Others
எத்தியோப்பியாவுடனான இந்தியாவின் உறவுகள்
Posted On:
17 DEC 2025 6:00PM
ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு 2025 டிசம்பர் 15-18 வரை மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 16-17 தேதிகளில் எத்தியோப்பியாவிற்குச் சென்றிருந்தார். எத்தியோப்பியாவிற்கான தனது முதல் இருதரப்பு பயணமாக அவர் அடிஸ் அபாபாவை அடைந்தார். பிரதமர் மோடி, எத்தியோப்பிய பிரதமர் திரு அபிய் அகமது அலியுடன் பரந்த அளவிலான இருதரப்பு விவகாரங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியா-எத்தியோப்பியா உறவுகள் வரலாற்றுத் தொடர்புகளில் வேரூன்றியவை; மேலும் தற்கால அரசியல் ஈடுபாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பால் வலுப்பெற்று வருகின்றன. எத்தியோப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு முக்கியமான நாடு, 'பிரிக்ஸ்' அமைப்பின் உறுப்பினர், 'குளோபல் சவுத்' அமைப்பின் முக்கியப் பங்குதாரர், மேலும் இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால வளர்ச்சிப் பங்காளியாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது. அக்ஸுமைட் பேரரசின் காலத்தில் (கி.பி. 1-ஆம் நூற்றாண்டு) இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் செழித்து வளர்ந்தது. கி.பி. 6-ம் நூற்றாண்டில் இந்திய வணிகர்கள் பழங்கால 'அடுலிஸ்' துறைமுகம் வழியாக பட்டு மற்றும் நறுமணப் பொருட்களைக் கொடுத்து தங்கம் மற்றும் தந்தங்களை வர்த்தகம் செய்தனர். 16-ம் நூற்றாண்டில், கோவாவைச் சேர்ந்த இந்தியர்கள் எத்தியோப்பிய ராஜா ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராட உதவ போர்த்துகீசிய படைகளுடன் சென்றனர். எத்தியோப்பியாவில் இத்தாலியின் ஆக்கிரமிப்பை (1936 முதல் 1941 வரை) முடிவுக்குக் கொண்டுவர உதவிய பிரிட்டிஷ் படைகளில் பெருமளவிலான இந்திய வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையிலான முறையான தூதரக உறவுகள் 1950-ல் நிறுவப்பட்டன. இவை வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முகப் பங்களிப்பாக உருவெடுத்துள்ளன. இந்திய ஏற்றுமதியின் மூலம், ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவின் முன்னணி வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதால், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்கிறது.
ஜி20 மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாடுகளின் போது நடைபெற்ற பிரதமர் அளவிலான சந்திப்புகள், மற்றும் வழக்கமான அமைச்சர்கள் மற்றும் நிறுவன அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் ரீதியிலான ஈடுபாடு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா-எத்தியோப்பியா உறவுகள், அரசியல் தொடர்ச்சி மற்றும் ஏற்றுமதி சார்ந்த வர்த்தக ஈடுபாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட மீள்திறனைப் பிரதிபலிக்கின்றன. 2024-25 நிதியாண்டில் மொத்த இருதரப்பு வர்த்தகம் 550.19 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில், இந்தியா ஒரு வலுவான வர்த்தக உபரியைப் பராமரிக்கிறது. வர்த்தகத்தைத் தாண்டி, ஒரு முக்கிய முதலீட்டாளராக இந்தியாவின் நிலை, இந்த உறவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துகிறது. தொடர்ச்சியான அரசியல் உரையாடலும் வர்த்தக வசதிகளும் இருதரப்பு வர்த்தகத்திற்குப் புத்துயிர் அளிக்க உதவும். இது, ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் பரந்த ஈடுபாட்டையும், கண்டத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுடனான நீண்டகால கூட்டாண்மையையும் வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156548&ModuleId=3®=3&lang=1
***
TV/PKV/KR
(Explainer ID: 159633)
आगंतुक पटल : 13
Provide suggestions / comments