• Sitemap
  • Advance Search
Economy

சரக்குக் கொள்கலன்கள் உற்பத்தி உதவித் திட்டம்: இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்தை கட்டமைத்தல்

Posted On: 11 AUG 2026 10:47AM

இந்தியாவின் வளர்ந்து வரும் வர்த்தகம், உற்பத்திக்கான இலக்குகளை எட்டும் வகையில், வலுவான உள்நாட்டுச் சரக்குக் கொள்கலன்கள் உற்பத்தித் தளத்தை உருவாக்க சரக்குக் கொள்கலன்கள் (கண்டெய்னர்) உற்பத்தி உதவித் திட்டம் என்ற புதிய முன்முயற்சியை அரசு அறிவித்துள்ளது. 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், கொள்கலன் சூழலமைப்பில் உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், தளவாடத் துறைகளில் மேற்கொள்ளப்படும் விரிவான சீர்திருத்தங்களுடன், நாட்டின் கடல்சார் திறன்களை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சர்வதேச அளவில் வர்த்தகப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

உலகளாவிய வர்த்தகத்தில் கணிசமான பகுதி கடல்வழியாகவே நடைபெறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, வேகமாக அதிகரித்து வரும் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் காரணமாகச் சரக்குக் கொள்கலன்களுக்கான தேவை பெருமளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும், இத்தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் காலிக் கொள்கலன்களை இறக்குமதி செய்து வருகிறது. இத்தகைய இறக்குமதி சார்பைக் குறைத்து, சர்வதேச சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து நாட்டின் விநியோகக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் இப்புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2026-27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், கடல்சார் அமிர்த கால தொலைநோக்குப் பார்வை 2047 ஆகியவற்றிற்கு மேலும் வலுசேர்க்கிறது.

ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், உள்நாட்டு உற்பத்தியை தற்போதைய அளவை விட 10 மடங்கு அதிகரித்து, ஆண்டுக்கு 7.5 லட்சம் கொள்கலன்கள் தயாரிக்கும் திறனை எட்டுவது இலக்காகும். இதன் மூலம் சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை வாய்ப்புகள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி அலகுகளை நிறுவுதல், தற்போதைய அலகுகளை விரிவுபடுத்துதல், செயல்பாட்டு உதவிகள் வழங்குதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கியப் செயல்முறைகளாகும்.

இத்திட்டத்தின் நேரடி பலனாகக் கொள்கலன் உற்பத்தி, அதைச் சார்ந்த பிற தொழில்களில் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 50,000-க்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். ஜூலை 2026-ல் உலகளாவிய கப்பல் நிறுவனமான ஏ.பி.முல்லர்-மேர்ஸ்க் நிறுவனத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏற்றுமதி-இறக்குமதிக்கான சரக்குக் கொள்கலன் உத்திரப் பிரதேசத்தின் தாத்ரியில் அறிமுகப்படுத்தப்பட்டுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பாரத் கன்டெய்னர் ஷிப்பிங் லைன் உருவாக்கம், 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பல் கட்டும் நிதி உதவித் திட்டம் போன்ற கடல்சார் சீர்திருத்தங்களுடன் இணைந்து, உலகளாவிய கடல்சார் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதில் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159495&ModuleId=3&reg=3&lang=1

***

SS/PD

(Explainer ID: 159571) आगंतुक पटल : 20
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Telugu , Kannada , Malayalam