Energy & Environment

இந்தியாவின் சூரிய சக்தி துறை வளர்ச்சி: புதிய சகாப்தம் தொடக்கம்

Posted On: 02 AUG 2026 12:01PM

பிரதமரின் சூரிய சரோவர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் சூரிய சக்தி துறை மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆற்றல் சேமிப்பு வசதியுடன் கூடிய 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் தூய்மை எரிசக்தி மாற்றத்தில் சூரிய சக்தி மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சி, உற்பத்தித் திறன் அதிகரிப்பு, மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவை வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பத்தை, மின்சாரத்திற்கான முதன்மை ஆதாரமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளன. இத்துறை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கும் துணைநின்று, உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் சூரிய ஆற்றலின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. 2014-ம் ஆண்டில் சுமார் 3 ஜிகாவாட்டாக இருந்த நிறுவப்பட்ட திறன், 2026 ஜூன் 30 நிலவரப்படி 50 மடங்குக்கும் மேலாக அதிகரித்து 162.15 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. 2026 ஜூலை 31 அன்று மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிரதமரின் சூரிய சரோவர் திட்டம் 5,070 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2026-27 முதல் 2030-31 நிதியாண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 16,000 முதல் 17,000 வரையிலான முழுநேர வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும். மிதவை அமைப்புகள் (floatation systems), சூரிய மின்கலன்கள் (PV cells), ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் உள்நாட்டு உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதி பெற்றவை ஆகும். இந்த முன்முயற்சி நாட்டின் மிதக்கும் சூரியசக்தி உற்பத்தித் திறனை, தற்போதுள்ள சுமார் 700 மெகாவாட்டில் இருந்து 5,000 மெகாவாட்டாக உயர்த்தும்.

2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியா கூடுதலாக 44.61 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை எட்டி சாதனை படைத்துள்ளது. சூரிய மின்தகடுகள் தயாரிப்புத் திறன் 2014-ல் 2.3 ஜிகாவாட்டிலிருந்து 2026 மார்ச் நிலவரப்படி 172 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 2026 ஜூன் மாதம் வரை 43 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விவசாயத் துறையில் பிரதமரின் விவசாயிகளுக்கான ஆற்றல் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (பிஎம்-குசும்) மூலம் சூரிய சக்தியில் இயங்கும் 11.49 லட்சம் பம்புகள் நிறுவப்பட்டு 21.77 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

ராஜஸ்தானின் பாட்லா, கர்நாடகாவின் பவகடா, மத்தியப் பிரதேசத்தின் ரேவா ஆகிய இடங்களில் பிரமாண்ட சூரிய மின்சக்தி பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து அமைக்கப்பட்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, 'ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே மின்சாரக் கட்டமைப்பு' போன்ற சர்வதேசக் கூட்டாண்மைகள் மூலம் தூய்மையான பசுமை ஆற்றலை நோக்கிய உலகளாவிய பயணத்தில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159396&ModuleId=3&reg=3&lang=1

***

PD/KR

 

(Explainer ID: 159606) आगंतुक पटल : 189
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Telugu , Kannada , Malayalam