஏப்ரல் 30 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, இந்த இரண்டாம் கட்டத்தில் ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினருடன் சேர்த்து ஒட்டுமொத்த சாதி வாரியான விரிவான கணக்கெடுப்பும் முழுமையாக மேற்கொள்ளப்படும். பனிப்பொழிவு அதிகம் உள்ள லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த இரண்டாம் கட்டப் பணிகள் 2026 செப்டம்பர் மாதத்திலேயே முன்கூட்டியே நடத்தப்படும். இத்திட்டத்திற்கான பொதுவான கணக்கெடுப்புக் காலம் 2027 மார்ச் 1 அன்று நள்ளிரவு (பூஜ்ஜியம் மணி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக இக்கணக்கெடுப்புப் பணிகளை மிகக்குறுகிய காலத்தில் துல்லியமாக நிறைவு செய்யப் பல்வேறு முன்னோடியான டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தச் செயல்முறைகளையும் உடனுக்குடன் கண்காணித்து மேலாண்மை செய்ய சிஎம்எம்எஸ் இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டாரம், மாவட்டம், மாநில, தேசிய அளவிலான அதிகாரிகள் களப்பணிகளின் முன்னேற்றத்தை ஒருங்கிணைந்த கணினித் திரை வழியாக நேரடியாகக் கண்காணிக்க முடியும். கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று தரவுகளைச் சேகரிக்க 16 பிராந்திய மொழிகளில் இயங்கும் பாதுகாப்பான மொபைல் செயலி பயன்படுத்தப்படும். இது காகிதப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதுடன் தரவுகளை நேரடியாகக் கணினிச் சேவையகத்திற்கு அனுப்பும். பொறுப்பு அதிகாரிகள் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி எவ்வித விடுபடல்களும், இரட்டைப் பதிவுகளும் இன்றி டிஜிட்டல் வரைபடங்களை உருவாக்க எச்எல்பிசி தளம் உதவுகிறது. பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணைய வழியில் பதிவு செய்ய ஒரு சிறப்புக் குறைதீர்ப்பு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 15 நாட்கள் கொண்ட தற்காலிக காலப்பகுதியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து ஒரு தனித்துவமான அடையாளக் குறியீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். களத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் இந்த அடையாளக் குறியீட்டைக் காண்பித்து விவரங்களை மிக எளிதாக உறுதி செய்ய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மாபெரும் பணியை நாடெங்கிலும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்த ஏதுவாக 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நிர்வாக அமைப்புகளின் எல்லைகளும் அப்படியே தொடரும் வகையில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பு 2011 கணக்கெடுப்பில் இருந்த 35 மாநிலங்களிலிருந்து தற்போது 36 ஆகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை 640 இலிருந்து 784 ஆகவும் விரிவடைந்துள்ளது. இதேபோல் வட்டாரங்கள் 5,990 இலிருந்து 7,092 ஆகவும், சட்டரீதியான நகரங்கள் 4,041 இலிருந்து 5,128 ஆகவும், கணக்கெடுப்பு நகரங்கள் 3,892 இலிருந்து 4,580 ஆகவும் உயர்ந்துள்ள வேளையில், கிராமங்களின் எண்ணிக்கை 6,40,932 இலிருந்து 6,39,902 ஆகக் குறைந்துள்ளது. இந்த விரிவான நிர்வாக அமைப்புகளில் பணிகளைச் சீராக மேற்கொள்ள 31 இலட்சம் கணக்கெடுப்பாளர்களும், மேற்பார்வையாளர்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயர் அதிகாரிகளும் முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்க 80,000-க்கும் மேற்பட்ட பயிற்சிப் பாசறைகள் நடத்தப்படுகின்றன. உள்ளூர் அளவில் தொழில்நுட்ப மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள 18,600 தொழில்நுட்ப வல்லுநர்கள் 550 நாட்களுக்குப் பணியமர்த்தப்படவுள்ளனர். இதன் மூலம் இத்துறையில் சுமார் 1.02 கோடி மனித வேலைநாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி அதிநவீனத் தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் இறுதிச் சேமிப்பு வரை முழுமையாகக் குறியாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். இந்தத் தரவு மையங்கள் நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்பாக அறிவிக்கப்பட்டு உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத் திட்டங்கள், உணவு, குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், போக்குவரத்து, கல்வித் தேவைகளுக்கான துல்லியமான பட்ஜெட் உத்திகளை வகுப்பதற்கும், தகுதியான பயனாளிகளுக்குச் சமூக நலத்திட்டங்களை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 மிக முக்கியத் தரவு ஆதாரமாக விளங்கும். பின்தங்கிய பகுதிகளின் தேவைகளை நிறைவு செய்யவும், வளங்களைச் சரியான முறையில் பகிர்ந்தளிக்கவும், காலத்திற்கேற்ற முறையில் சமூகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்தகைய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு அணுகுமுறைகள், பொறுப்பான டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவை சர்வதேச அரங்கில் தேசத்தின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158344&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159909)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada