• Sitemap
  • Advance Search
Social Welfare

உலகளாவிய சுகாதார வல்லரசாக மாறும் இந்தியா

Posted On: 01 MAR 2026 1:15PM

* ஆயுஷ்மான் பாரத் திட்டம், 1,84,000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 86.3 கோடி டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச/குறைந்த செலவில் மருத்துவ சேவையை இந்தியா வழங்குகிறது.

* உலகின் மருந்தகம் — இந்தியா உலகளாவிய ஜெனரிக் மருந்துகளில் 20%-ஐயும், யுனிசெஃபின் தடுப்பூசிகளில் 55-60%-ஐயும் வழங்குகிறது. மேலும், இதன் உயிரிப் பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலரை நோக்கி வளரும்.

* தொழில்நுட்பம், புத்தாக்கம் — செயற்கை நுண்ணறிவு நோயறிதல், ட்ரோன் வழி மருந்து விநியோகம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் ஆகியவை, எளிதில் சென்றடைய முடியாத மக்களுக்கும் மருத்துவ சேவையை விரிவுபடுத்துகின்றன.

நீண்டகால பொது சுகாதார சவால்களை வெல்வது முதல், மலிவு விலை மருந்துகள் வரை, ஒரு உலகளாவிய சுகாதார வல்லரசாக இந்தியாவின் எழுச்சியானது, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கும், அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாக நிற்கிறது.  அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதாரப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், 2047-ம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு ஆரோக்கியமான, உற்பத்தித்திறன் மிக்க  வளர்ந்த பாரதமாக மாறும் தனது இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

 

அளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய துறையான இந்தியாவின் மருந்துத் துறை, இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் மலிவு விலையில் மருந்துகளை எளிதில் கிடைக்கச் செய்கிறது. கொவிட்-19 தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்குவதில் இந்தியாவின் திறமையே இதற்குச் சான்றாகும். இந்தியாவில் மருத்துவ சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2009-ல் 1,12,000-க்கும் அதிகமாக இருந்த நிலையில் 2024-ல் 6,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு தனது 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஐந்து ஒருங்கிணைந்த மருத்துவ மையங்களை இந்தியா முழுவதும் நிறுவுவதாக அறிவித்தது .

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் அனைவருக்கும், குறிப்பாக சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினருக்கு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும் அதன் நோக்கத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது.  இந்தத் திட்டம் குடும்பங்களின் சுகாதாரச் செலவினங்களைக் குறைக்க உதவியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடும்பங்களுக்கான சேமிப்பு ₹1.25 லட்சம் கோடிக்கும் (2024-2025 வரை) அதிகமாக இருந்தது.

உலகின் மிகவும் லட்சியமிக்க டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்புகளில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் மூலம், ஒரு வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் ஆயுஷ்மான் பாரத் ஆதரிக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் என்ற முதன்மைத் திட்டத்தைத் தவிர, மத்திய அரசு பல்வேறு வகையான நோய்களைத் தடுப்பதற்கும், அவற்றின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்குமாக, தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கொண்ட தேசிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 'பயோபார்மா சக்தி' திட்டம் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம், உள்நாட்டு உற்பத்தி, பணியாளர் மேம்பாடு, நாடு தழுவிய அளவில் 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை மையங்களின் கட்டமைப்பு, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைத் திறன் ஆகியவற்றில் முதலீடுகள் செய்வதன் மூலம், மருந்துகளுக்கான இந்தியாவின் முழுமையான சூழலமைப்பை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரவலான நோய்களுடன் போராடும் ஒரு தேசம் என்ற நிலையிலிருந்து, உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாகவும், சுகாதாரத் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னணி நாடாகவும் இந்தியா உருமாறியிருப்பது, அரசின் உத்திசார் செயல்பாடுகளுக்குச் சான்றாக விளங்குகிறது. 1,80,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் முதல், 86 கோடிக்கும் அதிகமான சுகாதார அடையாள அட்டைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதாரச் சூழலமைப்பு வரை பல அம்சங்கள், சுகாதாரப் பராமரிப்புக்கான ஒரு மையமாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளதன. இது வளரும் நாடுகளில் சுகாதார சமத்துவத்திற்கான ஒரு முன்மாதிரியாக இந்தியாவை ஆக்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157599&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PLM/KR

(Explainer ID: 159499) आगंतुक पटल : 29
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam