Economy
அரசு சொத்துகளின் ஏல நடைமுறையில் அரசு மின் சந்தை (ஜெம்) தளத்தின் சிறப்பான அம்சங்கள்
Posted On:
21 DEC 2025 10:10AM
முக்கிய அம்சங்கள்:
* ஒரு அமைதியான டிஜிட்டல் புரட்சியாக, அரசு மின் சந்தை தளமான ஜெம் (GeM) ஏல அம்சம், அரசின் உடைமைகள், சொத்துகளை பணதாக மாற்றும் ஏல முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, வெளிப்படையானதாகவும், விதி அடிப்படையிலானதாகவும் மாற்றுகிறது.
* மின்னணுக் கழிவுகள், இயந்திரங்கள், வாகனங்கள் போன்ற பல்வேறு சொத்துக்களுக்கு வேகமாகவும் திறமையாகவும் ஏலம் கோர அனுமதிக்கிறது.
* டிசம்பர் 2021 முதல் நவம்பர் 2025 வரை ₹2,200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
*குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை இது ஆதரிக்கிறது.
அறிமுகம்:
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பொதுக் கொள்முதல் சூழலமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த உத்வேகத்தின் அடிப்படையில், பொருட்கள், சேவைகளைக் கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல், அரசு சொத்துக்களை விற்பனை செய்வதில் ஒரு புதிய டிஜிட்டல் புரட்சி அமைதியாக மலர்ந்து வருகிறது. இந்த மாற்றமானது, அரசு மின்-சந்தை தளத்தின் (GeM) ஏல அம்சம் மூலம் இயக்கப்படுகிறது.
ஜெம் வெளிப்படையான, திறமையான கொள்முதலுக்கான ஒரு டிஜிட்டல் தளமாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஏலப் பிரிவு, அமைச்சகங்களும் துறைகளும் தங்கள் சொத்துக்களை விற்க உதவும் ஒரு முழுமையான இணைய ஏல முறையை வழங்குகிறது. முழுமையான, பாதுகாப்பான இடைமுகம் மூலம், ஒவ்வொரு சொத்து விற்பனையும் இப்போது தாமதங்களையும் திறமையின்மையையும் நீக்கும் வகையில் அமைந்துள்ளது. காகிதமில்லா, ரொக்கமில்லா, தொடர்பற்ற அமைப்பு மூலம் இது நடத்தப்படுகிறது. இதன் விளைவாக இரு நன்மைகள் கிடைக்கின்றன: கழிவுப் பொருட்களை அகற்றுவதன் மூலம் அதிக வருவாய், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு நியாயமான தீர்வு ஆகியவை அவை.
திறன்மிகு நிர்வாகத்திற்கான ஏலங்கள்:
பொது வளங்களை முறைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக ஏலங்களின் தேவையையும் ஆற்றலையும் உணர்ந்து, ஜிஇஎம்-ன் ஏலங்கள், அரசுச் சொத்துக்களைக் கையாளும் முறையை மாற்றியமைத்து வருகின்றன. இந்த டிஜிட்டல் புரட்சியானது, ஏலமிடல், ஏல மேலாண்மை, பயனருக்கு எளிதான முறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நெகிழ்வான சூழலை வழங்குவதோடு, வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வகைச் சொத்துக்களுக்கான சந்தை:
முன்னோக்கு ஏலம் (Forward Auction)/என்பது ஒரு டிஜிட்டல் ஏல செயல்முறையாகும். இதில், அரசுத் துறைகள் விற்பனையாளர்களாகவும், பதிவுசெய்யப்பட்ட ஏலதாரர்கள் பட்டியலிடப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்காகவும் போட்டியிடுவார்கள். துறைகள் சொத்துக்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியும் என்றாலும், அதிகபட்ச விலையை முன்வைப்பவரே வெற்றி பெறுவார்.
முன்னோக்கு ஏலத்தில் பல்வேறு வகையான அரசுச் சொத்துக்கள் டிஜிட்டல் ஏலச் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இவற்றுள் பின்வருவன அடங்கும்:
* பயன்பாட்டில் இல்லாத பிரிண்டர்கள், மடிக்கணினிகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் போன்ற மின்னணுக் கழிவுகள்
* தொழில்துறை, தொழில்துறை அல்லாத இயந்திரங்கள்
* பயன்படுத்தப்பட்ட உலோகம், உலோகம் அல்லாத பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள், ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள்
* குடியிருப்பு, வணிகம், நிறுவனப் பயன்பாடுகளுக்காக நிலமும் கட்டடங்களும் குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.
* பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள்
* தங்குமிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், சுங்கச்சாவடிகள் போன்ற சொத்துக்களை குத்தகைக்கு விடுதல்
இந்த அனைத்து சொத்து வகைகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், ஜெம் திறம்பட ஒரு முழுமையான சந்தையை உருவாக்கியுள்ளது.
இந்த நாடு தழுவிய முன்முயற்சி முன்னெப்போதும் இல்லாத வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதோடு, செயல்முறைகளையும் கணிசமாக விரைவுபடுத்துகிறது.
டிசம்பர் 2021 முதல் நவம்பர் 2025 வரை, இது ₹2,200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஏலங்களுக்கு வழிவகுத்து, 13,000-க்கும் மேற்பட்ட ஏலங்களை நடத்தியுள்ளது.
பல துறைகள் முன்னோக்கு ஏல முறையைப் பின்பற்றுவதால், அரசுத் துறைகளும் வணிக நிறுவனங்களும் ஒரே வெளிப்படையான டிஜிட்டல் இடைமுகத்திற்குள் கொண்டுவரப்படுகின்றன. அங்கு ஒவ்வொரு ஏலமும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒவ்வொரு முடிவும் நியாயமானதாக அமைகிறது. இது டிஜிட்டல் ஜனநாயகம், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, சிறந்த மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156611&ModuleId=3®=3&lang=1
***
TV/PLM/PD
(Explainer ID: 159307)
आगंतुक पटल : 77
Provide suggestions / comments