• Sitemap
  • Advance Search
Infrastructure

இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பின் நான்கு தசாப்த காலப் பயணம்

Posted On: 06 AUG 2026 2:10PM

வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கிய காலத்திலிருந்து கணினித் திரையைச் சொடுக்கி நொடிப் பொழுதில் முன்பதிவு செய்யும் அதிநவீன நடைமுறை வரை இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொது முன்பதிவு அமைப்புகளில் ஒன்றாகத் திகழும் இந்த அமைப்பு, தொடர் நவீனமயமாக்கல் மூலம் முன்பதிவை வேகமானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது. 1986-ம் ஆண்டில் கைகளால் மேற்கொள்ளப்பட்ட பதிவேடுகளுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு, தற்பொழுது ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி வாயிலான முன்பதிவுகளுக்குப் பிரதான அடித்தளமாக இயங்கி வருகிறது.

2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் பயணிகள் முன்பதிவு அமைப்பின் வாயிலாக 65.08 கோடி முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதில் 57.90 கோடி பயணச்சீட்டுகள், அதாவது 89 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இத்தளத்தின் மூலம் தினசரி 20.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்பெறுகின்றனர். தற்பொழுது முன்பதிவுப் பரிவர்த்தனைகளில் 73 சதவீதம் ரொக்கமில்லா டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.

அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அடுத்த தலைமுறை பயணிகள் முன்பதிவு அமைப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் நிமிடத்திற்கு 32,000 ஆக இருக்கும் பயணச்சீட்டு முன்பதிவுத் திறன் 1.5 லட்சமாகவும், நிமிடத்திற்கு 4 லட்சமாக இருக்கும் தகவல் அறிதல் திறன் 40 லட்சமாகவும் உயர்த்தப்பட உள்ளது. மேலும், தட்கல் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பும் ஓடிபி நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு கால அவகாசம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட 'ரயில்ஒன்' செயலியும், மேம்படுத்தப்பட்ட ரயில் மதாத்தளம் போன்றவையும் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில்ஒன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பை 94 சதவீத துல்லியத்துடன் கணித்துச் சொல்கிறது. நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மாற்றங்கள் இந்திய ரயில்வேயை எதிர்காலத் தேவைகளுக்குச் சிறப்பான முறையில் தயார்படுத்தி வருகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159450&ModuleId=3&reg=3&lang=1

 

***

VJ/PD/KR

 

(Explainer ID: 159490) आगंतुक पटल : 52
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Telugu , Kannada , Malayalam