Social Welfare
சோம்நாத்: இந்தியாவின் அழிவில்லா பேரொளி
பக்தி, வீரம், கலாச்சாரத் தொடர்ச்சியின் 75 ஆண்டுகள் நிறைவின் கொண்டாட்டம்
Posted On:
08 MAY 2026 6:05PM
இந்தியாவின் மிகப்புனிதமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான சோம்நாத், சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானதாகும். குஜராத்தின் சௌராஷ்டிரா கடற்கரையில் பிரபாஸ் படான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், பக்தி, மீள்திறன், நாகரீகத் தொடர்ச்சியின் காலத்தால் அழியாத அடையாளமாகத் திகழ்கிறது. கி.பி. 1026 முதல் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு முறையும் பக்தர்களாலும் அரசர்களாலும் சோம்நாத் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் இழந்த பெருமை மீட்டெடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1951-ல் தேசியத் தலைமையின் கீழ் மறுவடிவம் பெற்ற சோம்நாத் ஆலயத்தின் மறுசீரமைப்பு, இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
சோம்நாத் சுவாபிமான் பர்வ் (மரியாதை திருவிழா)
தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'சோம்நாத் சுவாபிமான் பர்வ்' இரண்டு முக்கிய வரலாற்று மைல்கற்களை ஒருங்கிணைக்கிறது:
- கி.பி. 1026-ல் இந்த ஆலயத்தின் மீது முதன் முதலாக தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் நிறைவடைதல்.
- சுதந்திரத்திற்குப் பிறகு, 1951-ம் ஆண்டு மே மாதத்தில் இந்த ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டுகள் நிறைவு.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவருமான பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 11-ம் தேதியன்று சோம்நாத் ஆலயத்திற்கு நேரில் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கிறார். மேலும், ஆலயத்தின் பெருமையை உலகறியச் செய்ய அடுத்த 1,000 நாட்களுக்கு சோம்நாத்தில் சிறப்பு வழிபாடுகள் (பூஜைகள்) நடத்தப்படவுள்ளன.
வரலாற்றுத் தடம் மற்றும் மறுசீரமைப்பு
சோம்நாத்தின் தோற்றம் பண்டைய இந்திய மரபுகளுடனும் சந்திர பகவான் (சந்திரன்) வழிபாட்டுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. வரலாற்று ரீதியாக, 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த ஆலயம் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளானது. எனினும், ஒவ்வொரு தாக்குதலுக்கு பிறகும் 12-ம் நூற்றாண்டில் அரசர் குமாரபாலன், 13-ம் நூற்றாண்டில் ஜூனாகத் அரசர், 18-ம் நூற்றாண்டில் இந்தூரின் மராட்டிய ராணி லோகமாதா அகில்யாபாய் ஹோல்கர் ஆகியோர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்தனர்.
மேலும், ஆலயத்தைப் பாதுகாக்கும் போரில் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த பிராந்திய வீரன் 'வீர் ஹமீர்ஜி கோஹில்' (கி.பி. 1299 ஜாபர் கானின் படையெடுப்பின் போது) போன்ற தியாகிகளின் வீர வரலாறு இன்றும் மக்களின் நினைவலைகளில் ராஜதர்மத்தின் (புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் கடமை) சான்றாக வாழ்ந்து வருகிறது.
சுதந்திரத்திற்குப் பின், 1947-ல் சோம்நாத் சிதிலங்களை பார்வையிட்ட சர்தார் வல்லவ்பாய் படேல், இந்தியாவின் கலாச்சார நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த ஆலயத்தை மறுசீரமைக்க சபதம் ஏற்றார். அதன்படி, பொதுமக்களின் பங்களிப்புடன் 'கைலாஷ் மகாமேரு பிரசாத்' கட்டிடக்கலை பாணியில் இந்த புதிய ஆலயம் கட்டப்பட்டது. 1951 மே 11 அன்று, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் இந்த ஆலயம் முறைப்படி தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவர் சோம்நாத்தை இந்தியாவின் ஆன்மீக பலம் மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் சின்னம் என்று வர்ணித்தார்.
ஆலயத்தின் பிரம்மாண்டமும் உயிர்ப்போடிருக்கும் பாரம்பரியமும்
அரபிக் கடலோரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சோம்நாத் ஆலய வளாகம் கர்ப்பக்கிருகம், சபா மண்டபம், நிருத்திய மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஆலயம் 150 அடி உயர சிகரத்தையும், அதன் உச்சியில் 10 டன் எடையுள்ள கலசத்தையும் கொண்டுள்ளது. மேலும், இங்குள்ள 27 அடி உயர கொடிமரம், தங்கமுலாம் பூசப்பட்ட 1,666 கலசங்கள், 14,200 துவாஜங்கள் (கொடிகள்) ஆகியவை பக்தர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. ஆண்டுதோறும் 92 முதல் 97 லட்சம் வரையிலான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இங்கு நடத்தப்படும் முப்பரிமாண (3D) லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய 'ஒளி மற்றும் ஒலி காட்சி', 'வந்தே சோம்நாத் கலா மகோத்சவம்' போன்ற கலை விழாக்கள் ஆலயத்தின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கின்றன.
சமூக நலன், சுற்றுச்சூழல், மகளிர் மேம்பாடு
ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை ஆன்மீகப் பணியோடு மட்டுமல்லாமல் விரிவான சமூக நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது:
- கல்வி மற்றும் திறன் மேம்பாடு: கணினி கல்வி, தையல் கலை, டிஜிட்டல் அறிவு போன்ற வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்களுக்காக 'நடமாடும் பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- சுகாதாரம் மற்றும் உணவு தானம்: ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா பிசியோதெரபி, பல் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, தினசரி அன்னதானத் திட்டமும் தடையின்றி நடைபெறுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அறக்கட்டளை சார்பில் ரூ. 11 கோடிக்கும் அதிகமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
- சுற்றுச்சூழல் மேலாண்மை: 2018-ல் 'தூய்மையான வழிபாட்டுத் தலம்' (Swachh Iconic Place) என அறிவிக்கப்பட்ட சோம்நாத்தில், பூக்கள் மூலம் மண்புழு உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து நடைபாதைகள் அமைத்தல், மியாவாக்கி காடுகள் வளர்ப்பு போன்ற பசுமைசார் உத்திகள் பின்பற்றப்படுகின்றன.
- மகளிர் மேம்பாடு: அறக்கட்டளையின் மொத்த ஊழியர்களான 906 பேரில் 262 பேர் பெண்கள் ஆவர். பில்வ வனம் முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. பிரசாத விநியோகத்திலும் சமையல் கூடங்களில் பல்வேறு பணிகளிலும் பெண்கள் ஈடுபட்டு, ஆண்டுதோறும் சுமார் ரூ. 9 கோடி வருவாய் ஈட்டி பொருளாதாரத் தற்சார்பு அடைந்துள்ளனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், வளர்ச்சியும் பாரம்பரியமும் (விகாஸ் பி விராசாத் பி) என்ற அணுகுமுறையோடு சோம்நாத் இன்று புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளுக்கு அஞ்சாத இந்தியாவின் அசைக்க முடியாத ஆன்மீக பலத்திற்கு சான்றாக விளங்கும் சோம்நாத், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது இந்தியாவின் தேசியப் பெருமை மற்றும் கலாச்சார விழிப்புணர்வின் வாழும் சாட்சியமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158477&ModuleId=3®=3&lang=1
***
SS/PD
(Explainer ID: 158926)
आगंतुक पटल : 67
Provide suggestions / comments