• Sitemap
  • Advance Search
Economy

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிதிசார் உள்ளடக்கத்தை உறுதிசெய்தல்

Posted On: 13 MAY 2026 11:07AM

டிஜிட்டல் பொருளாதாரத்தில் நிதிசார் உள்ளடக்கத்தை மறுவடிவமைத்தல்

வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால், இந்தியாவின் நிதிசார் உள்ளடக்கம் நோக்கிய பயணம் ஒரு முன்மாதிரியான மாற்றத்தைக் கண்டு வருகிறது. அடிப்படை வங்கிச் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகத் தொடங்கிய இந்நடவடிக்கை, தற்போது அறிவுசார்ந்த, உள்ளடக்கிய, நிகழ்நேர நிதிச் சேவைகளை அளவிடக்கூடிய வகையில் வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு தொழில்நுட்பத் தலைமையிலான சூழல் அமைப்பாக பரிணமித்துள்ளது. பரந்த டிஜிட்டல் தடயங்கள், மேம்பட்ட பகுப்பாய்வுகள், ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நிதிச் சேவைகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் முறையை செயற்கை நுண்ணறிவு மாற்றியமைக்கிறது - இது செயல்திறனை மேம்படுத்தி வரம்பை விரிவுபடுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட நிதிசார் தீர்வுகளைச் சாத்தியமாக்குகிறது.

இந்த மாற்றம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், பெண்கள் ஆகியோரால் வழிநடத்தப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிதிச் சேவைகள் சரிவரக் கிடைக்காத, "புதிதாகக் கடன் பெறும்” பிரிவினரிடையே குறிப்பாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தகவல் சமச்சீரற்ற முறையில் கிடைப்பதைக் குறைப்பதன் மூலமும், பாரம்பரியக் கடன் மதிப்பீட்டு மாதிரிகளைக் கடந்து செயல்படுவதன் மூலமும், செயற்கை நுண்ணறிவு முறைசார்ந்த நிதியுதவிக்கான வழிகளைத் திறக்கிறது. அத்துடன் இடர் மேலாண்மையை வலுப்படுத்தி, நிதி மீள்தன்மையை மேம்படுத்துகிறது. இந்தியா டிஜிட்டல் முறையிலான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் வேளையில், செயற்கை நுண்ணறிவு நிதிசார் உள்ளடக்கத்தை முடுக்கிவிடுவது மட்டுமல்லாமல், நிதிச் சூழல் அமைப்பை அதிக பதிலளிக்கக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் மறுவடிவமைப்பு செய்து வருகிறது.

நிதிப் பயன்பாட்டை மாற்றியமைக்கும் டிஜிட்டல் தீர்வுகள்: நிதிசார் உள்ளடக்கம் என்பது நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் ஈட்டுவோர் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, சரியான நேரத்தில், போதுமான, மலிவு விலையிலான கடன்களுடன் கூடிய நிதிச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் செயல்முறையாகும். இந்தியாவில், இது கொள்கை இலக்கிலிருந்து டிஜிட்டல்-முன்னெடுப்பு என்ற யதார்த்தமாக மாறியுள்ளது. கடந்த தசாப்தத்தில், ஒன்றோடொன்று இயங்கக்கூடிய டிஜிட்டல் தளங்களின் தொகுப்பானது, நிதிப் பயன்பாட்டைக் கொள்கை என்ற நிலையிலிருந்து அளவிடக்கூடிய, தொழில்நுட்பம் சார்ந்த யதார்த்தமாக மாற்றியுள்ளது.

இந்த மாற்றம் அடையாளச் சரிபார்ப்பு, தடையற்ற கட்டணப் பரிமாற்றங்கள், நேரடிப் பணப்பரிமாற்றம் ஆகியவற்றைச் சாத்தியமாக்கும் அடிப்படை அமைப்புகளில் உறுதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் புவியியல் எல்லைகளைக் கடந்து நிதிச் சேவைகள் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், மலிவானதாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இணைந்து, கடைக்கோடி சாமனியரையும் இணைக்கும் எதிர்காலக் கண்டுபிடிப்புகளையும் ஆதரிக்கும் ஒரு ஒருங்கிணைந்த சூழல் அமைப்பின் முதுகெலும்பாக விளங்குகின்றன.

நிர்வாகம், பரிவர்த்தனை, சேவைகள் வழங்குதல் ஆகியவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா டிஜிட்டல் நடைமுறைகளின் பயன்பாட்டாளர் என்பதிலிருந்து மக்கள் தொகைக்கு ஏற்ப அளவை உயர்த்தும் சிற்பியாக விளங்குகிறது. உலக நாடுகள் நம்பிக்கையான அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வழிமுறைகளை ஆராய்ந்து வரும் நிலையில், இந்தியாவின் அனுபவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாற்றம் ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. அடையாளம் காணுதல், வங்கி நடைமுறை, இணைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் அதற்கு காலூன்றப்பட்டது. இது ஜன்தன், ஆதார், செல்பேசி என்ற மும்முனை கருவியாக மாற்றம் பெற்றது. 2026 மார்ச் நிலவரப்படி 144 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போல் 2015-ல் 14.72 கோடியாக இருந்த ஜன்தன் கணக்குகள் 2026 மார்ச் நிலவரப்படி 57.71 கோடியாக அதிகரித்துள்ளது. வைப்புத் தொகையின் அளவு இந்தக் காலக்கட்டத்தில் 15,670 கோடி ரூபாயிலிருந்து 2.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பயனாளிகளுக்கு 39.18 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. செல்பேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2025 டிசம்பர் இறுதியில் 125.87 கோடியை எட்டியுள்ளது.

பணபரிவர்த்தனைக்கான யுபிஐ பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஜனவரி 2026-ல் யுபிஐ மூலம் 28.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 21.70 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. உலகின் மிகப் பெரிய அதிவிரைவான பணபரிவர்த்தனை நடைமுறையாக சர்வதேச செலாவணி நிதியத்தால் ஜூன் 2025 அறிக்கையில் யுபிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொது நிதிநிர்வாக முறை, டிஜிட்டல் வணிகத்திற்கான திறந்தநிலை வலைப்பின்னல், அரசு இ-சந்தை, டிஜி லாக்கர், புது யுக நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த செல்பேசி பயன்பாடு (உமாங்), இ-நீதிமன்றங்கள், இ-சஞ்சீவனி, ஆரோக்கிய சேது, பிரதமரின் கதி சக்தி போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கின்றன.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பயன்பாட்டுக்காக பிப்ரவரி 2026 நிலவரப்படி அர்மீனியா, சுரிநாம், பப்புவா நியுகினியா, கென்யா, கியூபா, கொலம்பியா, இலங்கை, பிரேசில், மாலத்தீவுகள், மலேசியா உள்பட 24 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூடான், இலங்கை, பிரான்ஸ், மொரிஷியஸ், கத்தார் ஆகிய எட்டு நாடுகள் யுபிஐ பணபரிவர்த்தனை முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடனான இந்தியாவின் பயணம் டிஜிட்டல் யுகத்தில் வளர்ச்சியும் நிர்வாகமும் அடைந்து வரும் விரிவான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158599&ModuleId=3&reg=3&lang=1

***

PD

(Explainer ID: 158929) आगंतुक पटल : 16
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam