• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவுடன் இணைந்து நடுக்கடலில் கடத்தப்பட்ட 4.9 கிலோ வெளிநாட்டு தங்கத்தை டிஆர்ஐ பறிமுதல் செய்தது

Posted On: 06 APR 2024 9:51AM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) மற்றும் சுங்கத் தடுப்பு பிரிவு (சி.பி.யூ), ராமநாதபுரம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில் 4.9 கிலோ வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது.

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக மீன்பிடி படகு மூலம் ஒரு கும்பல் இந்தியாவுக்கு வெளிநாட்டு தங்கத்தைக் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஏப்ரல் 3-ந்தேதி இரவில்  மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகுகளின் நடமாட்டத்தை டிஆர்ஐ மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கண்காணித்தனர். 4-ம் தேதி  அதிகாலையில், நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அடையாளம் கண்ட அதிகாரிகள், கடலோரக் காவல் படை  கப்பல் மூலம் அந்தப்படகைத் துரத்திச் சென்று இடைமறித்தனர். இடைமறிக்கப்படுவதற்கு சற்று முன்பு, சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த நபர்களில் ஒருவரால் ஒரு சரக்கு கடலில் வீசப்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர்.

அந்த நாட்டுப் படகில் மூன்று பேர் இருந்ததாகவும், விசாரணையின் போது கடலில் வீசப்பட்ட சரக்கு இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட வெளிநாட்டு தங்கம் என்றும், அது இலங்கையில் இருந்து ஒரு படகில் இருந்து ஆழ்கடலில் பெறப்பட்டது என்று அவர்கள் கூறியதாகவும் அதிகராகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ராமநாதபுரம் போலீசார் ஒரு படகில் வந்து கடத்தப்பட்ட தங்கத்தை கடலுக்குள் வீசிய இடத்தைக் கண்டுபிடித்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். 5ம் தேதி மதியம் கடத்தப்பட்ட தங்கம் கடற்பரப்பில் தீவிர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. கடலடியில் இருந்து மீட்கப்பட்ட சரக்கை திறந்து பார்த்தபோது, ரூ.3.43 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ எடையுள்ள கச்சா தங்கக் கட்டிகள் ஒரு துண்டில் இறுக்கமாக கட்டப்பட்டு , கண்டுபிடிக்க முடியாதபடி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.  அந்த  4.9 கிலோ வெளிநாட்டு கடத்தல் தங்கத்தை டி.ஆர்.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், 3 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    

***

SM/PKV/DL



(Release ID: 2017312) Visitor Counter : 43

Read this release in: English

Link mygov.in