• Sitemap
  • Advance Search
Economy

இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மிக விரைவாக மேற்கோள்ளப்பட்ட சிறப்பான ஒப்பந்தம்

Posted On: 22 DEC 2025 10:13PM

முக்கிய அம்சங்கள்

* இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதிகள் அனைத்தின் மீதான வரியை 100% நீக்குகிறது.

* 15 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.

* பால், வேளாண் துறைகளில் இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்கிறது. ஜவுளி, தோல் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் துறைகளுக்கு இது அதிக நன்மைகளை வழங்கும்.

* நியூசிலாந்து முதன்முறையாக சுகாதாரம், பாரம்பரிய மருத்துவ சேவைகள் மீதான ஒத்துழைப்பில் கையெழுத்திட்டுள்ளது.

அறிமுகம்:

பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தனது உலகளாவிய நிலையை மேம்படுத்தவும் இந்தியா தனது உலகளாவிய வர்த்தகக் ஒத்துழைப்புகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்த மாதம் ஓமனுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே சமீபத்தியதாகும். இந்நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு தொலைநோக்குடன் கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை சமீபத்தில் நிறைவு செய்துள்ளன. இது இருதரப்பு பொருளாதார உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் முக்கியத் துறைகளைப் பாதுகாத்து, பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தி, இந்தியாவின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நியூசிலாந்திற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வரியில்லா அணுகலையும் வழங்குகிறது.

இந்தியாவும் நியூசிலாந்தும் 2025 மார்ச் மாதம் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை அறிவித்தன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025 டிசம்பரில் முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் மிக விரைவாக முடிவுக்கு வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக அமைந்தது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தம் சந்தை அணுகலை விரிவுபடுத்தி, சேவை வர்த்தகத்தை மேம்படுத்தி, முன்னேற்றப் பாதைகளை உருவாக்கி, நீண்ட கால முதலீட்டை ஊக்குவித்து, விவசாய உற்பத்தித்திறனை வளர்க்கும் ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது.

இருதரப்பு வர்த்தக உறவுகள்:

நியூசிலாந்தில் சுமார் 3 லட்சம் இந்திய வம்சாவளியினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5% ஆகும். இந்தப் புலம்பெயர் சமூகம் ஒரு கலாச்சார, பொருளாதாரப் பாலமாகச் செயல்பட்டு, வலுவான இருதரப்பு உறவுகளுக்கும் இந்தியப் பொருட்கள், சேவைகளுக்கான தேவைக்கும் ஆதரவளிக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இருதரப்பு சரக்கு வர்த்தகம் 2015-2016-ம் ஆண்டில் 855 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2024-2025-ம் ஆண்டில் 1298 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் ஏற்றுமதி 130% அதிகரித்துள்ளது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதிகள் அனைத்தின் மீதான வரியை நீக்குகிறது. 15 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, நீண்டகாலப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது.

இந்தியாவுக்குக் கிடைக்கும் பலன்கள்:

 

நியூசிலாந்தின் சந்தை அணுகல் சலுகையானது, அது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து, நியூசிலாந்தின் 100% சுங்க வரி வகைகளுக்கும் (8,284 சுங்க வரி வகைகள்) வரிகளை உடனடியாக நீக்குவதை (பூஜ்ஜிய வரி) உள்ளடக்கியுள்ளது.

இந்தச் சலுகை பல்வேறு தயாரிப்புகள், துறைகளுக்கு பல்வேறு ஆதாயங்களை வழங்கும்.

பரஸ்பர உடன்பாட்டிற்கு உட்பட்டு மற்றும் வெளிப்படைத்தன்மையின் நலன் கருதி, முறையான கூட்டு அறிவிப்பைத் தொடர்ந்து ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட உரைகள் வெளியிடப்படலாம். இரு நாடுகளிலும் உள்நாட்டு செயல்முறைகள் நிறைவடைந்தவுடன் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் மற்றும் அடுத்த ஆண்டுக்குள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் வர்த்தக ராஜதந்திரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இது விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. இந்தியப் பொருட்களுக்கான மேம்பட்ட சந்தை அணுகலை உறுதிசெய்வதன் மூலமும், சேவைகள், போக்குவரத்துத் துறைகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், விவசாயம், முதலீடு, வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் மூலமும், இந்த ஒப்பந்தம் பரந்த அளவிலான நன்மைகளை வழங்குகிறது.

விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முதல் மாணவர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் வரை, அனைவருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பரந்த அளவிலான நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156654&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PLM/PD

(Explainer ID: 159258) आगंतुक पटल : 20
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam