Economy
12 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமரின் ஜன் தன் திட்டம்: அனைவருக்கும் வங்கிச் சேவை, அதிகாரமளித்தல்
Posted On:
27 AUG 2026 2:06PM
பிரதமரின் ஜன் தன் திட்டம் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் நிதிசார் உள்ளடக்கப் பயணத்தின் முக்கிய அடித்தளமாக உருவெடுத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், வங்கிச் சேவை கிடைக்காத விளிம்புநிலை மக்களுக்கு முறையான வங்கிச் சேவைகள், கடனுதவி, காப்பீடு, ஓய்வூதியம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விரிவுபடுத்தியுள்ளது. பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 14.72 கோடியில் இருந்து, 2026 ஆகஸ்ட் 19 நிலவரப்படி 59.09 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெண் பயனாளிகளின் எண்ணிக்கை மட்டும் 32.92 கோடியாகும். வங்கிக் கணக்குகளில் சேமிப்பு இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது, முறையான நிதிக் கட்டமைப்பில் மக்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் நிதிசார் உள்ளடக்கத்திற்கான தேசிய இயக்கமான இந்தத் திட்டம், நிதி அணுகலை மேம்பட்ட பாதுகாப்பு, வாய்ப்புகள், பொருளாதார அதிகாரமளித்தலாக மாற்றியுள்ளது.
பரந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு நிதிசார் உள்ளடக்கம் இன்றியமையாததாகும். முறையான நிதிச் சேவைகளின் அணுகல், மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் முதலீடு செய்யவும், வாழ்வாதாரங்களை உருவாக்கவும் உதவுகிறது. பெண்களைப் பொறுத்தவரை நிதி அணுகல் அவர்களின் நிதி சார்ந்த சுதந்திரத்தையும், பொருளாதார அதிகாரத்தையும் உறுதிப்படுத்துகிறது. 2018-ம் ஆண்டில் 53.9 ஆக இருந்த இந்தியாவின் நிதிசார் உள்ளடக்கக் குறியீடு, 2026-ல் 67 ஆக உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கிக் கணக்கு' என்பதில் கவனம் செலுத்திய இத்திட்டம், 2018 முதல் 'வங்கிச் சேவையற்ற ஒவ்வொரு வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கு' என்ற இலக்கை நோக்கி விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியக் குடியுரிமைக் கொண்ட எவரும் வயது வரம்பின்றி இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகையை வங்கிக்கணக்கில் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கிளைகள் அல்லது வணிக அமைப்புகள் மூலம் எளிதில் கணக்குத் தொடங்க முடியும். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபெ டெபிட் கார்ட், ரூ.2 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு, ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி அளிக்கப்படுகிறது. பிரதமரின் ஜன்தன் கணக்குகள் மூலம், நேரடிப் பணப் பரிமாற்றம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், முத்ரா கடனுதவி ஆகியவற்றின் பலன்களைப் பெற முடியும்.
கடந்த 12 ஆண்டுகளில் ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 59.09 கோடி கணக்குகளில், கிராமப்புறங்கள், புறநகர்ப் பகுதிகளில் 45.95 கோடி கணக்குகளும், நகர்ப்புற பகுதிகளில் 13.14 கோடி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. மொத்த வைப்புத்தொகை 2015 மார்ச் மாதத்தில் ரூ.15,670 கோடியில் இருந்து, 2026 ஆகஸ்ட் 19 நிலவரப்படி சுமார் 20 மடங்கு அதிகரித்து ரூ.3,16,514 கோடியாக உயர்ந்துள்ளது. பயனாளிகளுக்கு இதுவரை 41.29 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஜன் தன் திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பொருளாதார நம்பிக்கையை வழங்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159721&ModuleId=3®=3&lang=1
****
SS/PD/RJ
(Explainer ID: 159746)
आगंतुक पटल : 14
Provide suggestions / comments