Social Welfare
தாய்சேய் நலனை உறுதிசெய்யும் பிரதமரின் மகப்பேறு பாதுகாப்புத் திட்டத்தின் பத்து ஆண்டுகால சாதனைகள்
Posted On:
08 JUN 2026 9:47PM
இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2016 ஜூன் 09 அன்று பிரதமரின் மகப்பேறு பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2026 ஜூன் 9-ம் தேதியுடன் பத்து ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு மாதமும் 9- ஆம் தேதியன்று கர்ப்பிணிகளுக்கு, குறிப்பாக இரண்டாவது, மூன்றாவது மாதக் காலப் பகுதியில் உள்ள பெண்களுக்கு, இலவசமான, தரமான பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்திலேயே மகப்பேறு அபாயங்களைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளித்து பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவில் மகப்பேறு கால மரணங்கள் பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தன. 2014-16 காலகட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு 130 ஆக இருந்த மகப்பேறு இறப்பு விகிதம், அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, 2022-24 காலகட்டத்தில் 87 ஆகக் குறைந்துள்ளது. இது ஆயிரக்கணக்கான தாய்மார்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதை உணர்த்துகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த விகிதத்தை 70-க்கும் கீழ் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் 7.50 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். மகப்பேறு மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, ஸ்கேன் போன்ற இன்றியமையாத மருத்துவப் பரிசோதனைகளும், ஊட்டச்சத்து ஆலோசனைகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிகளின் உடல்நிலையைக் கண்காணித்து, ஆபத்துகள் இல்லாத பெண்களுக்குப் பச்சை நிற முத்திரையும், அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்குச் சிவப்பு நிற முத்திரையும் தாய் சேய் பாதுகாப்பு அட்டைகளில் பதிக்கப்பட்டுத் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
அதிக ஆபத்துள்ள கர்ப்பிணி பெண்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க 2022 ஜனவரியில் மேம்படுத்தப்பட்ட விரிவான திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சமூகச் சுகாதார ஆர்வலர்கள் மூலம் பெண்கள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டு, பிரசவம் வரை கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தனியார் துறை மகப்பேறு மருத்துவர்களும் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்து தங்களது சேவைகளை வழங்கி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 9,243 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர், 22,349 அரசு மருத்துவ வசதி மையங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன.
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், ஜனனி சுரக்ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்ஷா திட்டம், சுமன் போன்ற பிற தாய் சேய் நலத் திட்டங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் தற்போது மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்கள் 90.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தரமான மருத்துவச் சேவைகள் சரியான நேரத்தில் பெண்களைச் சென்றடையும் போது, அது மகப்பேறுகாலச் சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறது என்பதற்கு இத்திட்டத்தின் பத்தாண்டுப் பயணம் ஒரு சிறந்த சான்றாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158825&ModuleId=3®=3&lang=1
***
TV/PD
(Explainer ID: 158895)
आगंतुक पटल : 27
Provide suggestions / comments