Economy
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
27 APR 2026 5:13PM
உலகளாவிய வர்த்தகக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா தனது பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து பலப்படுத்தியும் விரிவுபடுத்தியும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளில் 38 நாடுகளுடன் 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த வரிசையில் நியூசிலாந்துடன் இன்று கையெழுத்தாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு பொருளாதார உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். கடந்த 2025 மார்ச் 16 அன்று தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமார் 9 மாதங்களிலேயே நிறைவடைந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். சந்தை அணுகல், முதலீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, விளையாட்டு, சுற்றுலா, இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பாக இது திகழ்கிறது. இரு நாடுகளிலும் உள்ள உற்பத்தியாளர்கள், விவசாயிகள், நுகர்வோர், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், மாணவர்கள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தரவுகள் வலுவான பொருளாதார உறவைப் பிரதிபலிக்கின்றன. இந்தியா - நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2023-24 நிதியாண்டில் 87.3 கோடி டாலராக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 49 சதவீதம் அதிகரித்து 130 கோடி டாலரை எட்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி 130 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி வெறும் 7.21 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியா நேர்மறையான வர்த்தக சமநிலையைப் பேணி வருகிறது. ஒட்டுமொத்த ஓசியானியா பிராந்தியத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக நியூசிலாந்து திகழ்கிறது. நியூசிலாந்தில் வாழும் சுமார் 3 லட்சம் இந்திய வம்சாவளியினர் இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் கலாச்சார, பொருளாதாரப் பாலமாகச் செயல்படுகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படுவதுடன், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 2000 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் சேவைகள், நவீன உள்கட்டமைப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இந்த அந்நிய நேரடி முதலீட்டுப் பங்களிப்பு வழிவகுக்கும். முதலீட்டு விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதற்கான மறுசீரமைப்பு விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஜவுளி, ஆடை, தோல் பொருட்கள், காலணிகள், பொறியியல் உபகரணங்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். உற்பத்தித் துறைக்கான செலவைக் குறைக்கும் நோக்கில் மரக்கட்டைகள், நிலக்கரி, உலோகக் கழிவுகள் போன்ற மூலப்பொருட்களை வரி ஏதுமின்றி இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா தனது உள்நாட்டுப் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதிலும் சமநிலையைக் கடைப்பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சுங்க வரிகளில் 70.03 சதவீதப் பொருட்களுக்கு மட்டுமே இந்தியா சந்தை அணுகலை வழங்கியுள்ளது. உள்நாட்டு விவசாயிகளின் நலனைக் காப்பதற்காக பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களுக்கும், மாட்டு இறைச்சி, வெங்காயம், கடலை, சர்க்கரை, தேன், ஆபரணங்கள், தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட 29.97 சதவீதப் பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மரக்கட்டைகள், கம்பளி, ஆட்டு இறைச்சி போன்ற 30 சதவீதப் பொருட்களுக்கான வரிகள் உடனடியாக நீக்கப்படும். பெட்ரோல், தாவர எண்ணெய், இயந்திரங்கள் போன்ற 35.60 சதவீதப் பொருட்களுக்கான வரிகள் 3, 5, 7, 10 ஆண்டுகளில் எனப் படிப்படியாக நீக்கப்படும். ஒயின், மருந்துப் பொருட்கள், இரும்பு, எஃகு போன்ற 4.37 சதவீதப் பொருட்களுக்கு வரிக் குறைப்பு மட்டுமே வழங்கப்படும். ஆப்பிள், கிவி, மனுகா தேன் போன்ற 0.06 சதவீதப் பொருட்கள் குறைந்தபட்ச இறக்குமதி விலை, பருவகாலக் கட்டுப்பாடுகளுடன் கூடிய கட்டண விகித ஒதுக்கீட்டு முறையின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படும்.
விவசாயத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து கிவி, ஆப்பிள், தேன் உற்பத்தியாளர்களுக்காகச் சிறப்புச் செயல்பாட்டுத் திட்டங்களை வகுத்துள்ளன. இதற்காகச் சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அமைத்தல், நடவுப் பொருட்களை மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற தொழில்நுட்ப உதவிகளை நியூசிலாந்து வழங்கும். இவை அனைத்தும் இருதரப்பு வேளாண் கூட்டமைப்பால் கண்காணிக்கப்படும். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகத்தை எளிதாக்க பாசுமதி அரிசி, ஆலிவ் விதை, தேயிலை போன்ற பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார நடைமுறை செயல்படுத்தப்படும். சுங்கச் சாவடி செயல்முறைகளை நவீனப்படுத்தச் சாதாரண சரக்குகள் 48 மணி நேரத்திற்குள்ளும், விரைவில் அழுகும் தன்மையுடைய பொருட்கள், விரைவுச் சரக்குகள் 24 மணி நேரத்திற்குள்ளும் தடையில்லாச் சான்றளிக்கப்பட்டு விடுவிக்கப்படும். அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் புவிசார் குறியீடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு இணையான பாதுகாப்பை வழங்குவதற்கு நியூசிலாந்து 18 மாதங்களுக்குள் தனது சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
சேவை, மனிதவளப் பரிமாற்றத் துறையில் நியூசிலாந்து இதுவரை எந்தவொரு நாட்டுக்கும் வழங்காத மிகச்சிறந்த சலுகைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் 118 சேவைப் பிரிவுகளில் சந்தை அணுகலையும், 139 துணைப் பிரிவுகளில் மிகவும் சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஆயுஷ் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவச் சேவைகளுக்கு முதன்முறையாக நியூசிலாந்து அனுமதி அளித்துள்ளது. இது உலக அளவில் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான அங்கீகாரத்தை உயர்த்துவதுடன் மருத்துவச் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி, தற்காலிக வேலைவாய்ப்புக்கான ஒரு சிறப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கும்போது வாரத்திற்கு 20 மணி நேரம் வரை பகுதிநேர வேலைகளில் அவர்கள் ஈடுபட முடியும். அவர்களின் படிப்பு முடிந்த பிறகு அறிவியல், தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு 3 ஆண்டுகள் வரையும், முனைவர் பட்டதாரிகளுக்கு 4 ஆண்டுகள் வரையும் பணி விசா நீட்டிப்பு வழங்கப்படும். தற்காலிக வேலைவாய்ப்புப் பிரிவின் கீழ் ஆயுஷ் நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள், இந்திய சமையல் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கல்வி, கட்டுமானத் துறை சார்ந்த 5,000 தகுதி வாய்ந்த இந்தியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தங்கும் வசதியுடன் கூடிய விசா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய இளைஞர்கள் உலகளாவிய அனுபவத்தைப் பெறுவதற்காக ஆண்டுதோறும் 1,000 பேருக்கு 12 மாத காலத்தில் பலமுறை நுழைவு அனுமதி கொண்ட சுற்றுலாப் பயண விசா வழங்கப்படும். இந்த விரிவான ஒப்பந்தம் இந்தியாவின் மனித வளத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு உகந்தவாறு மேம்படுத்தி, சர்வதேச அரங்கில் தேசத்தின் நற்பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158370&ModuleId=3®=3&lang=1
***
PD/KR
(Explainer ID: 159609)
आगंतुक पटल : 20
Provide suggestions / comments