Economy
இந்தியாவின் பொம்மைகள் தயாரிப்புச் சூழலை வலுப்படுத்துதல்: உள்நாட்டுக் கைவினைத்திறன் முதல் உலகளாவிய சந்தை வரை
Posted On:
07 JUL 2026 5:38PM
இந்தியாவின் பொம்மைகள் தயாரிப்புத் தொழில் கலாச்சாரப் பாரம்பரியம், புத்தாக்கம், உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறது. சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட உள்நாட்டுப் பொம்மைகள், இன்றும் கைவினைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், கைவினைத்திறனை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை, வருமான உயர்வு, கல்வி நடவடிக்கைகள் சார்ந்த பொம்மைகளுக்கான தேவை ஆகியன இத்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம், சர்வதேச கண்காட்சிகள், 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' போன்ற மத்திய அரசின் முயற்சிகள் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தியுள்ளன. மேலும், புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் பலனாக, பொம்மைகளை இறக்குமதி செய்யும் நிலையிலிருந்து, தற்பொழுது ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொம்மைத் தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒட்டுமொத்த பொம்மை ஏற்றுமதி 2017-18-ம் ஆண்டில் 152.7 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, 2025-26-ம் ஆண்டில் 384.7 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக மின்னணு, மின்னணு அல்லாத பொம்மைகளின் ஏற்றுமதி 77.35 மில்லியன் டாலரிலிருந்து 200.89 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இந்தியப் பொம்மைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே வேளையில், பாரம்பரியம், கல்வி சார்ந்த பொம்மைகளின் இறக்குமதி 66 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதன் காரணமாக 2025-26 நிதியாண்டில் இந்தியா 152 மில்லியன் டாலர் வர்த்தக உபரியை எட்டியுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2018-19-ம் ஆண்டில் 8,685 ஆக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் பல மடங்கு உயர்ந்து, 17,693 ஆக உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 2020-ம் ஆண்டில் தரக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி, பிஐஎஸ் சான்றிதழைக் கட்டாயமாக்கியது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கைவினைக்கலைஞர்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு இந்த சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து தற்பொழுது 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாக்கத்தை ஊக்குவிக்க 'டாய்கத்தான்' போட்டிகள் நடத்தப்படுவதோடு, மின்னணு பொம்மைத் தொழிலை வலுப்படுத்த நொய்டாவில் 'இ-பொம்மைகள் ஆய்வகம்' ஆராய்ச்சி மையமும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றுடன், புதுதில்லியில் ஜூலை 4 முதல் 7 வரை நடைபெற்ற 'டாய் பிஸ்' சர்வதேச கண்காட்சி உலகளாவிய வணிகத் தொடர்புகளுக்கு வழிவகை செய்துள்ளது. கர்நாடகாவின் சன்னப்பட்னா பொம்மைகள், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தோல் பொம்மைகள், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள் பிராந்திய அடையாளங்களுடன் சர்வதேச சந்தையில் விற்கப்படுகின்றன. பொம்மைகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதும், பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் இத்துறையை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159130&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 159135)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments