Infrastructure
மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம்: இந்திய ரயில்வே நவீனமயமாக்கலின் புதிய மைல்கல்
Posted On:
12 JUN 2026 5:04PM
இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் வழித்தடமான மும்பை அகமதாபாத் திட்டம் தேசத்தின் ரயில்வே நவீனமயமாக்கலில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக விளங்குகிறது. நகரங்களுக்கு இடையிலான அதிவேகப் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு ரயில்வே உட்கட்டமைப்புத் திறன்களை வலுப்படுத்துவதை இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் இந்த 508 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக வழித்தடம், உயர்மட்ட பாலங்கள், சுரங்கப்பாதைகள், நவீன மின்சார விநியோக கட்டமைப்புகளுடன் அதிவேகப் பயணிகள் போக்குவரத்தை ஒருங்கிணைக்கிறது. இந்தத் திட்டம் இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பது மட்டுமின்றி, தொழில்நுட்ப நிபுணத்துவம், தொழில்துறை உற்பத்தித் திறன், நிறுவன அறிவுத்திறன் ஆகியவற்றைத் தேசிய அளவில் மேம்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் நாடு முழுவதும் அதிவேக ரயில் வழித்தடக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இத்தகைய உள்நாட்டுத் திறன்கள் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்புகளில் ஒன்றாகத் திகழும் இந்திய ரயில்வே, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், சந்தைகள், கல்வி, அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாகப் சேவையாற்றி வருகிறது. மாறிவரும் நகர்ப்புறச் சூழல், முக்கியப் பொருளாதார மையங்களின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதி, பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்த அதிவேக ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. சாதாரண ரயில்களின் அதிகபட்ச வேகத்தை விட பல மடங்கு கூடுதலாக, வடிவமைக்கப்பட்ட வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் மற்றும் செயல்பாட்டு வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் கொண்டதாக இது அமையவுள்ளது. இதன் மூலம் மும்பை முதல் அகமதாபாத் இடையேயான ஒட்டுமொத்தப் பயண நேரம் சுமார் 1 மணி நேரம் 58 நிமிடங்களாகக் குறையும்.
இத்திட்டம் இந்தியாவின் முதலாவது உள்நாட்டு அதிவேக ரயில் கட்டமைப்பை உருவாக்குகிறது. ஜப்பானிய ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, நில அதிர்வு கண்டறிதல், தானியங்கி மழைக்காலக் கண்காணிப்பு போன்ற உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் தானே விரிகுடாப் பகுதியில் இந்தியாவின் முதலாவது கடலுக்கடியிலான ரயில் சுரங்கப்பாதை சுமார் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிநவீன இயந்திரங்கள் மூலம் வெற்றிகரமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி மலைப் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 4,000 வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 40,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. வதோதராவில் உள்ள அதிவேக ரயில் பயிற்சி நிறுவனம் உள்நாட்டுப் பொறியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மத்திய பட்ஜெட் 2026-27-ல், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தகைய நவீன உத்திகள் இந்தியாவின் நீண்டகாலப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், ஒட்டுமொத்தத் தேசத்தின் தொலைநோக்கு பார்வையை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158884&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 158898)
आगंतुक पटल : 24
Provide suggestions / comments