• Sitemap
  • Advance Search
Rural Prosperity

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார சட்டம், 2025

Posted On: 11 MAY 2026 11:49AM

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் (கிராமங்கள்) உத்தரவாதச் சட்டம், 2025" கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 2005-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.

ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 100 நாட்கள் வேலை உத்தரவாதம் இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் ஊதிய வேலைவாய்ப்பாக மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார ஆதாரங்கள், பேரிடர் மேலாண்மைக்கான நிரந்தரச் சொத்துகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இச்சட்டம் கவனம் செலுத்துகிறது. நிர்வாக ரீதியாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பயோமெட்ரிக் அங்கீகாரம், ஜியோ-டேக்கிங், டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஊதியம் நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மாற்றப்படும். அதே நேரத்தில், பயிர் நடுதல், அறுவடை காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மாநில அரசுகள் ஆண்டுக்கு 60 நாட்கள் வரை இந்த வேலைகளுக்கு இடைவெளி விட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இத்திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாகும். மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "கண்ணியமான வேலைவாய்ப்பு" என்ற கொள்கையின் அடிப்படையில் வேலை நடைபெறும் இடங்களில் சுத்தமான குடிநீர், நிழற்குடைகள், முதலுதவி வசதிகள் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள பெண்கள் வேலை செய்யும் இடங்களில் குழந்தைப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இச்சட்டம் கிராமப்புற இந்தியாவை நவீன, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட பணிகளின் வரம்பு: கிராமப்புற வளர்ச்சிக்கு புதிய உத்வேகம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதாரச் சட்டம், 2025-ன் கீழ், பணிகளின் வரம்பு கணிசமாக விரிவுபடுத்த்ப்பட்டு, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நான்கு முக்கிய கருப்பொருள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு, தீவிர வானிலை நிகழ்வுகளைத் சமாளிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள். இது திட்ட அமலாக்கத்தில் முடிவுகளை நோக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் சாத்தியமாக்குகிறது.

இச்சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகள், உழைப்பு சார்ந்த செயல்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், கிராமப்புற வாழ்க்கைத் தரத்தை நேரடியாக மேம்படுத்தும் பல்வேறு பணிகளையும் உள்ளடக்கியுள்ளன. அதே வேளையில், இவை கூடுதல் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் நீடித்த சொத்துகளை உருவாக்குகின்றன. இந்த அணுகுமுறை, தொழிலாளர்கள் வளர்ச்சிச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்கும் "வேலைவாய்ப்புடன் கூடிய கண்ணியம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாள் வேலைவாய்ப்பும் நிலையான கிராமப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யும் வகையில், பணிகளுக்கு கருப்பொருள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தண்ணீர் பாதுகாப்பு:

கிராமப்புறப் பகுதிகளில் நீண்ட கால நீர் மேலாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பாசன ஆதரவு, நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள், நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு, நீர்நிலைகளுக்குப் புத்துயிரூட்டுதல், காடுகள் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் போன்ற பணிகள் இதில் அடங்கும்.

கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு:

கிராமப்புறச் சாலைகள், பொதுக் கட்டடங்கள், பள்ளிக் கல்வி உள்கட்டமைப்பு, அங்கன்வாடி மையங்கள், சுகாதார கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு, வீட்டுவசதி சார்ந்த பணிகள் ஆகியவையும், பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளும் இதில் அடங்கும். இவை அடிப்படை வசதிகளும் பொதுச் சேவைகளும் மக்களுக்கு எளிதில் கிடைப்பதற்கு வழிவகுக்கின்றன.

வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு:

கிராமப்புறச்சந்தைகள், சேமிப்புக்கான கட்டமைப்பு, உணவு பதப்படுத்தும் பிரிவுகள், குளிர்பதனச் சேமிப்பு வசதிகள், கால்நடைகள், மீன்வள மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பு, உரத் தயாரிப்பு அலகுகள் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள், உள்ளூர் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், கிராமப்புற மக்களின் வருவாயைப் பெருக்குவதற்கும், விவசாயம் சார்ந்த பொருளாதாரச் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணித்தல் மற்றும் காலநிலை மீள்தன்மை:

இந்தக் கட்டமைப்பு தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கும் காலநிலை மீள்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. இதில் வெள்ள மேலாண்மைக் கட்டமைப்புகள், கரை அமைப்புகள், புயல் பாதுகாப்பு மையங்கள், பேரிடருக்குப் பிந்தைய சீரமைப்பு, காட்டுத் தீ மேலாண்மைப் பணிகள் ஆகியவை அடங்கும்.

இந்தக் கருப்பொருள் அணுகுமுறையின் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு என்பது நிலையான சொத்துகள் உருவாக்கம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, மீள்தன்மை ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரித்து, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மேம்பட்ட சேவைகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்கிறது. இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், வருவாய் ஆதாரங்களும் அதிகரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158510&ModuleId=3&reg=3&lang=1

***

PD

(Explainer ID: 158928) आगंतुक पटल : 84
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam