• Sitemap
  • Advance Search
Energy & Environment

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்: நம்பிக்கை, கட்டமைப்பு, மக்கள் நலனில் 12 ஆண்டுகால சாதனை

Posted On: 04 JUN 2026 12:49PM

கடந்த 12 ஆண்டுகளில் சிறந்த கொள்கைகள், தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழலில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. நம்பிக்கை, கட்டமைப்பு, மக்கள் நலன் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் நாட்டின் பசுமைப் புரட்சி விரிவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன், நிலைத்தன்மை ஆகியவற்றுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. வனப்பரப்பு அதிகரிப்பு, நீர்நிலைகள் மீட்பு, கழிவு மேலாண்மை, சர்வதேச தலைமைத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், அறிவியல் பூர்வமான திட்டமிடலின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காடுகளின் பங்கை உணர்ந்து பசுமை இந்தியா திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய வனங்கள் குறித்த அறிக்கையின்படி, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 25.17 சதவீதம், அதாவது 8.27 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள், மரங்கள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. காடுகளின் மூலம் கார்பன் சேமிப்புத் திறன் 30.43 பில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. நமாமி கங்கா திட்டத்தின் மூலம் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை இத்திட்டத்தின் கீழ் 355 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, நதியின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. தொழிற்சாலை கழிவுகள் நதியில் கலப்பது பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது. மிஷ்டி திட்டத்தின் மூலம் நாட்டின் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 4,992 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஈரநிலங்களின் எண்ணிக்கை 2014-ல் 26 ஆக இருந்த நிலையில், 2026-ல் 99 ஆக அதிகரித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா உலகளவில் முன்னோடியாகத் திகழ்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பு அதிகரிக்கப்பட்டதால் 2014-ல் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-ல் 3,682 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. சிவிங்கிப்புலிகள்  திட்டத்தின் கீழ் நமீபியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்து 891 ஆக பதிவாகியுள்ளது. யானைகள், பனிச்சிறுத்தைகள், காண்டாமிருகங்கள் பாதுகாப்பிலும் அறிவியல் பூர்வமான திட்டங்கள் சிறந்த பலன்களைத் தந்துள்ளன.

திடக்கழிவு மேலாண்மையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-ல் 17 சதவீதமாக இருந்த திடக்கழிவு பதப்படுத்தும் திறன், 2024-ல் 77 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தியாளர் பொறுப்புணர்வு கொள்கை மூலம் நெகிழி, பேட்டரிகள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்கு வலுப்பெற்றுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கார்பன் உமிழ்வைக் குறைத்த பெருமை இந்தியாவையே சேரும். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கம், சர்வதேச புலியினங்கள் கூட்டமைப்பு போன்ற முன்னெடுப்புகள் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது. பொருளாதார வளர்ச்சியோடு சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் இந்தியா உலகிற்கே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158761&ModuleId=3&reg=3&lang=1

***

SS/PD

(Explainer ID: 158852) आगंतुक पटल : 66
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam