Economy
இந்தியாவின் திறன் மேம்பாட்டுச் சூழலை மேம்படுத்துதல்
Posted On:
15 JUL 2026 5:21PM
2047-ம் ஆண்டிற்குள் தற்சார்பு மிக்க வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை அடைய திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவது அவசியமாகும். இதற்காகக் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய அணுகுமுறையை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. சர்வதேசத் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாட்டின் இளைஞர்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயார்படுத்தும் நோக்கில் கொள்கைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புத் திறன் 2020-ம் ஆண்டில் 46 சதவீதத்தில் இருந்து, 2026 ஜனவரி நிலவரப்படி 56.4 சதவீதமாக உயர்ந்துள்ளதை சமீபத்திய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆரம்பக் கல்வி முதலே தொழில்முறைத் திறன்களை வளர்க்கும் நோக்கில் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் 25,140 பள்ளிகளில் 138 வகையான தொழில்முறைப் பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு, 35.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். பள்ளிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஜவஹர் நவோதயா பள்ளிகள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1,200 தொழிற்திறன் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 13,092 பள்ளிகள் முன்மாதிரி கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், மாணவர்களிடம் புத்தாக்கச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் 10,000-க்கும் மேற்பட்ட அடல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, 1.1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் தொழில்முறைத் திறன்களைத் தொடர்ந்து புதுப்பிப்பதில் திறன் இந்தியா இயக்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 மூலம் இதுவரை 738 மாவட்டங்களில் 28.17 லட்சம் இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, வேளாண்மை உள்ளிட்ட 36 முக்கியத் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எளிய மக்களுக்கும் பழங்குடியினருக்கும் சமூக அடிப்படையிலான திறன் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் பலன் பெற்றவர்களில் 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் பழங்குடியினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 'கற்கும்போதே வருமானம் ஈட்டும்' புதிய உத்தியைப் பின்பற்றி 54.41 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்பழகுநர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிற்பயிற்சி நிலையங்களை நவீனமயமாக்குவதற்காகப் பிரதமரின் சேது திட்டம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒடிசா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாரம்பரியக் கைவினைக்கலைஞர்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 24.50 லட்சத்திற்கும் அதிகமான கைவினைக்கலைஞர்கள் அடிப்படைத் திறன் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, 5,165.84 கோடி ரூபாய் அளவிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க கிராமப்புறங்களில் கல்லூரிப் பெண்களுக்காக 25 செயற்கை நுண்ணறிவுச் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் ஜூன் 2025-ல் தொடங்கப்பட்ட 'நவ்யா' திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சர்வதேசக் கூட்டாண்மை நடவடிக்கைகள் ஆகியவை தற்சார்பு மிக்க, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த மனிதவளத்தை உருவாக்கி நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாகத் திகழ்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159219&ModuleId=3®=3&lang=1
****
TV/PD
(Explainer ID: 159224)
आगंतुक पटल : 16
Provide suggestions / comments