• Sitemap
  • Advance Search
Infrastructure

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து: ஒரு பயணம்

Posted On: 27 APR 2026 11:24AM

இந்தியாவின் ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், காயல்களை உள்ளடக்கிய உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் சரக்குப் போக்குவரத்திற்கான செலவைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வழித்தடங்களை வழங்குகின்றன. சாலை, ரயில் போக்குவரத்தை விட எரிசக்தி நுகர்வை முறையே 3 முதல் 6 மடங்கு, 2 மடங்கு வரை குறைக்கும் திறன் கொண்ட இத்துறை கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 2,000 டன் சரக்குடன் கூடிய உள்நாட்டுக் கப்பல், 16 டன் திறன் கொண்ட 125 லாரிகளுக்கு இணையான பணியைச் செய்கிறது. சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், கனரகப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் இத்துறை அவசியமாகிறது. கடல்சார் அமிர்த கால தொலைநோக்குப் பார்வையின் கீழ், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பங்கை 2 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தவும், சரக்கு கையாளுதலை 2030- க்குள் 2,000 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், 2047 -ம் ஆண்டுக்குள் 5,000 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகச் சிறந்த உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்டு 2047 -ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இத்துறை ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும்.

நடப்பாண்டு பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழித்தடங்களைச் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், சாலைப் போக்குவரத்திலிருந்து நீர்வழிப்போக்குவரத்திற்கு சரக்குகளை மாற்ற கடலோரச் சரக்கு போக்குவரத்து ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வலுவான கொள்கை ஆதரவு உள்நாட்டு நீர்வழிகள், கடலோரக் கப்பல் போக்குவரத்தின் ஒட்டுமொத்தப் பங்கை 6 சதவீதத்திலிருந்து 2047 -ம் ஆண்டுக்குள் 12 சதவீதமாக உயர்த்தும். இதன் ஒரு பகுதியாக ஒடிஷாவில் உள்ள தால்செர், அங்குல் ஆகிய கனிம வளம் மிக்கப் பகுதிகளை கலிங்க நகர் தொழிற்பேட்டைகளுடனும், பாரதீப், தாம்ரா துறைமுகங்களுடனும் இணைக்க தேசிய நீர்வழித்தடம்-5 செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்க பிராந்திய அளவில் சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும். வாரணாசி, பாட்னா ஆகிய நகரங்களில் உள்நாட்டு நீர்வழிகளுக்கான பிரத்யேகக் கப்பல் பழுதுபார்க்கும் கட்டமைப்புகள் நிறுவப்படும். உள்நாட்டு நீர்வழிகளை முறைப்படுத்தி மேம்படுத்த 1986 அக்டோபர் 27 அன்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் நொய்டாவில் அமைந்துள்ளது.

நீர்வழிப்போக்குவரத்தைச் சீராக்க 95.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2024-25 முதல் 2026-27 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு ஜல்வாஹக் சரக்கு ஊக்குவிப்புத் திட்டம், 2024 செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இந்தியா-பங்களாதேஷ் இடையே தேசிய நீர்வழித்தடம்-1, தேசிய நீர்வழித்தடம் -2, தேசிய நீர்வழித்தடம் -16 ஆகிய பாதைகளில் கப்பல் இயக்குவதற்கு ஆகும் செலவில் 35 சதவீதம் வரையில் மானியமாக வழங்குகிறது. இது ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் 17 சதவீதத்தை நீர்வழிக்கு மாற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம் உள்நாட்டு நீர்வழிகளை ஒரு நிலையான மக்கள் போக்குவரத்து அமைப்பாக மாற்றி நகர்ப்புறப் போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 819 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் கொச்சியில் உள்ள 10 தீவுகளை 38 நவீன முனையங்கள் மூலம் 15 வழித்தடங்களில் 78 கிலோமீட்டர் தூரத்திற்கு இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு நீர்வழிப்பாதைகளில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்துச் சட்டம், 2021 கொண்டு வரப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் 9 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட கடலோரக் கப்பல் போக்குவரத்துச் சட்டம், 2025 இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கடலோர, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டத்தை வெளியிட வழிவகை செய்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு 2024 ஜனவரி 8 அன்று ஹரித் நௌகா உள்நாட்டுக் கப்பல் பசுமை நிலைமாற்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இது நீர்வழிப் பயணியர் போக்குவரத்தின் கார்பன் தீவிரத்தன்மையை 2030-க்குள் 30 சதவீதமும், 2047-ம் ஆண்டுக்குள் 70 சதவீதமும் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதுடன், 2033-க்குள் 50 சதவீதப் பயணியர் படகுகளையும், 2045-க்குள் 100 சதவீதப் படகுகளையும் பசுமை எரிபொருளுக்கு மாற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 1,000 உள்நாட்டுக் கப்பல்களைப் பசுமை மயமாக்கவும், 2047-ம் ஆண்டுக்குள் அனைத்து இந்திய நீர்நிலைகளிலும் 100 சதவீதம் பசுமைக் கப்பல்களை மட்டுமே இயக்கவும் இது திட்டமிட்டுள்ளது. நதி வழிச் சுற்றுலாவை மேம்படுத்த 45,000 கோடி ரூபாய் முதலீட்டு உறுதிப்பாட்டுடன் நதி வழி சொகுசுக் கப்பல் சுற்றுலா சாலைத் திட்டம்-2047 தொடங்கப்பட்டுள்ளது. இதில் 35,000 கோடி ரூபாய் சொகுசுக் கப்பல்களுக்காகவும், 10,000 கோடி ரூபாய் முனைய உள்கட்டமைப்பிற்காகவும் 2047-ம் ஆண்டுக்குள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் தேசிய நீர்வழித்தடங்களில் கப்பல் பயணங்களின் எண்ணிக்கை 2023-24 இல் 371 இல் இருந்து 2024-25 இல் 443 ஆக உயர்ந்துள்ளதுடன் சொகுசுக் கப்பல்களின் எண்ணிக்கை 2013-14-ல் 3 இல் இருந்து 2024-25-ல் 25 ஆக விரிவடைந்துள்ளது. அசாமின் குவஹாத்தி, நியாமதி, விஸ்வநாத் காட், சில்காட், குய்ஜான் ஆகிய இடங்களில் புதிய முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் தொழில்நுட்பத் தரவு மேலாண்மையை வலுப்படுத்தப் பல்வேறு டிஜிட்டல் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தால் உருவாக்கப்பட்ட கார்-டி இணையதளம் சரக்கு, சொகுசுக் கப்பல்களின் போக்குவரத்துத் தரவுகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. நீர்வழிப் தடங்களின் குறைந்தபட்ச ஆழம் குறித்த தகவல்களைத் தரவு மேலாண்மை செய்ய லாடிஸ் தளம் பயன்படுகிறது. கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யக் கப்பல் கண்காணிப்பு, வானிலை சென்சார்களை ஒருங்கிணைக்கும் நதிகள் தகவல் சேவை எனப்படும் ஆர்ஐஎஸ் தொழில்நுட்பம் வாரணாசி, சாகர்கஞ்ச், ஹல்தியா ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. கப்பல் உரிமையாளர்கள், மாலுமிகளுக்குப் பயன்படும் வகையில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு வசதியுடன் ‘பாணி’ மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் நீர்வழிகளில் முனையங்கள் அமைக்கத் தடையில்லாச் சான்றிதழ் பெற ஜல் சம்ரித்தி தளம் உதவுகிறது. கப்பல் பதிவு, ஊழியர் சேவைகள், குறைதீர்க்கும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஜல்யான், நாவிக் தளம் செயல்படுகிறது. 2026 ஏப்ரல் நிலவரப்படி இத்தளத்தில் 9,296 கப்பல் பதிவுகள், 233 ஆய்வு விண்ணப்பங்கள் செயலாக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒருங்கிணைந்த கட்டமைப்பு, டிஜிட்டல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் நீர்வழிகள் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகளாக உருவெடுத்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158354&ModuleId=3&reg=3&lang=1

***

PD/RJ

(Explainer ID: 159906) आगंतुक पटल : 6
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada