• Sitemap
  • Advance Search
Economy

கிராமப்புறங்களில் கடன் வழங்கும் கட்டமைப்பை மேம்படுத்துதல்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தற்சார்பு பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்தல்

Posted On: 16 JUL 2026 11:09AM

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி, விவசாயத் துறை மேம்பாட்டின் முதன்மைத் தூணாகக் கிராமப்புறக் கடன் வழங்கல் கட்டமைப்பு விளங்கி வருகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் மேம்படுத்தவும், வேளாண் சாகுபடிப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவிகளை குறைந்த வட்டி விகிதத்தில் உரிய காலத்தில் வழங்கவும் மத்திய அரசு பல்வேறு கடன்சார் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நபார்டு வங்கி, வணிக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களில் கடன் விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றன. நபார்டு வங்கி கடந்த மே மாதத்தில் நடத்திய பொருளாதாரக் கள ஆய்வில், நாட்டின் 51 சதவீதக் கிராமப்புறக் குடும்பங்கள் தங்களின் நிதித் தேவைகளுக்கு முற்றிலும் நிறுவனக் கடன் ஆதாரங்களையே சார்ந்துள்ளதோடு, மக்களின் வாங்கும் திறனும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புறங்களில் நிறுவன அளவில் கடன் வழங்குவதை விரிவுபடுத்தும் நோக்கில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன்படி 1955-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கப்பட்டு, கிராமப்புற வங்கிச் சேவைகளுக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969-ம் ஆண்டில் 14 முக்கிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் மூலம், சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத் துறைகளில் கடன் வழங்கும் புதிய நடைமுறை உருவானது. நாட்டின் கிராமப்புறக் கடன் கட்டமைப்பு வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நபார்டு வங்கி 2026 ஜூலை 12 அன்று தனது 45-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டில் சுய உதவிக் குழு-வங்கி இணைப்புத் திட்டமும், 1998-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு எளிதாகக் கடன் வழங்கும் கிசான் கடன் அட்டை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியில் புதிய புரட்சியை ஏற்படுத்தின.

மத்திய அரசால் 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன் தன் திட்டம், அனைவரையும் உள்ளடக்கிய நிதிக் கட்டமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்தியதோடு, ஜன் தன்-ஆதார்-மொபைல் (ஜாம் சங்கமம்) தொழில்நுட்பக் கட்டமைப்பின் மூலம் அரசின் நேரடிப் பலன் பரிமாற்றச் சேவைகள் மிகவும் வெளிப்படையான முறையில் மக்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 58.63 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு, 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது. இதில் 55.7 சதவீதக் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கிராமப்புறங்களில் பிணையில்லாக் கடன்களை வழங்கி சுயவேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், 2015-ம் ஆண்டு முத்ரா திட்டம் கொண்டு வரப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வணிகரீதியான வங்கிகள் தங்களின் ஒட்டுமொத்தக் கடன்களில் 18 சதவீதத்தை விவசாயத் துறைக்குக் கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசின் தொடர் கொள்கை நடவடிக்கைகளால் 2014-15 நிதியாண்டில் 8 லட்சம் கோடி ரூபாயாக இருந்த விவசாயக் கடன் இலக்கு, தற்போதைய 2025-26 நிதியாண்டில் 32.50 லட்சம் கோடி ரூபாயாகப் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்பிடித் தொழில்துறைகளுக்கு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வட்டி சலுகைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுவதோடு, கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அத்துடன் பிணையில்லா விவசாயக் கடன்களுக்கான வரம்பு 1.6 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 61,842 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் தேசிய மென்பொருள் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதோடு, 100 பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்தப் பிரதமரின் தான் தான்ய வேளாண் திட்டம் 2025 ஜூலையில் தொடங்கப்பட்டுத் தற்சார்பு கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159222&ModuleId=3&reg=3&lang=1

****

TV/PD

(Explainer ID: 159237) आगंतुक पटल : 9
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Kannada , Malayalam