Social Welfare
புத்தரின் புனிதச் சின்னங்களின் கண்காட்சி
எல்லைகளைக் கடந்த அமைதி
Posted On:
30 APR 2026 5:43PM
புத்தரின் புனிதச் சின்னங்களின் பொதுக் கண்காட்சியானது, உலகெங்கும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு புத்தரின் ஆன்மீக பிரசன்னத்தையும் அவரது உன்னத போதனைகளையும் நேரில் தரிசிக்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்குகிறது. முழுமையான ஞானம் பெற்று, பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து முக்தி அடைந்தவரான கௌதம புத்தரை 'ததாகதர்' என்று பௌத்த மரபுகள் போற்றுகின்றன. புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் மிக உயரிய பாதுகாப்புடன் சர்வதேச அளவிலான பராமரிப்பு நெறிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தரின் அரிய புனிதத் திருமேனி எச்சங்கள், உலகெங்கிலும் உள்ள சுமார் 500 மில்லியன் பௌத்தர்களுக்கு வெறும் தொல்பொருள் சான்றுகள் மட்டுமல்லாது, வாழும் பக்தி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வின் உன்னத சின்னங்களாகத் திகழ்கின்றன.
உலகளவில் மோதல்களும் பதற்றங்களும் நிறைந்த தற்காலச் சூழலில், 'எல்லைகளைக் கடந்த அமைதி', 'மோதல்களுக்கு இடையிலும் அமைதி' என்ற உன்னத கருப்பொருள்களின் கீழ், இப்புனித எச்சங்களின் ஆன்மீகக் கண்காட்சி இவ்வாண்டு மே 1 முதல் 14 வரை லடாக்கில் மிகப்பிரம்மாண்டமான கலாச்சார விழாவாக நடத்தப்படுகிறது. இந்த முயற்சியானது லடாக் பிராந்தியத்தின் பௌத்த பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுவதுடன், அப்பகுதியில் கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்தி, அமைதி, அகிம்சை போன்ற உன்னத விழுமியங்களை இளைய தலைமுறையினரிடையே ஆழமாக விதைக்கிறது. சர்வதேச அளவில் பௌத்த விழுமியங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் நாகரீகப் பங்கையும், உலக நாடுகளுடனான கலாச்சார உறவுகளையும் இது வலுப்படுத்துகிறது.
இந்த லடாக் கண்காட்சிக்காக, புதுதில்லியிலிருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட புனித எச்சங்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று லே பகுதியை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட வரவேற்பு ஊர்வலத்திற்குப் பின், இப்புனித எச்சங்கள் ஜிவெஸ்தல் வளாகத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆன்மீகக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வானது 2569-வது புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களுடன் இணைந்து துவங்குகிறது. இதில் லாமாக்களின் சிறப்பு பௌத்த பிரார்த்தனைகள், தீப ஆராதனைகள், கண்கவர் பாரம்பரிய பௌத்த கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. மே 1 முதல் 10 வரை லே பகுதியில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படும் இந்த எச்சங்கள், பின்னர் மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படும். பின்னர் மே 13 அன்று மீண்டும் லே நகரின் தர்மா மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மே 15 அன்று விடைபெறும் ஊர்வலத்துடன் புதுதில்லிக்கு பத்திரமாக கொண்டு செல்லப்படும்.
இந்த ஆன்மீக வைபவத்தின் ஒரு பகுதியாக, இமயமலை பகுதிகளின் பௌத்த மரபுகள் குறித்த மாநாடுகள், பௌத்தமும் அறிவியலும் சார்ந்த விரிவுரைகள், தியான அமர்வுகள், சமய நல்லிணக்கக் கலந்தாய்வுகள், புகழ்பெற்ற பௌத்த துறவி குஷோக் பகுலா ரின்போச்சே குறித்த ஆவணப்படத் திரையிடல்கள் எனப் பல்வேறு கல்வி, கலாச்சாரத் திட்டங்கள் தேசிய அருங்காட்சியகம் மற்றும் லடாக் பௌத்த அமைப்புகளால் இணைந்து நடத்தப்படுகின்றன. மேலும், லே அரண்மனையில் 'பியாண்ட் தி பாஸ்: தி ஷேர்டு ஸ்பிரிட் அண்ட் எத்னிக் டேபெஸ்ட்ரி ஆப் லடாக்' என்ற தலைப்பில் ஒரு சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இமயமலையைக் கடந்து வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களின் வரலாற்று மையமாக லடாக் விளங்கியதை மிக அழகாக சித்தரிக்கிறது.
வரலாற்று ரீதியாக, இப்புனித எச்சங்கள் உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்ரவா ஸ்தூபியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்டவையாகும். இந்த தளம் புத்தரின் சாக்கிய வம்சத்து தலைநகரான பண்டைய கபிலவஸ்துவுடன் தொடர்புடையதாகும். கி.மு 3-ம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக அசல் ஸ்தூபிகளிலிருந்து புனித எச்சங்களை எடுத்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் சுமார் 2000 ஆண்டுகள் பூமிக்கடியில் மறைந்திருந்த இந்த பிப்ரவா தளம், 1898-ல் வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பே மூலமும், பின்னர் 1971-77 காலகட்டத்தில் இந்திய தொல்லியல் துறையின் கே.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலும் தோண்டப்பட்டு, எலும்பு எச்சங்கள், சாம்பல், நவரத்தினங்கள் மற்றும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சோப்ஸ்டோன் பேழைகளுடன் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது. இவற்றில் 20 எலும்பு எச்சங்கள் தற்போது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கலாச்சார அமைச்சகம், புத்தரின் புனித எச்சங்களை மங்கோலியா (2022), தாய்லாந்து (2024), வியட்நாம் (2025), ரஷ்யா மற்றும் பூடான் ஆகிய ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்று சர்வதேச கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் பௌத்த உலகை ஒன்றிணைத்து, ஆன்மீக ரீதியில் இராஜதந்திரத்தை வலுப்படுத்தி வருகிறது. அண்மையில், புதுதில்லியில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 'தி லைட் அண்ட் தி லோட்டஸ்' கண்காட்சியின் மூலம், காலனித்துவ ஆட்சி காலத்தில் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனிதச் சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பௌத்த பாரம்பரியத்திற்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. இந்த உன்னத முயற்சிகள் அனைத்தும் பழமையான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் மூலம் உலக நாடுகளிடையே அமைதி, கருணை, நல்லிணக்கம் நிறைந்த ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158403&ModuleId=3®=3&lang=1
***
PD
(Explainer ID: 159305)
आगंतुक पटल : 45
Provide suggestions / comments